‘சோனியாவின் அரசியல் மூளை’ என வர்ணிக்கப்படும் அகமது படேல் இன்று குஜராத்தில் நடக்கும் தேர்தலில் வெற்றிபெற்று ராஜ்யசபை எம்.பி. ஆவாரா? என்கிற கேள்வி நாடு முழுவதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
குஜராத்தை சேர்ந்தவரான அகமது படேல், ராஜீவ் காந்தியின் நாடாளுமன்றச் செயலாளராக இயங்கியவர்! அப்போது இவரது செயல்பாட்டில் நம்பிக்கை பெற்ற ராஜீவ், இவரை டெல்லியில் காங்கிரஸின் சொத்தான ஜவஹர் டிரஸ்டுக்கு பொறுப்பாளர் ஆக்கினார். 1980-களில் அந்த ஜவஹர் டிரஸ்டுக்காக கட்டடத்தை பிரமாண்டமாக கட்டும் பணியை இவரிடம் ராஜீவ் ஒப்படைத்தார். மிக நவீன வசதிகளுடன் அப்போதே அதை கட்டி முடித்து ராஜீவிடம் பாராட்டு பெற்றவர் அகமது படேல்!
ராஜீவ் காலத்திற்கு பிறகு சோனியாவின் நம்பர் ஒன் நம்பிக்கை நாயகன், அகமது படேல்தான்! இதுவரை குஜராத்தில் இருந்து 3 முறை லோக்சபாவுக்கும், 4 முறை ராஜ்யசபாவுக்கும் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். கடந்த 2001 முதல் சோனியாவின் அரசியல் செயலாளராக பணியாற்றுகிறார். சோனியாவின் அரசியல் வியூகங்களுக்கு பிரதான மூளையே இவர்தான்!

2004, 2009 தேர்தல்களில் காங்கிரஸ் ஆட்சி அமைந்ததில் அகமது படேலின் பணி கணிசமானது. ஆனால் அந்த அமைச்சரவைகளில் இடம்பெறும்படி சோனியா சொன்னபோது, ஏற்க மறுத்துவிட்டார் அகமது படேல்! எந்த இடத்திலும் தன்னை முக்கியப்படுத்த விரும்பாதவர் இவர். மீடியாக்கள் முன்னால் இவரை பார்க்க முடியாது. ஆனாக் காங்கிரஸில் எங்கு பிரச்னை ஏற்பட்டாலும் அதை தீர்க்கும், ‘டிரபுள் ஷூட்டர்’ இவர்தான். அந்த வகையில் சோனியாவுக்கு அடுத்த படியாக காங்கிரஸின் பவர்ஃபுல் மனிதராக இவரைச் சொல்கிறார்கள்.
68 வயதான அகமது படேலை 5-வது முறையாக அதே குஜராத்தில் இருந்து ராஜ்யசபைக்கு சுலபமாக அனுப்பிவிட முடியும் என்கிற நம்பிக்கையில்தான் அவரை வேட்பாளராக அறிவித்தார் சோனியா. காரணம், அந்த அறிவிப்பு வெளியானபோது குஜராத்தில் காங்கிரஸுக்கு 57 எம்.எல்.ஏ.க்கள் இருந்தனர். மூத்த காங்கிரஸ் தலைவரான சங்கர்சிங் வகேலா, அவரைத் தொடர்ந்து 5 எம்.எல்.ஏ.க்கள் கட்சியை விட்டு விலகியதுதான் இப்போது பிரச்னை!
அதுவும் போக, எஞ்சிய 51 பேர் ஒருமனதாக அகமது படேலுக்கு ஆதரவு கொடுக்கும் சூழலும் இல்லை. பா.ஜ.க.வின் வேட்டையில் இருந்து பாதுகாக்க, காங்கிரஸ் ஆளும் மாநிலமான கர்நாடகாவுக்கு காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை அழைத்து வந்தபோது, 44 பேர் மட்டுமே வந்தனர். அதே 44 பேர்தான் 7-ம் தேதி காலை குஜராத்தில் உள்ள ‘ரிசார்ட்’டுக்கு அழைத்துச் செல்லப்பட்டு தங்க வைக்கப்பட்டிருக்கிறார்கள்.
181 எம்.எல்.ஏ.க்கள் கொண்ட குஜராத் சட்டமன்றத்தில் இப்போதைய சூழலில் அகமது படேல் ஜெயிக்க 45 எம்.எல்.ஏ.க்கள் தேவை. ஆகஸ்ட் 7-ம் தேதி குஜராத் ரிசார்ட்டில் தங்க வைக்கப்பட்டிருக்கும் 44 எம்.எல்.ஏ.க்களை சந்தித்து, தனக்கு வாக்களிக்கும்படி உருக்கமாக வேண்டுகோள் வைத்தார் அகமது படேல். ‘கட்சியின் கட்டளையை ஏற்காதவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’ என்கிற எச்சரிக்கையையும் அவர் விடுத்தார். இதுவே அந்த 44 பேர் மீதும் காங்கிரஸுக்கு நம்பிக்கை இல்லையோ? என்கிற தோற்றத்தை உருவாக்கியது.
தேசியவாத காங்கிரஸின் 2 எம்.எல்.ஏ.க்கள், ஐக்கிய ஜனதாதள எம்.எல்.ஏ. ஒருவர் ஆகியோரின் ஆதரவும் தனக்கு இருப்பதாக அகமது படேல் கூறினார். ஆனால் 2002 தேர்தலில் தேசியவாத காங்கிரஸை எதிர்த்து காங்கிரஸ் வேட்பாளர்களை நிறுத்திய வருத்தம் இன்னும் இங்குள்ள தேசியவாத காங்கிரஸ் தலைவர்களுக்கு இருக்கிறது. எனவே கடைசிவரை அவர்கள் முடிவை ‘சஸ்பென்ஸா’க வைத்து அகமது படேலை கதற வைத்தனர்.
ஐக்கிய ஜனதாதள எம்.எல்.ஏ,வோ மேலிடத்தில் இருந்து பா.ஜ.க.வை ஆதரிக்க உத்தரவு வந்துவிட்டதாக கூறியிருக்கிறார். காங்கிரஸ் அதிருப்தி தலைவரான சங்கர்சிங் வகேலா தனது ஒரு ஓட்டால் அகமது படேல் ஜெயிப்பார் என்றால், அகமது படேலுக்கு வாக்களிக்க தயார் என கூறியிருக்கிறார். ‘அகமது படேல் ஜெயிக்க வாய்ப்பில்லை’ என கணித்துவிட்ட தொனி அவரது பேச்சில் தெரிகிறது.
காங்கிரஸ் கட்சி உறுதியாக வெற்றி பெற முடியும் இரு இடங்களுக்கு தேசிய தலைவர் அமித்ஷாவையும், மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானியையும் வேட்பாளர்களாக நிறுத்தியிருக்கிறது. ‘ரிஸ்க்’கான 3-வது எம்.பி. பதவிக்கு காங்கிரஸில் இருந்து வந்தவரான பல்வந்த்சிங் ராஜ்புத்தை களம் காண வைத்திருக்கிறது.
ராஜ்புத் தோற்றாலும், அதனால் பா.ஜ.க.வுக்கு ஒன்றுமில்லை. ஆனால் அகமது படேல் தோற்றால், காங்கிரஸின் தலைமைக்கு கிடைத்த பேரதிர்ச்சியாக இருக்கும். துரும்பைக் கட்டி மலையை இழுக்கும் அரசியலை பா.ஜ.க. செய்கிறது. ஆனால், அந்த துரும்பின் பின்னால் அதிகாரபலம் இருப்பதால், மலையை அந்த துரும்பு அசைத்துவிட்டாலும் ஆச்சர்யம் இல்லை.