scorecardresearch

இந்தியாவில் 5ஜி சேவை அறிமுகம்: நன்மைகள் என்ன?

இந்தியாவில் 5ஜி சேவையை பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைக்கிறார். 5ஜி சேவையின் நன்மைகள் என்ன, முதற்கட்டமாக எந்தெந்த நகரங்களில் அறிமுகப்படுத்தப்படுகிறது என்பது குறித்து இங்கு பார்ப்போம்.

இந்தியாவில் 5ஜி சேவை அறிமுகம்: நன்மைகள் என்ன?

இந்தியாவில் 5ஜி இணைய சேவையை பிரதமர் நரேந்திர மோடி இன்று (அக்டோபர் 1) தொடங்கி வைக்கிறார். டெல்லியில் நடைபெறும் இந்திய மொபைல் காங்கிரஸ் நிகழ்ச்சியில் அதிவேக இணைய வசதியை கொடுக்கும் 5ஜி சேவையை பிரதமர் தொடங்கி வைக்கிறார். 5 ஆண்டுகள் திட்டமிடுதலுக்குப் பிறகு இன்று இந்தியாவில் 5ஜி சேவை அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

5ஜி சேவை – இந்தியாவின் பயணம்

கடந்த 2017ஆம் ஆண்டு இந்தியாவில் 5ஜி சேவை கொண்டுவருவதற்கான ஆலோசனை நடத்தப்பட்டது. அந்த ஆண்டு மத்திய அரசு ஒரு உயர்மட்ட குழுவை அமைத்தது. 5ஜி சேவை கொண்டுவருவதற்கான நாட்டின் சாலை வரைபடத்தை மதிப்பீடு செய்ய தொழில்துறை, கல்வியாளர்கள், அரசு அதிகாரிகள் மற்றும் பிரதிநிதிகள் உள்ளடக்கிய குழு அமைக்கப்பட்டது. 4ஜி நெட்வொர்க்குகளிலிருந்து ஒரே மாதிரியான தன்மையைத் தடுக்க 5ஜிக்கு என உயர்தரத்துடன் சாலை வரைப்படத்தை வடிவமைப்பதை இந்த குழு நோக்கமாக கொண்டது.

ஸ்டான்போர்ட் பல்கலைக்கழக பேராசிரியர் ஏ.ஜே.பால்ராஜ் தலைமையிலான குழு, 2018இல் அறிக்கையை சமர்ப்பித்தது. அதில் ஸ்பெக்ட்ரம் கொள்கை, ஒழுங்குமுறை கொள்கை, அதன் ஆய்வுகள் குறித்து கூறப்பட்டிருந்தது. 5ஜி பயன்பாடுகளுக்கான ஆய்வு மற்றும் மேம்பாடு தொடர்ந்த போது, ​​ அரசாங்கம் டெலிகாம் ஆபரேட்டர்களுக்கு சோதனைகளை நடத்த ஸ்பெக்ட்ரம் ஒதுக்கியது. 2019இல் தகவல் தொலைத்தொடர்புத் துறை மற்றும் துறை ஒழுங்குமுறை ஆணையமான டிராய் (TRAI ) ஸ்பெக்ட்ரம் விலை நிர்ணயம் குறித்து ஆலோசித்தது. இறுதியாக இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் மத்திய அரசு 5ஜி ஸ்பெக்ட்ரம் ஏலத்தை நடத்தி முடித்தது.

எந்தெந்த நகரங்களில் 5ஜி சேவை தொடக்கம்?

பிரதமர் முதலில் எந்த நகரத்தில் 5ஜியை அறிமுகப்படுத்துகிறார் என்ற தகவலை அரசு வெளியிடவில்லை. இருப்பினும் தொலைதொடர்பு நிறுவனங்கள் தங்களது சேவையை திட்டமிட்டுள்ளன. 5ஜி அலைக்கற்றை ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் அதிகபட்சமாக ரூ.88,000 கோடிக்கு ஏலம் எடுத்தது. ஜியோ தனது 5ஜி சேவையை முதற்கட்டமாக டெல்லி, மும்பை, சென்னை, கொல்கத்தா போன்ற மெட்ரோ நகரங்களில் தீபாவளிக்குள் வழங்க திட்டமிட்டுள்ளது. ஏர்டெல் நிறுவனம், 2023ஆம் ஆண்டு இறுதிக்குள் நாட்டின் அனைத்து நகரங்களிலும் 5ஜி சேவை கிடைக்கும் எனத் தெரிவித்துள்ளது. மேலும், நகர்ப்புறம் மட்டுமல்லாது குறிப்பிட்ட கிராமப்புறங்களிலும் 5ஜி சேவை கிடைக்கும் எனத் தெரிவித்துள்ளது.

5ஜி நன்மைகள் என்ன?

தகவல் தொலைத்தொடர்புத்துறை அமைச்சகம் கூறுகையில், 5ஜி புதிய பொருளாதார வாய்ப்புகள் மற்றும் புதிய அனுபவங்களை கொடுக்கும். 5ஜியின் ஒட்டுமொத்த பொருளாதார தாக்கம், 2035ஆம் ஆண்டுக்குள் இந்தியா 450 பில்லியன் டாலர் பொருளாதாரத்தை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 4ஜியை விட 10 மடங்கு வேகமாக இருக்கும். தகவலை விரைந்து அனுப்பலாம், தாமதத்தை தவிர்க்கலாம். 4ஜி விநாடிக்கு 100 Mbps என்ற பேண்ட்வித் இருந்தது 5ஜி இணைய வேகம் 10 Gbps ஆக இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. 4ஜியில் 10-100 ms (மில்லி விநாடி) தாமதம் இருக்கும். அதே சமயம் 5ஜியில் இது 1 msக்கும் குறைவாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தாமதம் (shorter latency) குறைவாக இருந்தால், தகவலை விரைந்து அனுப்பி பதிலைப் பெற முடியும் என்று கூறப்பட்டுள்ளது.

புதிய தொழில்நுட்பத்தில் ஜியோ 5ஜி

5ஜி சேவையை தொலைத்தொடர்பு நிறுவனங்கள் 2 முறைகளில் பயன்படுத்த உள்ளன. ‘ஸ்டேண்ட்அலோன்’ (standalone)’நான் ஸ்டேண்ட்அலோன்’ (Non standalone) முறைகளில் பயன்படுத்த உள்ளன.

ஜியோ ஸ்டேண்ட் அலோன் முறையில் 5ஜி சேவையை அறிமுகப்படுத்துகிறது. அதாவது, பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட சாதனங்களில் 5ஜி சேவை வழங்கும். 4ஜி சேவையின் நேர்கோட்டில் செயல்படும். அதே சமயம் தனித்தன்மையுடன் உள்கட்டமைப்புகளை ஆதரிக்கிறது. அதனால் சேவைகளை விரைந்து கொடுத்த உதவுகிறது.

அதேசமயம் நான் ஸ்டேண்ட்அலோன் முறை இவ்வாறு இல்லை. நான் ஸ்டேண்ட்அலோன் நெட்வொர்க் ஏற்கனவே உள்ள உள்கட்டமைப்பில் கட்டமைக்கப்படுவதால் சேவைகளை வழங்க தாமதமாகிறது. நான் ஸ்டேண்ட்அலோன் முறையில் அனைத்து பகுதிகளுக்கும் சேவைகளை வழங்குவதில் தாமதம் ஏற்படும். ஸ்டேண்ட்அலோன் முறையை விட செலவு குறைவு. ஜியோ தனது 5ஜி ஸ்டேண்ட்அலோன் முறைக்கு ரூ.2 லட்சம் கோடி முதலீடு செய்துள்ளது. ஏர்டெல் நிறுவனம் நான் ஸ்டேண்ட்அலோன் முறையை தேர்வு செய்துள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest India news download Indian Express Tamil App.

Web Title: 5g services to be rolled out today how will your experience change