மருத்துவமனை அலட்சியம்: புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு எச்.ஐ.வி. தொற்று ஏற்பட்ட அவலம்

ரத்தப் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 9 வயது சிறுமிக்கு, சிகிச்சையின்போது எச்.ஐ.வி. நோயாளியின் ரத்தத்தை செலுத்தியதால், அவளுக்கும் எச்.ஐ.வி. தொற்று ஏற்பட்டது.

கேரளாவில் ரத்தப் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 9 வயது சிறுமிக்கு, சிகிச்சையின்போது எச்.ஐ.வி. நோயாளியின் ரத்தத்தை செலுத்தியதால், அவளுக்கும் எச்.ஐ.வி. தொற்று ஏற்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியது.

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள புற்றுநோய் சிகிச்சை மையத்தில் ரத்தப் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 9 வயது சிறுமி ஒருவர் சிகிச்சை எடுத்து வந்தார். இந்நிலையில், சிகிச்சையின்போது அவருக்கு ரத்தம் செலுத்தப்பட்டது. இந்நிலையில், ஆகஸ்ட் மாதம் அச்சிறுமிக்கு எச்.ஐ.வி. நோய்த்தொற்று ஏற்பட்டது உறுதிப்படுத்தப்பட்டது.

இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் தரப்பில் கூறப்பட்டதாவது, சிகிச்சை ஆரம்பிக்கும்போது மார்ச் மாதம் தங்கள் மகளுக்கு எச்.ஐ.வி. தொற்று இல்லை எனவும், கீமோதெரபி சிகிச்சையை 4 முறை எடுத்த நிலையில், ஆகஸ்ட் மாதம் பரிசோதித்தபோது எச்.ஐ.வி. தொற்று ஏற்பட்டதாகவும் குற்றம்சாட்டினர். மேலும், தங்கள் மகளுக்கு எச்.ஐ.வி. தொற்று ஏற்பட்டது குறித்து சிகிச்சை மையம் ஏதும் தெரிவிக்கவில்லை எனவும், தாங்களாகவே அதனை கண்டறிந்ததாகவும் பெற்றோர் தெரிவித்தனர்.

“என் மகளுக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என மருத்துவர்கள் கூறினர். ஆனால், அதனை அவர்கள் தாமதித்தனர். அதன்பின், நிறைய ஆண்டி-பயாடிக் மருந்துகளை என் மகளுக்கு அளித்தனர். மகளின் மருத்துவ அறிக்கையில் எச்.ஐ.வி. என்ற இடத்தில் வெற்றிடமாக இருந்தது. அதன்பின், நாங்கள் மீண்டும் பரிசோதனை செய்த போது அவளுக்கு எச்.ஐ.வி. தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது. எச்.ஐ.வி. நோயாளியின் ரத்தத்தை என் மகளுக்கு செலுத்தியதே இதற்கு காரணம்”, என குற்றம்சாட்டினர்.

இதுகுறித்து, சிறுமியின் பெற்றோர் கடந்த செப்டம்பர் 10-ஆம் தேதி அந்த புற்றுநோய் சிகிச்சை மையத்திற்கு எதிராக காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இதுதொடர்பாக, புற்றுநோய் சிகிச்சை மையம் சார்பாக தெரிவிக்கப்பட்டதாவது, சிறுமிக்கு சிகிச்சையின்போது 49 யூனிட் ரத்தம் செலுத்தப்பட்டதாகவும், சிறுமிக்கு எச்.ஐ.வி. தொற்று ஏற்பட்டது குறித்து துறை ரீதியான விசாரணைக்கு உடனடியாக உத்தரவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இதனிடையே இச்சம்பவம் குறித்து நிபுணர்கள் தலைமையில் விசாரணை நடத்த கேரள அரசு உத்தரவிட்டது. மேலும், சிறுமியின் மருத்துவ செலவை அரசே ஏற்கும் எனவும் தெரிவித்தது.

×Close
×Close