கொரோனா வைரஸ் சிகிச்சை: கேரளாவில் வீடு திரும்பும் 93 வயது முதியவர்; அதிசயத்தை விளக்கும் ஸ்பெஷல் ரிப்போர்ட்

டாக்டர் ஆர். சஜித் குமார்: கோவிட் -19 நோய் சிகிச்சையில் இதை ஒரு புதிய  அத்தியாயமாக பார்க்கலாம். அவர்களின் பிழைப்பை அதிர்ஷ்டம் என்று நான் கூறுவேன்.

 ஷாஜு பிலிப், விஷ்ணு வர்மா

இந்தியாவின் கொரோனா வைரஸ் பரவும் முக்கிய பத்து  ‘ஹாட்ஸ்பாட்களில்’ ஒன்றான கேரளாவின் பதனம்திட்டா மாவட்டத்தில் இருந்து வந்த செய்தி,நம் இதயங்களுக்கு  நம்பிக்கை அளித்துள்ளது.

முதுமை தொடர்பான பிரச்சனைகள் உட்பட இதர நோய்கள் கொண்ட தாமஸ் (93), மரியம்மா (88) என்ற தம்பதியினர் நேற்று கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து குணமடைந்து, விரைவில் வீடு திரும்பவதாக  அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றால் இவர்கள்  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஆரம்ப நாட்களில், முதியவர் தாமஸுக்கு மாரடைப்பு ஏற்பட்டது, மரியம்மாவக்கு பாக்டீரியா தொற்று இருந்தது. மருத்துவமனையில் இவர்களுக்கு பணி செய்த செவிலியர் ஒருவருக்கும் கொரோனா வைரஸ் ஏற்பட்டது.

இந்த முதுமை தம்பதியரின் மகன், மருமகள், பேரன் , இரண்டு உறவினர்கள் என குடும்பத்தின் ஐந்து உறுப்பினர்களும் தீவிர பரிசோதனைக்குப் பின் மருத்துவமனையில் இருந்து நேற்று வீடு திரும்பினர்.  இந்த குடும்பம் மருத்துவமனையை விட்டு வெளியேறும் போது, மருத்துவர்கள் உட்பட ஊழியர்களின் கண்களில் சொல்ல முடியாத, மறைக்க முடியாத  கண்ணீர் தென்பட்டது.

பிப்ரவரி 29 அன்று இத்தாலியில் இருந்து பதானம்திட்டாவில் உள்ள அய்தாலாவில் உள்ள குடும்ப வீட்டிற்கு, மகன் குடும்பத்தினர் வந்திருக்கின்றனர். இவர்கள் மூலம் இந்த வயதான தம்பதியருக்கு கொரோனா வைரஸ் பரவியதாக நம்பப்படுகிறது. 55 வயது நிரம்பிய மகன் இதுகுறித்து கூறுகையில்,“நாங்கள் ஆகஸ்ட் மாத விடுப்பில் வர திட்டமிட்டிருந்தோம். ஆனால், அதுவரை உயிர் வாழ்வது  சிரமம், உடனடியாக வாருங்கள் என்றார் தந்தை,” என்று கூறினார்.

முன்னதாக, இவர்கள் மூவரும்,”கொச்சி விமான நிலையத்தில் தெர்மல் ஸ்கிரீனிங்கை  தவிர்த்துவிட்டார்கள், வெளிநாட்டுப் பயணம் குறித்த தகவலையும் அதிகாரிகளுக்கு மறுத்து விட்டார்கள்”என்ற செய்தி வெளியாகியாது.

மேலும், கட்டாய தனிமைப்படுத்தல் முறையை கடைபிடிக்காமல் இவர்கள் தபால் நிலையம், வங்கி மற்றும் காவல் நிலையம் போன்ற இடங்களில் பயணம் செய்ததாகவும் கூறப்பட்டது.

இதனால், கேரளா சுகாதாரத் துறை அதிகாரிகளின் கெடுபிடிக்கும், பொது மக்கள் கோபத்திற்கும் இவர்கள் ஆளாக வேண்டியிருந்தது.

கடந்த ஒரு மாதத்தில் இந்த குடும்பத்துடன், முதன்மை (அல்லது) இரண்டாம் நிலை தொடர்பில் இருந்த 900 க்கும் மேற்பட்டோரை கேரளா சுகாதாரத் துறை  தனிமைப்படுத்தியது.

இரண்டு முதியவர்கள் மற்றும் குடும்பத்தில் உள்ள ஐந்து பேரும் கொரோனா வைரஸ் தொடர்புடைய அறிகுறிகளை வளர்த்தவுடன்,கடந்த மார்ச் 6-ம் தேதி பதானம்திட்டாவில் உள்ள பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

அடுத்த இரண்டு நாட்களில் இவர்கள் அனைவருக்கும்  கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டது. ஆனால், முதியவர்கள் இருவருக்கும் அறிகுறி தீவிரமானதையடுத்து, கோட்டயம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

தாமஸ், மரியம்மா தம்பதியினருக்கு நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம் மற்றும் வயது தொடர்பான பிற வியாதிகள் இருப்பதை நன்கு மனதில் வைத்துக் கொண்டு தான்  மருத்துவர்கள் நோய்தடுப்பு நடவடிக்கையை திட்டமிட்டனர்.

ஆரம்பத்தில், தாமஸும், மரியம்மாவும் தனித்தனி அறைகளில் தங்க வைக்கப்பட்டனர். இந்த தனிமை மேலும் உடல்நிலையை மோசமாக்கும் என்று கருதிய மருத்தவர்கள், குறைந்தபட்சம் ஒருவருக்கொருவர் பார்க்க வழிசெய்யும் விதமாக ஐ.சி.யு பிரிவுக்கு உடனடியாக இருவரையும் மாற்றினர்.

தாமஸின் உடல்நிலை தொடர்ந்து மோசமடைந்தது.  கடுமையான இருமல் மற்றும் அதிகமான சளி குவிந்ததால் அவரின் ஆக்ஸிஜன் அளவு ஏற்ற இறக்கமாக இருந்தது. இதன் விளைவாக வென்டிலேட்டர் பொருத்தப்பட்டது. இதற்கிடையில், தாமஸுக்கு வந்த மாரடைப்பு அனைவரையும் நிலைகுலைய செய்தது. தாமஸ், மரியம்மா இருவருக்கும் சிறுநீர் தொற்று சிகிச்சை வேண்டியிருந்தது. அதன் பின்னர் 88 வயதான மரியம்மா பாக்டீரியா தொற்றாலும் பாதிபடைந்தார்.

எப்படியும் வீடு திரும்ப வேண்டும் என்ற எண்ணம் இவர்களுக்கு அதிகாமா இருந்தது, சில சமயங்களில் சாப்பிடாமல் இருந்ததாகவும், ஊழியர்களுடன் முறையான ஒத்துழைப்பை வழங்கவில்லை என்று சுகாதாரத் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

கடந்த வாரம், அவர்கள் தங்கள்  உடல்நிலையில்  நல்ல முன்னேற்றங்களை கண்டனர். தாமஸுக்கு வழங்கப்பட்ட  வென்டிலேட்டர் உதவி திரும்ப பெறப்பட்டது. பின் நடத்தப்பட்ட கொரோனா வைரஸ் டெஸ்டில் நெகடிவ் என்ற பதில வந்தது. இந்நிலையில், அவர்கள் உடல்நிலை சீராக இருப்பதாகவும், டிஸ்சார்ஜ் செய்வதற்கான தேதியை மருத்துவ வாரியம் விரைவில் முடிவு செய்யும் என்று தற்போது கூறப்பட்டுள்ளது.

கேரள சுகாதார அமைச்சர் கே.கே ஷைலாஜா வெளியிட்ட செய்திக் குறிப்பில்,” இந்த தம்பதியினருக்கு இடைவிடாது பணி செய்த ஏழு மருத்துவர்களுக்கும் 25, செவியல்ர்களுக்கும் மனமார நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். மார்ச் 27 அன்று கொரோனா வைரஸ் தொற்றால் பாதித்த செவிலியாருக்கு  அரசு சாரில் அனைத்து உதவிகளும் செய்து தரப்படும்”  என்றும் உறுதியளித்தார்.

மற்றொரு செவிலியர்  தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் பேசுகையில்,“இந்த தம்பதியினருக்கு கொரோனா வைரஸ் தொற்றின் தீவிரம்  நன்கு தெரிந்திருந்தது. ஆனால், வீடு திரும்ப விரும்ப வேண்டும் என்பதே அவர்களின் ஒரே குறி. மரியம்மவுக்கு வயது காரணமாக, காது கேளாமல்  இருந்தார். இதனால், பேசும் போது நான் மிக நெருக்கமாக நிற்க வேண்டியிருந்தது” என்று தெரிவித்தார்.

மருத்துவமனையின் தொற்று நோய்கள் தடுப்பு துறைத் தலைவர், டாக்டர் சஜித் குமார் கூறுகையில், “60 வயதை தாண்டிய ஒருவர் ஆபத்து உடையவராகக் கருதப்படும் நிலையில், கோவிட் -19 நோய் சிகிச்சையில் இதை ஒரு புதிய  அத்தியாயமாக பார்க்கலாம். ஏன்…… ஒரு அரிய சாதனையாக  நாம் எடுத்துக் கொள்ள வேண்டும். அவர்களின் பிழைப்பு அதிர்ஷ்டம் என்று நான் கூறுவேன், ஏனெனில் எதுவும் நடந்திருக்கக்கூடும். நாங்கள் தாமஸை, ஆறு சந்தர்ப்பங்களில் இழக்கப் பார்த்தோம். கடவுள் அவர்களை ஆசீர்வதித்தார்” என்று தெரிவித்தார்.

இவர்களின் மகன், மருமகள் (53), பேரன்(25) மற்றும் இரண்டு உறவினர்கள் நேற்று பொது மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டபோது, மருத்துவர்களும், ஊழியர்களும் கைதட்டி ஆரவாரம் செய்தனர்.

இவர்கள் அனைவரும் அடுத்த 14 நாட்களுக்கு  கட்டாயம், வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ளவுள்ளனர். இதற்காக, குடும்பத்திற்கு தேவைப்படும் இனிப்பு பலகாரங்கள்,  சமைத்த உணவு பாக்கெட்டுகள், சமைக்க தேவைப்படும் உணவு பொருட்கள் கேரளா சுகாதாரத் துரையின் சார்பில்  வழங்கப்பட்டன.

53 வயதான மகன் கூறுகையில்,“கடந்த 25 நாட்களாக எங்களை கவனித்துக்கொண்ட அனைவருக்கும், குறிப்பாக  செவிலியர்கள், மருத்துவர்கள், மாவட்ட ஆட்சியர் என  அனைவருக்கும் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்… நாங்கள் உயிருடன் வீட்டிற்கு செல்வோம் என்று ஒருபோதும்  நாங்கள் நினைத்ததில்லை. நான் கடவுளுக்கு நன்றி சொல்ல விரும்புகிறேன். பிராத்தனைகள் வழியே உங்கள் அனைவரையும் நினைவில் கொள்வேன்” என்று தெரிவித்தார்.

25 வயதான பேரன் கூறுகையில். ” நாங்கள்  நெறிமுறையை பின்பற்றவில்லை, எங்கள் தவறை நாங்கள்  ஒப்புக்கொள்கிறோம். மேலும், எங்களின் தவறு தற்செயலானது என்பதை சுகாதார ஊழியர்களும் பொதுமக்களும் புரிந்து கொள்வார்கள்” என்று தான் நம்புவதாக தெரிவித்தார்.

பதனம்திட்டா மாவட்ட கலெக்டர் பி.பி நூஹ் தனது அதிகாரப்பூர்வ பேஸ்புக் பக்கத்தில்,“அவர்கள் வேண்டுமென்றே நோயை பரப்பவில்லை. இது போன்ற சம்பவம் நம்மில் யாருக்கும் ஏற்படலாம். யாரும் அவர்களின் புகைப்படங்களை சமூக ஊடகங்களில் பரப்பக்கூடாது, சமூகத்தில் அவர்களை தனிமைப்படுத்தவோ துன்புறுத்தவோ முயற்சிக்கக்கூடாது. அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நிலைய அதிகாரி மற்றும் எஸ்.பி.க்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. பதனம்திட்டா மக்கள் இதுபோன்ற செயல்களில் ஈடுபட மாட்டார்கள் என்று நம்புகிறேன்” என்று பதிவு செய்துள்ளார்.

 

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Get the latest Tamil news and India news here. You can also read all the India news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: 93 yr olds recovery from coronavirus treatment covid 19 treatment

Next Story
கொரோனா நிவாரண நிதி : மோடி பேரில் போலி கணக்கு துவங்கிய கும்பல்PM CARES Fake UPI ID created to steal corona outbreak prevention fund
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express