ஒருவரின் அந்தரங்கம் அடிப்படை உரிமையா? ஆதார் வழக்கில் இன்று விசாரணை

அரசின் சலுகைகளையும், நலத்திட்ட உதவிகளையும் பெறுவதற்கு ஆதார் அடையாள அட்டை அவசியம் என்று மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. இது தனி நபர்களை பற்றி தகவல்களை அம்பலப்படுத்துவதாக உள்ளது என்றும், இது தனிமனித உரிமை மற்றும் சுதந்திரத்திற்கு எதிரானது என்றும் சமூக ஆர்வலர்களால் குற்றம்சாட்டப்பட்டு வருகிறது.

ஆதார் அட்டைக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் பல்வேறு தரப்பினரும் வழக்குகளை தொடுத்து உள்ளனர். அவற்றில் வினய் விஸ்மான் மற்றும் மத்திய அரசு உள்ளிட்ட பல தரப்பினரின் வாதங்களை கேட்ட சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் ஏ.கே.சிக்ரி, அசோக் பூஷண் ஆகியோரைக் கொண்ட அமர்வு கடந்த மாதம் 9-ந் தேதி ஒரு தீர்ப்பு அளித்தது.

அந்த தீர்ப்பில், ‘பான்’ என்னும் வருமான வரி நிரந்தர கணக்கு எண் அட்டையுடன், ஆதார் எண்ணை இணைக்க வகை செய்யும் வருமான வரிச்சட்டத்தின் பிரிவு 139 ஏஏ செல்லுபடியாகும் என கூறியது.

இந்தநிலையில் ஆதார் அடையாள அட்டை, அரசியல் சாசனத்தின்படி செல்லுபடியாகாது என கூறி தொடுக்கப்பட்ட பல்வேறு தரப்பினரின் வழக்குகளை தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹர் தலைமையில் நீதிபதிகள் ஜே. செல்லமேஸ்வர், எஸ்.ஏ.பாப்டே, டி.ஒய்.சந்திரசூட், எஸ்.அப்துல் நசீர் ஆகியோரைக் கொண்ட அமர்வு நேற்று விசாரித்தது. முடிவில், ஒரு உத்தரவையும் பிறப்பித்தது.

அதில், உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான நமது நாட்டில், ஒருவரின் அந்தரங்க உரிமை, அடிப்படை மனித உரிமையா, இது அரசியல் சாசன கட்டமைப்பின் ஒரு அங்கமா என்பது குறித்து விசாரித்து முடிவு எடுக்க தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹர் தலைமையில் 9 நீதிபதிகளை கொண்ட அரசியல் சாசன அமர்வு அமைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்த அமர்வு, இன்று விசாரணை நடத்தும் என்றும் நீதிபதிகள் அறிவித்தனர்.

இது தொடர்பாக பிறப்பித்த உத்தரவில் தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹர், “இந்திய அரசியல் சாசனப்படி, அந்தரங்க உரிமை என்பது அடிப்படை உரிமையா என்பதை நாங்கள் நிர்ணயம் செய்ய வேண்டிய தேவை எழுந்துள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் நீதிமன்றத்தில் குறிப்பிடும்போது, “ஆதார் திட்டம் அரசியல் சாசனப்படி செல்லுபடி ஆகுமா என்பதை ஆராய்வதற்கு முன்பு, அந்தரங்க உரிமை என்பது அடிப்படை உரிமையா, இல்லையா என்பதை நாங்கள் முதலில் தீர்மானிக்க இருக்கிறோம்” என்று குறிப்பிட்டார்.

நீதிபதி ஜே.செல்லமேஸ்வர், “எழுத்து வடிவத்திலான அரசியல் சட்டத்தின் அடிப்படையில் உருவான குடியரசில், அந்தரங்க உரிமை என்பது அடிப்படை உரிமை அல்ல என்று கூறுவதை ஏற்பது கடினம். அந்தரங்கம் என்பது அடிப்படை உரிமை என்று சொல்லும் பல தீர்ப்புகள் உள்ளன. அவற்றை நாங்கள் புறக்கணித்து விட முடியாது” என கூறினார்.

அதே நேரத்தில் இந்த விவகாரத்தில் ஏற்கனவே, கரக் சிங், எம்.பி. சர்மா ஆகியோரின் வழக்குகளில் சுப்ரீம் கோர்ட்டு வழங்கிய தீர்ப்புகளும் ஆராயப்படும் என நீதிபதிகள் அறிவித்தனர். கரக்சிங் வழக்கில் 6 நீதிபதிகளைக் கொண்ட அமர்வு, 1960-களிலும், எம்.பி. சர்மா வழக்கில் 8 நீதிபதிகளைக் கொண்ட அமர்வு, 1950-ம் ஆண்டிலும் தீர்ப்பு வழங்கி உள்ளன. இவ்விரு வழக்குகளிலுமே அந்தரங்க உரிமை, அடிப்படை உரிமை அல்ல என்று தீர்ப்பு கூறப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் இதற்கு பிந்தைய பல தீர்ப்புகள், அந்தரங்க உரிமை அடிப்படை உரிமை என கூறி உள்ளன.

முன்னதாக இந்த வழக்கில் வழக்குதாரர்கள், “பயோமெட்ரிக் தகவல்களை கட்டாயம் ஆக்கியுள்ள ஆதார் திட்டம், குடிமக்களின் அந்தரங்க உரிமையை மீறுவதாகும். அந்தரங்க உரிமை என்பது இந்திய அரசில் சாசனத்தின் பிரிவு 21-ன் அங்கம்” என்று வாதிட்டனர்.
மத்திய அரசின் சார்பில் அட்டார்னி ஜெனரல் கே.கே. வேணுகோபால் வாதிடும்போது, “அந்தரங்க உரிமைக்கென்று பொதுவான சட்டம் உள்ளது என்பதை ஒப்புக் கொண்டார். இருப்பினும், அரசியல் சாசனத்தை உருவாக்கியவர்கள் அனைத்து அடிப்படை உரிமைகளையும் குடிமக்களுக்கு வழங்கி உள்ளனர். ஆனால், அந்தரங்க உரிமை, உணர்வுப்பூர்வமாக தவிர்க்கப்பட்டுள்ளது” என குறிப்பிட்டார்.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest India news in Tamil.

×Close
×Close