டெல்லியில் 51 வயதான ஒருவரால் தொடர் பாலியல் வன்புணர்வுக்கு ஆளான பத்தாம் வகுப்பு மாணவி ஒருவர், பள்ளிக்கூடத்தின் கழிவறையில் குழந்தை பெற்றெடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லியை சேர்ந்த 15 வயது சிறுமி ஒருவர் அங்குள்ள அரசு பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில், கடந்த 20-ஆம் தேதி பள்ளியில் தேர்வெழுதிக் கொண்டிருக்கும்போது வயிறு வலிக்கிறது எனக்கூறி அந்த மாணவி கழிவறைக்கு சென்றார். ஆனால், வெகுநேரமாகியும் மாணவி வகுப்பறைக்கு வராததால், சந்தேகமடைந்த பள்ளி ஆசிரியர்கள் கழிவறைக்கு சென்று பார்த்தனர்.
அப்போது அந்த மாணவி கழிவறையிலேயே குழந்தை பெற்றெடுத்து மயக்கமடைந்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து, பள்ளி நிர்வாகம் இச்சம்பவம் குறித்து காவல் துறையினருக்கு தகவல் அளித்தனர்.
இதன்பின்பு, அங்கு வந்த காவல் துறையினர் மயக்கம் தெளிந்த மாணவியையும், குழந்தையையும் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு பரிசோதனையில், மாணவி 26 வாரங்கள் கர்ப்பமாக இருந்ததும், குறை பிரசவத்தில் குழந்தை பிறந்ததால் அது முழு வளர்ச்சியை அடையவில்லை என்பதும் தெரியவந்தது.
மயக்கம் தெளிந்த மாணவியிடம் காவல் துறையினர் விசாரித்ததில், வீட்டின் அருகில் வசித்த 51 வயதான அப்துல் கஃபார் என்பவர் மாணவியை ஏதேனும் காரணம் சொல்லி, தனது அறைக்கு அழைத்துவந்து பாலியல் வன்புறுத்தல் செய்தது தெரியவந்தது.
இதேபோல், கடந்த ஏழு மாதங்களில் மாணவியை எட்டு முறை பாலியல் வன்புறுத்தல் செய்தது தெரியவந்தது. மேலும், ஒவ்வொரு முறையும் மாணவி இதனை யாரிடமும் சொல்லக்கூடாது என்பதால் ரூ.500-800 வரை கொடுத்தனுப்பியதும் விசாரணையில் வெளியானது.
இதன்பின், மாணவிக்கு அடிக்கடி வயிற்றுவலி ஏற்பட்ட நிலையில், அதுகுறித்து மாணவிக்கும், பெற்றோருக்கும் எந்தவித சந்தேகமும் ஏற்படவில்லை. ஆனால், அப்துல் கஃபார் மாணவி கர்ப்பமாக இருக்கலாம் என்பதை தெரிந்துகொண்டு, கருக்கலைப்பு மாத்திரைகளை வாங்கி கொடுத்துள்ளார். இதனால், மாணவி குறைபிரசவத்தில் குழந்தை பெற்றெடுக்க நேரிட்டது.
விசாரணைக்குப் பின் குற்றம்சாட்டப்பட்ட அப்துல் கஃபாரை காவல் துறையினர் கைது செய்தனர். அவர் மீது இந்திய தண்டனை சட்டம் பிரிவு 376 மற்றும் பாக்சோ எனப்படும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறை தடுப்பு சட்டத்தின் கீழும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.