ஒடிஷாவில் ’நண்பன்’ திரைப்பட பாணியில், மருத்துவர் செல்ஃபோனில் வழிநடத்த செவிலியர்களே பெண் ஒருவருக்கு பிரசவம் பார்த்ததால், குழந்தை இறந்துவிட்டதாகவும், அப்பெண்ணின் கர்ப்பப்பையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
ஒடிஷாவில் உள்ள சாய் மருத்துவமனையில் ஆர்த்தி என்ற பெண் தன்னுடைய முதல் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், அந்நேரத்தில் பணியிலிருக்க வேண்டிய மருத்துவர் ரஷ்மிகாந்த் பத்ரா அங்கு இல்லை என அப்பெண்ணின் உறவினர்களால் குற்றம்சாட்டப்படுகிறது.
அதனால், மருத்துவமனை செவிலியர்கள் செல்ஃபோனில் மருத்துவர் ரஷ்மிகாந்தின் வழிகாட்டுதலின்படி பிரசவம் பார்த்துள்ளனர். ஆர்த்தியின் நிலைமை மிக மோசமான நிலையில், அவருக்கு அறுவை சிகிச்சை செய்து குழந்தையை எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இந்நிலையில், ஆர்த்தியின் குழந்தை இறந்தே பிறந்தது. மேலும், ஆர்த்தியின் கர்ப்பப்பையிலும் கோளாறு ஏற்பட்டது. மருத்துவர் இல்லாமல் அவரின் வழிகாட்டுதலின்படி, செவிலியர்களே பிரசவம் பார்த்ததாலேயே குழந்தை இறந்ததாக அப்பெண்ணின் உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
இதுகுறித்து அப்பெண்ணின் கணவர் கல்பதரு சமல் கூறியதாவது, “நாங்கள் மருத்துவர் ரஷ்மிகாந்தை தொடர்புகொண்டபோது, என் மனைவியை மருத்துவமனையில் அனுமதிக்குமாறும், பின்னர் அவரின் வழிகாட்டுதலின்படி செவிலியர்கள் பிரசவம் பார்ப்பர் எனவும் கூறினார். என் மனைவியின் நிலைமை மோசமான பின்பும் கூட அவர் மருத்துவமனைக்கு வரவில்லை. அதன்பிறகு, குழந்தை இறந்துவிட்டது. என் மனைவியின் கர்ப்பப்பையிலும் கோளாறு ஏற்பட்டுள்ளது. மருத்துவமர் வழிகாட்டுதலுடன் தாங்கள் பிரசவம் பார்த்ததாக செவிலியர்கள் என்னிடம் கூறினர். மருத்துவமனையின் அலட்சியமே இதற்கு காரணம்.”, என கூறினார்.
மருத்துவர் ரஷ்மிகாந்த் மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.