அமர்நாத் யாத்ரீகர்கள் மீது நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலில் தொடர்புடைய லஷ்கர் - இ - தொய்பா தீவிரவாத அமைப்பின் முக்கிய கமாண்டர் உள்பட தீவிரவாதிகள் இரண்டு பேர் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளனர்.
ஜம்மு - காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரின் புறநகர் பகுதியில் லஷ்கர் - இ - தொய்பா தீவிரவாத அமைப்பின் முக்கிய கமாண்டர் அபு இஸ்மாயில் பதுங்கியிருப்பதாக கிடைத்த ரகசிய தகவலையடுத்து, பாதுகாப்பு படையினர் மற்றும் போலீசார் அப்பகுதியை சுற்றி வளைத்தனர்.
அதன்பின்னர், நடைபெற்ற சண்டையில் அபு இஸ்மாயில் உள்பட தீவிரவாதிகள் இரண்டு பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். தொடர்ந்து அப்பகுதியில் சண்டை நடைபெற்று வருகிறது என்பது கவனிக்கத்தக்கது. அதேசமயம், ஸ்ரீநகரில் தொலைத்தொடர்பு சேவை இடைக்காலமாக தடை செய்யப்பட்டுள்ளது என்ற தகவலும் வெளியாகியுள்ளது.
அமர்நாத் யாத்திரை சென்று விட்டு குஜராத் மாநில யாத்ரீகர்கள், ஜம்முவுக்கு கடந்த ஜூலை மாதம் 10-ம் தேதி இரவு பேருந்தில் திரும்பி வந்து கொண்டிருந்தனர். பேருந்து அனந்தநாகின் கானாபால் எனுமிடதுக்கு வந்த போது, அதன் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர்.
தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பெண்கள் ஆறு பேர் உள்பட எட்டு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 19 பேர் படுகாயமடைந்தனர். இந்த தாக்குதலுக்கு நாடு முழுவதும் கடும் கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டது.
இந்தியா மட்டுமல்லாமல் வெளிநாடுகளில் இருந்தும் கண்டனக் குரல்கள் எழுந்த இந்த தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவர் அபு இஸ்மாயில் என்பது குறிப்பிடத்தக்கது.