ஆருஷி கொலை வழக்கில், சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தால் குற்றம் சாட்டப்பட்ட ஆருஷியின் பெற்றோர்களை அலகாபாத் உயர்நீதிமன்றம் விடுவித்தது. மேலும், இந்த வழக்கில் பெற்றோருக்கு ஆயுள் தண்டனை விதித்த சிபிஐ நீதிமன்றத்தின் செயல்பாட்டை கடுமையாக விமர்சித்துள்ளது அலகாபாத் உயர்நீதிமன்றம்.
ஆருஷியின் தந்தை ராஜேஷ் தல்வார், தனது மகள் ஆருஷி மற்றும் வேலைக்காரர் ஹேம்ராஜ் தகாத உறவில் ஈடுபட்டுக் கொண்டிருந்ததை பார்த்ததால், இருவரையும் கொலை செய்ய அப்பொழுது தான் முடிவு செய்தார். இது தான் கொலைக்கான நோக்கமாக இருந்தது என சிபிஐ தனது அறிக்கையில் தெரிவித்திருந்தது.
ஆனால், டாக். சுனில் குமார் தோஹ்ரே நடத்திய பிரேத பரிசோதனை அறிக்கையை வைத்து அலகாபாத் உயர்நீதிமன்றம் கூறுகையில், "எந்தவொரு பாலியல் தாக்குதலுக்கும் ஆருஷி உட்படுத்தப்பட்டதாக ஒரு அறிகுறி கூட இல்லை. இந்த வழக்கில் முன்னதாக தீர்ப்பளித்த சிபிஐ நீதிமன்ற நீதிபதி, சம்பவம் பற்றி தன் மனக்கற்பனைக்கு உயிரூட்டம் கொடுத்துள்ளார்" என்று விமர்சனம் செய்துள்ளது.
மேலும் படிக்க - தீர்ப்பை முழுவதும் ஆராய்ந்த பின் அடுத்தக்கட்ட நடவடிக்கை: சிபிஐ
மேலும், "சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி திரைப்பட இயக்குநர் போல் செயல்பட்டார்" எனவும் உயர்நீதிமன்றம் விமர்சித்துள்ளது. "தம்பதியினருக்கு எதிராக தீர்ப்பு வழங்கிய சிறப்பு சிபிஐ நீதிமன்ற நீதிபதி எஸ்.லால், திரைப்பட இயக்குநர் போல் இங்கொன்றும் அங்கொன்றுமாக கிடைத்த தரவுகளை ஒன்றிணைத்து, உண்மையில் என்ன நடந்தது என்பது பற்றிய யோசனையின்றி செயல்பட்டுள்ளார். அதாவது தல்வார் தம்பதியினர், மகள் ஆருஷியையும் ஹேம்ராஜையும் கொலை செய்து விட்டு ஆதாரங்களை அழித்து விட்டார் என்று தவிர்க்க முடியாத வகையில் சிபிஐ நீதிமன்ற நீதிபதி நம்பியுள்ளார்" என உயர்நீதிமன்றம் தன் தீர்ப்பில் தெரிவித்துள்ளது.
உயர்நீதிமன்ற நீதிபதி ஏ.கே.மிஸ்ரா, சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி எஸ்.லால் குறித்து கூறுகையில், "கூடுதல் ஆர்வம் மற்றும் உற்சாகம் பீறிட, பாரபட்சமான குறுகிய அணுகுமுறையில், மதிப்பீடுக்கும் உண்மைத் தரவுகளுக்கும் இடம் கொடுக்காமல் தன்னுடைய மனக்கற்பனைக்கு வடிவம் கொடுத்து தீர்ப்பு வழங்கியுள்ளார்’ என்று கூறியுள்ளார்.
மேலும் படிக்க - ஆருஷி கொலைக்கு இனி யார் விடை அளிப்பார்கள்?
மேலும், “விசாரணை நீதிமன்ற நீதிபதி சட்டத்தின் அடிப்படைகளை கருத்தில் கொள்ளாமல் கொடுக்கப்பட்ட தரவுகள் மற்றும் சூழ்நிலைகளுக்கு இது பொருந்துமா என்று ஆராயாமல், இதே வழக்கின் வேறுபல சூழ்நிலைகளையும் கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் தீர்ப்பு வழங்கியது தெரியவருகிறது. சிபிஐ நீதிமன்ற நீதிபதி தன்னுடைய கற்பனை, உணர்வுக்கேற்ப விஷயங்களை முன் கூட்டியே தீர்மானித்துள்ளார். தவறான அனுமானத்தில், துண்டு துண்டான ஆதாரங்களை தன் கற்பனை வளத்தினால் இணைத்து, அவர் இந்த தீர்ப்பை வழங்கியிருக்கிறார்” என்று கடுமையாக விமர்சனம் செய்துள்ளார் உயர் நீதிமன்ற நீதிபதி மிஸ்ரா.