மத்திய அரசு ஊழியர்களுக்கு 17 சதவீதம் ஊதிய உயர்வு அளிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து, One India இணையத்தளம் வெளியிட்ட செய்தியின்படி, மத்திய அரசு ஊழியர்களின் குறைந்தபட்ச ஊதியம் ரூ.18,000-லிருந்து, ரூ.21,000-ஆக உயர்த்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மத்திய அரசு ஊழியர்களுக்கு 17 சதவீதம் ஊதிய உயர்வு அளிக்கப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. குறைந்தபட்ச ஊதியம் 21,000-ஆக உயர்த்தவுள்ள நிலையில், அடிப்படை சம்பளம் 2.57 மடங்கு என்றிருந்த நிலையில், 3 மடங்காக உயரும்.
இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. செப்டம்பர் மாதத்தில் ஏழாவது ஊதியக்குழு அளித்த பரிந்துரைகளை நடைமுறைபடுத்துவதில் உள்ள குறைபாடுகளை களைவதற்காக குழு ஒன்று அமைக்கப்பட்டது. 22 உறுப்பினர்கள் அடங்கிய இக்குழுவின் தலைவராக, இந்திய பணியாளர் மற்றும் பயிற்சி துறையின் செயலாளர் செயல்பட்டு வருகிறார். இந்த குழுவில், மத்திய அரசு அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் தரப்புகளின் பிரதிநிதிகளும் அடங்கியுள்ளனர். ரயில்வே வாரியம், தொலைத்தொடர்பு மற்றும் தபால் துறைகளின் செயலாளர்கள், நிதி ஆலோசகர், பாதுகாப்பு அமைச்சகம், நிதி அமைச்சகம் என பல்வேறு துறைகளிலிருந்தும் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், பணியாளர்கள் தரப்பில் 13 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மத்திய அரசு ஊழியர்களின் ஊதிய உயர்வு விவகாரம் தற்போது இந்த குழுவின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மற்ற வழக்கமான நடைமுறைகள் முடிந்தபின் ஊதிய உயர்வு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.