500 இந்திய புலனாய்வு அதிகாரிகள் பணியிடை மாற்றம்... வழக்கமான செயலா அல்லது தேர்தலுக்கான ஏற்பாடா?

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் வேளையில் மத்திய புலனாய்வு அதிகாரிகள் 500 பேர் பணியிடை மாற்றம் செய்யப்பட்டது பெரும் சந்தேகத்தை எழுப்பியுள்ளது.

இந்தியாவின் நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் வேளையில் மத்திய புலனாய்வு அதிகாரிகள் 500 பேர் பணியிடை மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இச்செய்தி பெரும் சந்தேகத்தை எழுப்பியுள்ளது.

2019-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், மத்திய புலனாய்வு அமைப்பைச் சேர்ந்த அதிகாரிகள் 500 பேர் இந்தியாவின் முக்கிய நகரங்களுக்கு பணியிடை மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதில் குறிப்பாக தில்லி, அகமதாபாத், பெங்களுரு, போபால், புபனேஷ்வர், சண்டிகர், கௌஹாத்தி மற்றும் சென்னை ஆகிய நகரங்களுக்கு பணியிடை மாற்றம் செய்து அனுப்பி வைக்கப்பட உள்ளனர்.

இந்த மாற்றத்தின் முக்கிய அம்சமாக, புலனாவு அதிகாரிகளை ஒரு சில மாநிலத்தில் முக்கிய பொறுப்பில் அமர்த்த உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இதில் கர்நாடகம் மற்றும் தமிழகம் இடம் பெற உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும் இந்த மாற்றத்திற்கும் நடக்க இருக்கும் தேர்தலுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்று புலனாய்வு அமைப்பு தெரிவித்துள்ளது.

மேலும் ‘இந்த மாற்றம் வழக்கமாக நடைபெறுவது தான். பட்டியலில் உள்ள பலர் 20-25 ஆண்டுகளாக எந்த பணியிடை மாற்றத்தையும் சந்திக்காதவர்கள். எனவே தற்போது இதை நாங்கள் செய்துள்ளோம்.’ என அதிகாரிகள் கூறுகின்றனர்.

இவ்வளவு வருடங்களுக்குப் பிறகு தற்போது இத்தகைய மாபெரும் பணியிடை மாற்றம் நடைபெற்றுள்ளது அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. அத்துடன், அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ள நிலையில் 500 அதிகாரிகளை இடம் மாற்றம் செய்ய என்ன காரணம் என்றும் கேள்விகள் எழுந்து வருகின்றன. இருப்பினும் இது குறித்து எந்தக் கட்சியினரும் இதுவரை கருத்து தெரிவிக்கவில்லை என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும்.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest India news in Tamil.

×Close
×Close