/tamil-ie/media/media_files/uploads/2022/10/Kejriwal-8.jpg)
குஜராத் மற்றும் இமாச்சலப் பிரதேசத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. பா.ஜ.க, காங்கிரஸ், ஆம் ஆத்மி அங்கு தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. குஜராத்தில் பா.ஜ.க ஆட்சி நடைபெற்று வருகிறது. ஆம் ஆத்மி அங்கு முழு கவனம் செலுத்தி வருகிறது. ஆட்சியை பிடிக்க களம் இறங்கியுள்ளது. டெல்லி முதல்வரும், கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால் குஜராத்தில் பரப்புரை மேற்கொண்டார். மாநாடு, கூட்டங்களில் கலந்து கொண்டு உரையாற்றினர்.
இமாச்சலப் பிரதேசத்திலும் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், ஆம் ஆத்மி குஜராத்தில் கவனம் செலுத்துகிறது. அரவிந்த் கெஜ்ரிவால் ஜூலைக்குப் பின் இமாச்சலப் பிரதேசம் செல்லவில்லை என கட்சி வட்டாரங்கள் கூறுகிறது. பிரதமர் மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தில் ஆம் ஆத்மி வெற்றி பெற முயற்சி மேற்கொண்டுள்ளது.
இமாச்சலப் பிரதேசத்திற்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. நவம்பர் 12-ம் தேதி அங்கு தேர்தல் நடைபெற உள்ளது. குஜராத் தேர்தல் தேதிகள் இன்னும் அறிவிக்கப்படவில்லை. இந்த ஆண்டின் தொடக்கத்தில் கெஜ்ரிவால் அடிக்கடி இமாச்சலப் பிரதேசத்திற்கு சென்று வந்தார். ஆனால் தற்போது மேற்கு மாநில நிகழ்வுகளில் மட்டுமே உரையாற்றுகிறார். அக்டோபர் 16-ம் தேதி குஐராத் பாவ்நகரில் நடைபெற்ற ஆம் ஆத்மி கூட்டத்தில் கெஜ்ரிவால் கலந்து கொண்டார். பஞ்சாப்பில் ஆம் ஆத்மி ஆட்சியைக் கைப்பற்றியது.
குழப்பம்
தொடர்ந்து, ஆம் ஆத்மி மூத்த தலைவர்கள், அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்கள் குஜராத்தில் களம் இறங்கி பணியாற்றுகின்றனர். அவர்களில் சிலர் கூறுகையில், " ஏன் குஜராத்தில் மட்டும் கவனம் செலுத்தப்படுகிறது? அண்டை மாநிலமான இமாச்சலுக்கு ஏன் அனுப்பப்படவில்லை? பதிலாக வேறு கலாச்சார சூழல் கொண்ட ஒரு மாநிலத்திற்கு அனுப்பப்படுகின்றனர். இங்கு மொழி தடை உள்ளது" என்று கூறினர். தாங்கள் குழப்பமடைந்ததாகவும் கூறினர்.
இந்த ஆண்டு தொடக்கத்தில் இமாச்சலப் பிரதேசத்தில் ஆம் ஆத்மி கட்சி சீரான தொடக்கத்தை ஏற்படுத்தியது. தொடக்கத்தில் கெஜ்ரிவால் அங்கு பயணம் மேற்கொண்டு, மக்களிடத்தில் உரையாற்றினார். பல இடங்களில் ஆம் ஆத்மிக்கு வாக்கு கோரும் பேனர்கள் வைக்கப்பட்டன. மார்ச் மாதம் டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலின் நெருங்கிய உதவியாளர் துர்கேஷ் பதக் மாநில தேர்தல் பொறுப்புகளை கண்காணிக்கும் முக்கிய தலைவராக நியமிக்கப்பட்டார்.
கட்சி தாவல்
இந்தநிலையில், ஏப்ரல் மாதம் இமாச்சலப் பிரதேச ஆம் ஆத்மி தலைவராக இருந்த அனுப் கேஸ்ரி, பொதுச் செயலாளர் சதீஷ் தாக்கூர் மற்றும் உனா தலைவர் இக்பால் சிங் ஆகிய மூத்த தலைவர்கள் கட்சியிலிருந்து விலகி பா.ஜ.கவிற்கு சென்றனர். இது, ஆம் ஆத்மிக்கு பெரும் பின்னடைவாக கருத்தப்பட்டது. கெஜ்ரிவால், பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் மண்டியில் “திரங்கா யாத்திரை” மேற்கொண்ட 2 நாட்களுக்குப் பின் கட்சித் தாவல் ஏற்பட்டது.
அதன்பிறகு, அடுத்த மாதம் சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் டெல்லி அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் அமலாகத்துறையால் கைது செய்யப்பட்டார். அந்த நேரத்தில் ஜெயின் இமாச்சலப் பிரதேச தேர்தல் பணிகளை கவனித்து வந்தார்.
இதைத்தொடர்ந்து, அக்டோபர் 14 -ம் தேதி பஞ்சாப் மாநில ஆம் ஆத்மி அமைச்சர் ஹர்ஜோட் பெயின்ஸ் இமாச்சலப் பிரதேச தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார். ராஜ்யசபா எம்பி ராகவ் சதா குஜராத்தின் இணைப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார். கட்சி வட்டாரங்கள் கூறுகையில், ஆம் ஆத்மி மூத்த தலைவர்கள், ஏன் பஞ்சாப் முதல்வர் கூட தனது வார இறுதி நாட்களை குஜராத்தில்தான் செலவிடுகிறார் எனத் தெரிவித்தனர்.
வேட்பாளர்கள் அறிவிக்கப்படவில்லை
இமாச்சலப் பிரதேசத்தில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டாலும், ஆம் ஆத்மி இன்னும் தனது வேட்பாளர்களை அறிவிக்கவில்லை. வேட்புமனு தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி அக்டோபர் 25. மாச்சலில் உள்ள 68 இடங்களிலும் கட்சி வேட்பாளர்களை நிறுத்தும் என்று பெயின்ஸ் அக்டோபர் 16 அன்று தெரிவித்தார். அக்டோபர் 14- ம் தேதி பொறுப்புகள் வழங்கப்பட்டதில் இருந்து இங்கு முகாமிட்டு பணிகளை செய்து வருகிறோம். நாங்கள் கடுமையாக உழைக்கிறோம். ஆம் ஆத்மி கட்சி எந்த முயற்சியும் எடுக்கவில்லை என்று கூறுவது தவறானது என்று இமாச்சல் ஆம் ஆத்மி பொறுப்பாளர்கள் கூறினர்.
இமாச்சலப் பிரதேசத்தில் ஆட்சியைப் பிடிப்பது யார் என எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வர தீவிரமாக முயற்சித்து வருகிறது. காங்கிரஸ் முன்னாள் முதல்வர் வீரபத்ர சிங்கின் மனைவி பிரதிபா சிங் மற்றும் மகன் விக்ரமாதித்யாவை காங்கிரஸ் பெரிதும் நம்பியுள்ளது. 6 முறை முதல்வராக இருந்த வீரபத்ர சிங் கடந்த ஆண்டு உயிரிழந்தார்.
கடந்த 2017 சட்டமன்றத் தேர்தலில் பல தொகுதிகளில் கடும் போட்டி நிலவியது. மொத்தமுள்ள 68 தொகுதிகளில் 20 தொகுதிகளில் 3000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி, தோல்வி நிர்ணயிக்கப்பட்டது. ஆறு இடங்களில், 1,000 ஓட்டுகள் வித்தியாசம் மட்டுமே இருந்தது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.