2020-ல் நாட்டில் 5ஜி தொலைதொடர்பு தொழிற்நுட்ப சேவையை வழங்குவது குறித்து ஆலோசிக்க மத்திய அரசு உயர்மட்ட குழுவை அமைத்துள்ளது.
இது தொடர்பாக மத்திய தொலைத்தொடர்பு அமைச்சர் மனோஜ் சின்ஹா நேற்று (செவ்வாய்க்கிழமை) டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, "5ஜி தொலைத்தொடர்பு தொழிற்நுட்ப சேவையை இந்தியாவில் வழங்குவது தொடர்பாக நாங்கள் புதிதாக 5ஜி உயர்மட்ட ஆலோசனைக் குழுவை அமைத்துள்ளோம். இந்த குழுவானது 5ஜி உயர் தொழிற்நுட்ப சேவையை மக்களிடம் எடுத்துச் செல்வது, 5ஜி சேவைக்கான இலக்குகளை நிர்ணயிப்பது உள்ளிட்ட அம்சங்கள் குறித்து விரிவாக ஆலோசிக்கும். இதன்மூலம், 2020-ல் உலகம் முழுவதும் 5ஜி சேவை அமலாகும்போது இந்தியாவும் சர்வதேச நாடுகளுக்கு நிகராக அத்தொழில்நுட்பத்தை மக்களுக்கு வழங்குவதில் சிறந்து விளங்கும்" என்றார்.
இந்த 5ஜி உயர்மட்ட குழுவில் தொலைதொடர்பு துறை செயலாளர்கள், தகவல் தொழில்நுட்பத்துறை செயலாளர்கள், மின்னணு பொருட்கள் துறை செயலாளர்கள் மற்றும் அறிவியல் தொழில்நுட்பத்துறை செயலாளர்கள் இடம்பெற்றுள்ளனர்.
5ஜி தொழில்நுட்பம் தொடர்பான ஆய்வு பணிகளுக்காக ரூ.500 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும், நகர்ப்புறங்களில் விநாடிக்கு 10,000 மெகாபிட் என்ற அளவிலும், கிராமப்புறங்களில் விநாடிக்கு 1000 மெகாபிட்களும் என்ற அளவிலும் 5ஜி தொழில்நுட்பத்தை வழங்க அரசு திட்டமிட்டு வருவதாகத் தெரிகிறது.