ஓகி புயலில் தத்தளித்த தமிழக, கேரள மீனவர்கள் 952 பேரை மஹாராஷ்டிரா அரசு மீட்டது. இதற்காக மத்திய பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன் நன்றி தெரிவித்தார்.
ஓகி புயல், கடந்த நவம்பர் 30-ம் தேதி காலை 9 மணிக்கு கன்னியாகுமரியை தாக்கியது. தொடர்ந்து கேரள கடற்பகுதி வழியாக லட்சத் தீவுகளை கடந்து, குஜராத்தை நோக்கி பயணிக்கிறது. கன்னியாகுமரி மாவட்டம், கேரளா, லட்சத் தீவுகள் ஆகிய இடங்களில் பலத்த சேதங்களை ஏற்படுத்திய ஓகி, நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர்கள் பலரையும் அலைபாய வைத்திருக்கிறது.
கன்னியாகுமரி, கேரளா மீனவர்கள் இரு வாரங்கள் முதல் ஒரு மாத காலம் வரை ஆழ்கடலில் தங்கி மீன்பிடிக்கும் வழக்கம் உடையவர்கள். இப்படி ஆழ்கடலில் மீன்பிடிக்கச் செல்லும் கன்னியாகுமரி மீனவர்கள், கேரள மீன்பிடித் துறைமுகங்களில் இருந்து கிளம்பிச் செல்வதும் வழக்கம். அப்படி கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியில் இருந்து நூற்றுக்கணக்கான படகுகளில் கிளம்பிச் சென்ற மீனவர்கள், ஓகி புயலில் சிக்கி நடுக்கடலில் தத்தளித்தார்கள்.
இது தொடர்பாக கேரள அரசு மற்றும் கேரள பாஜக சார்பில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இந்திய கடற்படை மற்றும் கடலோர காவல் படை கண்காணிப்பில் அவர்கள் மஹாராஷ்டிரா கடற்பகுதியில் தத்தளிப்பது தெரிய வந்தது. அவர்களை மீட்க மஹாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்நாவிஸின் உதவியும் கோரப்பட்டது.
மஹாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்நாவிஸ் இது தொடர்பாக மஹாராஷ்டிரா கடல்சார் வாரியத்திற்கும், சிந்துதர்க் மாவட்ட ஆட்சியருக்கும் தகவல் தெரிவித்து அவர்களை மீட்கும் பணிக்கு துணை நிற்க உத்தரவிட்டார். மஹாராஷ்டிரா மாநில அரசின் படகுகள் துணையுடன் இந்திய கடலோர காவல் படை, கப்பற் படை வீரர்கள் முழுவீச்சில் முயற்சித்து மொத்தம் 68 படகுகளில் தத்தளித்த 962 மீனவர்களை மீட்டனர்.
68 படகுகளில் 66 படகுகள் கேரளாவை சேர்ந்தவை! தமிழக மீனவர்கள் (கன்னியாகுமரி மாவட்டம்) 2 படகுகளில் மீட்கப்பட்டிருக்கிறார்கள். மஹாராஷ்டிரா மாநிலம் தேவகாட் துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்ட இவர்களுக்கு, அவர்கள் ஊருக்கு திரும்புகிற வரை தேவையான அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்படும் என மஹாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்நாவிஸ் தெரிவித்தார்.
இந்த நடவடிக்கை தொடர்பாக மஹாராஷ்டிரா முதல்வருக்கு, ட்விட்டரில் நன்றி தெரிவித்தார் பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன். அதில், ‘அவசர சூழ்நிலையை புரிந்துகொண்டு மீனவர்களுக்கு உதவிய முதல்வர் பட்நாவிஸுக்கு நன்றி’ என கூறியிருக்கிறார் நிர்மலா சீதாராமன்.
நிர்மலா சீதாராமன் தமிழில் வெளியிட்ட மற்றொரு ட்வீட்டில், ‘நன்றி மாண்புமிகு முதலமைச்சர் பட்நாவிஸ் அவர்களே. 2 படகுகளில் கரைசேர்திருக்கும் தமிழக மீனவர்களின் பாதுகாப்பிற்க்கு உதவியளித்தமைக்கு.’ என தெரிவித்தார். பாஜக.வை சார்ந்த முதல்வர் பட்நாவிஸின் நடவடிக்கையால் பெருமை கொள்வதாக தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்தரராஜனும் பாராட்டு தெரிவித்துள்ளார்.