Advertisment

குஜராத்தில் இருந்து ஒரு தலித் விருந்தினர்.. அரவிந்த் கெஜ்ரிவாலுடன் மதிய விருந்து.. விவரம் என்ன?

குஜராத்தைச் சேர்ந்த 20 வயதான தூய்மை பணியாளரின் குடும்பத்தினருடன் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் நேற்று மதிய உணவு சாப்பிட்டார். தூய்மை பணியாளரின் குடும்பத்தினர் விமானம் மூலம் டெல்லி அழைத்து வரப்பட்டு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. யார் இந்த தூய்மை பணியாளர்? அதுகுறித்து இங்கு பார்ப்போம்.

author-image
sangavi ramasamy
New Update
குஜராத்தில் இருந்து ஒரு தலித் விருந்தினர்.. அரவிந்த் கெஜ்ரிவாலுடன் மதிய விருந்து.. விவரம் என்ன?

குஜராத் காந்திநகரைச் சேர்ந்த தூய்மை பணியாளர் ஹர்ஷ் சோலங்கிக்கு(20) கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாளர், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலிடமிருந்து அழைப்பு வந்தது. அதில், டெல்லி முதல்வர் இல்லத்தில் மதிய விருந்துக்கு தாங்கள் அழைக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டிருந்தது. ஆச்சரியமடைந்த குடும்பத்தினர் அழைப்பின்படி நேற்று திங்கட்கிழமை விமானம் மூலம் டெல்லி அழைத்து செல்லப்பட்டனர். அவர்களுக்கு விமானம் நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. ஆம் ஆத்மியின் மொஹல்லா கிளினிக்குகள், அரசுப் பள்ளிகளை சுற்றிப்பார்த்தனர். பின், அரவிந்த் கெஜ்ரிவாலுடன் மதிய விருந்தில் கலந்து கொண்டு புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

Advertisment

குஜராத் காந்திநகரில் ஒப்பந்த ஊழியராக பணிபுரியும் ஹர்ஷ், தாயார் லதா பென், சகோதரி சோலங்கி ஆகியோருடன் டெல்லி வந்தார். முதல் முறையாக விமானத்தில் பயணம் செய்தனர். தாயார் லதா பென் முதல் முறையாக டெல்லி சென்றார்.

அகமதாபாத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அரவிந்த் கெஜ்ரிவால் தூய்மை பணியாளர்களை சந்தித்துப் பேசினார். அப்போது ஹர்ஷ், சில நாட்களுக்கு முன் ஆட்டோரிக்ஷா ஓட்டுநரின் வீட்டிற்கு நீங்கள் சென்றீர்கள். அதுபோல் நாங்கள் உங்கள் வீட்டிற்கு வரலாமா? என கேட்டார். இதற்கு பதிலளித்த கெஜ்ரிவால்,

தேர்தலுக்கு முன்பு அரசியல்வாதிகள் தலித் சமூகத்தினரின் வீடுகளுக்கு சென்று சாப்பிடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். ஆனால், அவர்கள் யாரும் தங்கள் வீடுகளுக்கு அவர்களை அழைத்ததில்லை என்றார்.

இந்தநிலையில், திங்கட்கிழமை காலை 10.20 மணியளவில் ஹர்ஷ் குடும்பத்தினர் டெல்லி சென்றடைந்தனர்.

அவர்களை ஆம் ஆத்மியின் ராஜ்யசபா எம்.பி.யும், குஜராத் தேர்தல் இணை பொறுப்பாளருமான ராகவ் சதா விமான நிலையத்தில் வரவேற்று, அவர்களுக்கு சால்வை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

அவர்கள் டெல்லி அரசுப் பள்ளி, மேற்கு வினோத் நகரில் உள்ள மொஹல்லா கிளினிக்கிற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். பள்ளி முதல்வர் மேரி ஜோத்ஸ்னா பள்ளியை சுற்றிக்காட்டினார். 10ஆம் வகுப்பு வரை படித்த ஹர்ஷ் குடும்ப வறுமையின் காரணமாக தூய்மை பணியாளர் வேலைக்கு சென்றார். ஹர்ஷ் கூறுகையில், "குஜராத்தில் இதுபோன்ற அரசுப் பள்ளியைப் பார்த்ததில்லை. இங்கு நீச்சல் குளம் உள்ளது. ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்த குழந்தைகள் நல்ல கல்வியை பெற குஜராத்திலும் இதுபோன்ற பள்ளிகள் உருவாக்கப்பட வேண்டும் " என்றார்.

ஐந்து பேர் உள்ள குடும்பத்தில் ஹர்ஷ் மற்றும் தாய் லதா பென் மட்டுமே வேலைக்கு சென்று குடும்பத்தை கவனித்து வருகின்றனர். சகோதரி சோலங்கி 12ஆம் வகுப்பு வரை படித்துள்ளார். கெஜ்ரிவாலை சந்தித்த ஹர்ஷ் குடும்பத்தினர் மிகவும் மகிழ்ச்சி அடைந்தனர். ஹர்ஷ் கெஜ்ரிவாலை கட்டியணைத்து உணர்ச்சிவசப்பட்டார். அம்பேத்கர் உருவப்படத்தை ஹர்ஷ் பரிசாக வழங்கினார். ஹர்ஷ் கூறுகையில், "இது எங்களுக்கு மிகவும் பெருமையான தருணம். அரவிந்த் கெஜ்ரிவாலுடன் நான் இங்கே நிற்பதை என்னால் நம்ப முடியவில்லை. பகல் கனவு காண்பது போல் உணர்கிறேன்" என்றார்.

"கடந்த 75 ஆண்டுகளில் எந்தத் தலைவரும் தலித்தை அவர்கள் வீட்டிற்கு அழைத்ததில்லை. கெஜ்ரிவால் தான் அதை செய்ய முதல் நபர், தலைவர்." என்றார்.

இதுகுறித்து கெஜ்ரிவால் கூறியதாவது, "ஹர்ஷ் குடும்பத்தினர் இங்கு வந்தது எங்களுக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. அவர்களுக்கு நன்றி. அடுத்த முறை அகமதாபாத் செல்லும்போது, ​​ஹர்ஷின் வீட்டிற்குச் சென்று அவரது சமூக மக்களைச் சந்திப்பேன்" என்றார். ஹர்ஷ் அவருடைய ஒப்பந்த வேலை குறித்தும் கெஜ்ரிவாலிடம் கூறினார்.

ஆம் ஆத்மி மூத்த தலைவர் ஒருவர் கூறுகையில், ஹர்ஷ் குடும்பத்தினருடனான சந்திப்பு கெஜ்ரிவாலின் விருப்பத்தின் பேரில் நடந்தது என்றார். மற்றொருவர் கூறுகையில், "இது அனைத்தும் அரசியல். அரசியலின் ஒரு பகுதி. ஹர்ஷ் குடும்பத்தினரை வீட்டிற்கு அழைப்பு விடுத்தது முற்றிலும் முதல்வரின் தன்னிச்சையானது முடிவு" என்றார்.

பல ஆண்டுகளாக அரசியல் தலைவர்கள் தலித் சமூகத்தினரை தங்கள் ஆதாயத்திற்கு பயன்படுத்தினர். ஆனால் ஒரு தலைவர் தலித் சமூகத்தைச் சேர்ந்த ஒருவருக்கு மரியாதை கொடுப்பது இதுவே முதல் முறை என்றார்.

காங்கிரஸ் தலைவர் ரொமேஷ் சபர்வால், விமான நிலையத்தில் ராகவ் சதா, ஹர்ஷ் குடும்பத்தினரை வரவேற்கும் வீடியோவைப் பகிர்ந்து, "நாங்கள் இதை காலம்காலமாக செய்துவருகிறோம். ஆனால் நாங்கள் இதற்கு ஒருபோதும் விளம்பரம் தேடியதில்லை" என்று ட்விட்டர் பதிவிட்டுள்ளார்.

குஜராத் மாநிலத்திற்கு விரைவில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. அரசியல் கட்சியினர் அங்கு தீவிரம் காட்டி வருகின்றனர். பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகள் அரசியல் பணிகளை தொடங்கி உள்ளனர். இந்நிலையில் அரவிந்த் கெஜ்ரிவாலின் இந்த சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment