மத்தியபிரதேச மாநிலத்தில் சிறுத்தையிடம் சிக்கிய பெண் ஒருவர், தன்னையும், தன் குழந்தையையும், அச்சிறுத்தையிடம் சுமார் அரை மணிநேரம் போராடி உயிர்பிழைத்த சம்பவம் அரங்கேறியுள்ளது.
மத்தியபிரதேச மாநிலம், மொரேனா மாவட்டத்திலுள்ள பாய்சாய் கிராமத்தை சேர்ந்தவர் ஆஷா (வயது 25). இவர், கடந்த 27-ஆம் தேதி அருகாமை கிராமத்திலுள்ள தன் பெற்றோர் வீட்டுக்கு செல்வதற்காக, குழந்தையுடன் வனப்பகுதி வழியாக சென்றுகொண்டிருந்தார்.
அப்போது அவ்வழியாக வந்த சிறுத்தை ஒன்று, அப்பெண் மீது திடீரென பாய்ந்து அவரை கீழே தள்ளியது. ஆனால், அப்பெண் துணிவுடன் எழுந்து, தன் குழந்தையை பிடித்துக்கொண்டு ஓட துவங்கினார். ஆனால், இம்முறை சிறுத்தை குழந்தையை பறிக்க முயன்றது. நல்ல வேளையாக, அப்பெண் சிறுத்தையின் கழுத்தை பிடித்தார்.
சிறுத்தை அப்பெண்ணின் கைகள், தோள்பட்டையில் அதன் நகங்களால் ஆழ்ந்த காயங்களை ஏற்படுத்தியது. ஆனாலும், அதன் கழுத்திலிருந்து அப்பெண் கையை எடுக்கவில்லை.
இதையடுத்து, அவரது அபாய சத்தத்தைக் கேட்டு அருகிலிருந்த கிராம மக்கள், சிறுத்தையை தாக்க ஆரம்பித்தனர். அதன்பின், அந்த சிறுத்தை அங்கிருந்து ஓடிவிட்டது. சிறுத்தையுடனான அப்பெண்ணின் போராட்டம் சுமார் அரை மணிநேரம் நீடித்தது.
அதன்பின், அப்பெண் அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். அந்த சிறுத்தையை தேடும் பணி நடைபெற்று வருவதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.