முந்தைய காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் திமுகவின் ஆ.ராசா மத்திய அமைச்சராக இருந்த போது, 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்ததாக ஆ.ராசா, தி.மு.க. எம்.பி. கனிமொழி மற்றும் சில நிறுவன நிர்வாகிகள் மீது குற்றம்சாட்டப்பட்டது.
இதைத் தொடர்ந்து, சிபிஐ 2009-ம் ஆண்டு அக்டோபர் 21-ம் தேதி, முதல் தகவல் அறிக்கையைப் பதிவுசெய்து, வழக்கு விசாரணையைத் தொடங்கியது. இந்த வழக்கு விசாரணை சி.பி.ஐ. தனிக்கோர்ட்டில் நீதிபதி ஓ.பி.சைனி முன்னிலையில் நடந்து வருகிறது. இதையடுத்து, 2010-ம் ஆண்டு நவம்பரில், ஆ.ராசா மத்திய அமைச்சர் பதவியிலிருந்து விலகினார். ராசா, கனிமொழி உள்ளிட்டோர் கைதுசெய்யப்பட்டு, பல மாதங்கள் திகார் சிறையில் அடைக்கப்பட்டனர்.
122 நிறுவனங்களுக்கு 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்ததில் மத்திய அரசுக்கு 30 ஆயிரத்து 984 கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாக சி.பி.ஐ. தனது குற்றப்பத்திரிக்கையில் குறிப்பிட்டு உள்ளது. இந்த வழக்கில் 154 சாட்சிகளை சி.பி.ஐ. விசாரணை செய்தது. குற்றம்சாட்டப்பட்டவர்கள் தரப்பில் 29 சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர்.
முன்னதாக, இந்த வழக்கு குறித்து பேட்டியளித்த ராசா, "1997 முதல் 2007-ம் ஆண்டு வரை தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்கள், 10 மெகா கெட்ஸ் அளவுக்கு செல்போன் சேவை அலைக்கற்றை வசதியை இலவசமாக பெற்று வந்தன. நான் மத்திய அமைச்சராக இருந்த காலக் கட்டத்தில், இந்திய செல்லூலார் ஆபரேட்டர் சங்க தலைவராக பார்தி ஏர்டேல் நிறுவனர் சுனில் பார்தி மிட்டல் பதவி வகித்தார்.
நான் மத்திய அமைச்சரான பிறகு தொலைத்தொடர்பு சேவை வழங்க, 4.4. மெகா ஹெர்ட்ஸ் வரை மட்டும் அலைக்கற்றை இலவசமாக பெற புதிய நிறுவனங்கள் முன் வந்தன. இதை பார்தி மிட்டலின் நிறுவனம் உள்ளிட்ட பழைய நிறுவனங்கள் விரும்பவில்லை. புதிய நிறுவனங்களுக்கு அலைக்கற்றையை இலவசமாக வழங்காவிட்டால் தொலை தொடர்பு சேவையில் போட்டி இருக்காது என்று இந்திய ஒழுங்கு முறை ஆணைய (டிராய்) பரிந்துரை செய்து இருந்தது. அதை செயல்படுத்தும் எனது முயற்சியை இந்திய செல்லூலார் ஆபரேட்டர்கள் சங்கம் (சி.ஓ.ஏ.ஐ.) எதிர்த்தது.
2 ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு விவகாரத்தில் மத்திய அரசுக்கு ரூ.1.76 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டதாக மத்திய தலைமை கணக்கு அதிகாரி மதிப்பிட்டதை பாராளுமன்றத்தின் பொது கணக்கு குழு மற்றும் சி.பி.ஐ. ஏற்கவில்லை. இந்த வழக்கு தொடர்பாக எனது வீட்டிலும், உறவினர்கள், நண்பர்கள் வீடுகளிலும் சி.பி.ஐ. சோதனை நடத்தியது. ஆனால், தவறாக வருமானம் வந்ததாக கூறி இதுவரை எந்த பணமும் பறிமுதல் செய்யப்படவில்லை. சி.பி.ஐ. மத்திய அமலாக்கத்துறை, வருமான வரித்துறை விசாரணையிலும் அப்படி எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை. தொலைத்தொடர்பு துறையில் புரட்சி ஏற்படுத்த முயன்றேன். அதற்காக குற்றவாளி போல சித்தரிக்கப்பட்டிருக்கிறேன்" என்றார்.
இந்நிலையில், கடந்த 8 வருடங்களாக நடந்து வரும் இந்த வழக்கின் தீர்ப்பு எப்போது வழங்கப்படும் என வழக்கறிஞர்கள் தரப்பில் இன்று கேட்கப்பட்டது. இதற்கு பதிலளித்த நீதிபதி ஓ.பி.சைனி, "2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் ஆகஸ்ட் 25-ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்படும். ஒருவேளை அது தாமதமானால், பத்து நாட்கள் கழித்து தீர்ப்பு வழங்கப்படும்" என பதிலளித்துள்ளார்.