மும்பை ரயில் நிலையத்தில் மழைக்காக காத்திருந்த மக்கள், மழை நின்றதும் அவசர அவசரமாக வெளியேறிய போது, ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி சுமார் 22 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும், 30-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.
மும்பை புறநகர் ரயில்வே மும்பையையும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளையும் ரயில் வழியில் இணைக்கிறது. நாள்தோறும் சுமார் 2,000 ரயில்களுக்கு மேல் இங்கு இயக்கப்படுகின்றன. மும்பையில் பிரதான போக்குவரத்து சேவையான இந்த ரயில் சேவையை நாளொன்றுக்கு பல லட்சம் மக்கள் பயன்படுத்துகின்றனர். உலகளவில் அதிக மக்கள் பயணிக்கும் போக்குவரத்து சேவையில் மும்பை ரயில் போக்குவரத்து சேவையும் முக்கிய அங்கம் வகிக்கிறது.
இந்நிலையில், மும்பையின் எல்பின்ஸ்டோன் ரயில் நிலையத்தில் மழைக்காக காத்திருந்த மக்கள், மழை நின்றதும் அங்கிருந்து அவசர அவசரமாக நடைபாதை மேம்பாலத்தில் முண்டியடித்துக் கொண்டு வெளியேறிய போது, ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி சுமார் 22 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும், 30-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.
படுகாயடைந்தவர்கள் அனைவரும் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக அஞ்சப்படுகிறது. மும்பையில் கனமழை பெய்து வரும் நிலையில், ஏற்பட்ட இந்த விபத்து அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.