”பணியிடங்களில் 70% பெண்கள் பாலியல் துன்புறுத்தல்கள் குறித்து புகார் அளிப்பதில்லை”: மகளிர் ஆணையம்

தங்களுக்கு பணியிடங்களில் நேரிடும் பாலியல் துன்புறுத்தல்கள் குறித்து, 70 சதவீத பெண்கள் புகார் தெரிவிப்பதில்லை என தேசிய மகளிர் ஆணையம் தெரிவித்தது.

தங்களுக்கு பணியிடங்களில் நேரிடும் பாலியல் துன்புறுத்தல்கள் குறித்து, 70 சதவீத பெண்கள் புகார் தெரிவிப்பதில்லை என தேசிய மகளிர் ஆணையத்தின் உறுப்பினர் செயலர் சத்பீர் பேடி தெரிவித்தார்.

ஆந்திர மாநிலம் ஐதராபாத்தில், ‘பணியிடத்தில் பாலியல் வன்முறை (தடுப்பு,பாதுகாப்பு, குறைதீர்ப்பு) சட்டம், 2013’ குறித்து ஒருநாள் ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தை தெலங்கானா மாநில மகளிர் ஆணையமானது, தேசிய மகளிர் ஆணையத்துடன் இணைந்து நடத்தியது.

இதில், தேசிய மகளிர் ஆணையத்தின் உறுப்பினர் செயலர் சத்பீர் பேடி கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது, “70 சதவீத பெண்கள் பணியிடங்களில் தாங்கள் அனுபவிக்கும் பாலியல் துன்புறுத்தல்கள் குறித்து புகார் தெரிவிப்பதில்லை”, என தெரிவித்தார். மேலும், பெரும்பாலான பெண்கள் மற்றவர்களை மிரட்டுவதற்காக, சட்டத்தை தவறாக பயன்படுத்துகின்றனர் எனவும் கூறினார்.

பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்கள் மற்றும் சுரண்டல்களை தடுக்க சட்டங்கள் இருந்தும், அவை குறித்த விழிப்புணர்வை பெண்கள் மத்தியில் ஏற்படுத்துவது அவசியம் என சத்பீர் பேடி குறிப்பிட்டார்.

“பெண்களை பாலியல் துன்புறுத்தல்களில் இருந்து பாதுகாக்க ஏராளமான சட்டங்கள் மற்றும் திட்டங்கள் உள்ளன”, எனவும் சத்பீர் பேடி கூறினார்.

ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்டு முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.எத்திராஜூலு பேசியதாவது, “சட்டங்கள் இருந்தாலும் அவற்றை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பதில் தெளிவு வேண்டும். பெண் பணியாளர்கள் அனைவரும் ஒன்றிணைந்து பாலியல் துன்புறுத்தல்களுக்கு எதிராக போராட வேண்டும்”, என கூறினார்.

தெலங்கானா மாநில மகளிர் ஆணைய தலைவர் வெங்கடரத்னம், சட்டங்களை இன்னும் கடுமையாக்குவது குறித்த பரிந்துரைகளை மத்திய அரசுக்கு அனுப்ப கலந்தாலோசிக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

×Close
×Close