ஆதார் எண்ணுடன் ஓட்டுநர் உரிமத்தையும் இணைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. மத்திய அரசின் நலத்திட்டங்களை பெற ஆதார் எண் கட்டாயம் என மத்திய அரசு கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அறிவித்திருந்தது. இதற்கு எதிரான வழக்கில், உச்ச நீதிமன்றம் தீர்ப்பை ஒத்திவைத்துள்ளது. இதனிடையே, ஆதார் எண்ணுடன் பான் கார்டு இணைக்க டிசம்பர் மாதம் வரை கால அவகாசம் நீட்டிக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்திருந்தது. இந்த நிலையில், தற்போது ஆதார் எண்ணுடன் ஓட்டுநர் உரிமத்தையும் இணைப்பது குறித்து மத்திய அரசு பரிசீலனை மேற்கொண்டுள்ளது.
இது தொடர்பாக மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கூறும்போது: ஆதார் எண்ணுடன், ஓட்டுநர் உரிமத்தை இணைக்க வேண்டும் என்பதை அமல்படுத்த திட்டமிட்டுள்ளோம். இது தொடர்பாக மத்திய நெடுஞ்சாலைதுறை அமைச்சர் நிதின் கட்கரியுடன் பேசியுள்ளேன். இதன் மூலம், ஒருவரின் அங்க அடையாளத்தை, டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் மூலம் அடையாளம் காண முடியும். ஆதார் எண்ணுடன், பான் எண் இணைக்கப்பட வேண்டும் என்பது பண மோசடியை தடுப்பதற்காகவே என்று கூறினார்.
தமிழகத்தில் வாகன ஓட்டிகள் அசல் ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ள நிலையில், மத்திய அரசு ஆதார் எண்ணுடன், ஓட்டுநர் உரிமத்தை இணைக்க திட்டமிட்டுள்ளது.