கோயம்புத்தூரில் வழக்கு ஒன்றில் ஆஜராக டெல்லி திகார் சிறையிலிருந்து அழைத்து வரப்பட்ட கைதி சுகேஷ் சந்திரசேகர், காவல் துறையினரின் முழு ஒத்துழைப்புடன் பெங்களூரு வீதிகளில் தன் தோழியுடன் சுதந்திரமாக சுற்றித்திரிந்ததும், 3 விலையுயர்ந்த கார்களை வாங்கியதும், வருமான வரித்துறையினர், டெல்லி காவல் துறை ஆணையரிடம் அளித்த அறிக்கையில் தெரியவந்துள்ளது.
இரட்டை இலை சின்னத்தை பெற டிடிவி தினகரனுக்காக, தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் தர முயன்றதாக தொடரப்பட்ட வழக்கில் கைதானவர் சுகேஷ் சந்திரசேகர். தற்போது, டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
சுகேஷ் சந்திரசேகர் மீது தமிழ்நாடு, கேரளா, கர்நாடகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில், பண முறைகேடு வழக்குகள் உள்ளன. இந்நிலையில், கோயம்புத்தூரில் சுகேஷ் மீது தொடரப்பட்ட முறைகேடு வழக்கு ஒன்றில் ஆஜராவதற்காக, அவ்வப்போது டெல்லி காவல் துறையின் பாதுகாப்புடன் அழைத்து வரப்படுவார்.
இந்நிலையில், கடந்த 12-ஆம் தேதி அந்த வழக்கில் ஆஜராவதற்காக, 9 பேர் அடங்கிய டெல்லி காவல் துறையின் பாதுகாப்புடன் கோயம்புத்தூர் அழைத்து வரப்பட்டார். அப்போது, காவல் துறையின் ஒத்துழைப்புடன் சுகேஷ் சந்திரசேகர், தன் தோழி லீனா மரியாபாலுடன் பெங்களூருவில் சுதந்திரமாக வலம் வந்ததாகவும், வணிக வளாகங்களுக்கு சென்று விலையுயர்ந்த பொருட்களை வாங்கியதாகவும், வருமான வரித்துறையினர் டெல்லி காவல் துறை ஆணையரிடம் அளித்த அறிக்கை மூலம் தெரியவந்துள்ளது.
இதுகுறித்து தமிழ் நாளிதழ் ஒன்றில் செய்தி வெளியானது. அதில், வருமான வரித்துறையினரின் அறிக்கையில் உள்ளதாக குறிப்பிடப்பட்டிருந்ததாவது:
கடந்த 9, 10 ஆகிய தேதிகளில் தன் பாதுகாப்புக்காக வந்த டெல்லி காவல் துறையின் ஒத்துழைப்புடன், சுகேஷ் சந்திரசேகர் பெங்களூருவில் சுதந்திரமாக வலம் வந்துள்ளார். மேலும், தன் தோழி லீனா மரியாபாலுடன் வணிக வளாகங்களுக்கு சென்று, விலையுயர்ந்த பொருட்களை வாங்கியுள்ளார். மேலும், 3 சொகுசு கார்களை வாங்கிய அவர், இதுதொடர்பாக சென்னை மற்றும் கோயம்புத்தூரில் உள்ள கார் தரகர்களிடம் பேரம் நடத்தியதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
சொகுசு கார்களை வெளிநாட்டிலிருந்து இந்தியாவுக்குக் கொண்டுவந்து பிரபலங்களுக்கு சுகேஷ் விற்பனை செய்திருக்கிறார். மேலும், சொகுசு கார்கள் மற்றும் கார் பந்தயம் என்றால், அவருக்கு விருப்பம்.
மேலும், அந்த அறிக்கையில் கூறப்பட்டதாவது,
சுகேஷ் சந்திரசேகரின் நடவடிக்கைகளால் எழுந்த சந்தேகம் காரணமாக உளவுத்தகவல்களின் அடிப்படையில், பெங்களூரு விட்டல் மால்யா சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில், வருமான வரித்துறை சார்பில் கடந்த 11-ம் தேதி சோதனை நடத்தப்பட்டது. அதேபோல், பெங்களூருவை அடுத்த நகர்பாவி கிராமத்தில் சுகேஷ் குடும்பத்துக்கு சொந்தமான அடுக்குமாடி குடியிருப்பில் நடத்தப்பட்ட சோதனையில், விலையுயர்ந்த சொகுசு கார்கள், கைக்கடிகாரங்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன.
மேலும், சுகேஷ் வாங்கியதாக கருதப்படும் மெர்சிடெஸ், ஜாக்குவார் பென்ஸ் கார்களை கண்டறியும் முயற்சியும் நடைபெற்று வருகிறது.
சுகேஷை பெங்களூருவுக்கு அழைத்துவந்த போலீஸ் குழுவின் தலைவரான தலைமைக் காவலர் ஜீவன் சந்தர் இந்த புகார்களை மறுத்தார். ”சுகேஷூடன் பெங்களூருவுக்கு கடந்த 11-ஆம் தேதி காலை 7 மணிக்குதான் வந்தடைந்தோம். அங்கு கிருஷ்ணராஜசாகர் ரயில் நிலையத்தில் தங்கினோம். மாலையில், மால்யா சாலையிலுள்ள அடுக்குமாடி குடியிருப்புக்கு சென்றோம். அங்குதான் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டனர்.”, என்று தெரிவித்தார்.
ஆனால், வருமான வரித்துறையினரிடம் அளித்த வாக்குமூலத்தில், சுகேஷ் இதற்கு முரணான தகவல்களை கூறியுள்ளார். “நாங்கள் பெங்களூருவுக்கு கடந்த 9-ஆம் தேதியே வந்துவிட்டோம். என்னுடன் அடுக்குமாடிக் குடியிருப்பில் இரண்டு போலீசார் மட்டுமே தங்கினர். மற்றவர்கள் செயிண்ட் மார்க்ஸ் சாலையில் உள்ள சொகுசு ஹோட்டலில் தங்கினர். நான் கடைகளுக்கு சென்று விரும்பிய பொருட்களை வாங்க பாதுகாப்பிற்காக வந்த உதவி ஆய்வாளர் ராஜேஷ் அனுமதியளித்தார்.”, என கூறியுள்ளார்.
பெங்களூருவில் சுகேஷ் தங்கிய அடுக்குமாடிக் குடியிருப்பில் அவர் சுதந்திரமாக சுற்றி திரிந்ததும், அங்கு அவருக்கு போலீசார் பாதுகாப்புக்காக உடன் இல்லை என்பதும், அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளின் மூலம் உறுதியாகியுள்ளது.
அதேபோல், செயிண்ட் மார்க்ஸ் சாலையில் உள்ள சொகுசு ஹோட்டலில் உள்ள ஆவணங்கள், போலீசார் சுகேஷூடன் தங்காமல், தனியாக தங்கியதை உறுதிப்படுத்துகிறது.
இந்த புகார் குறித்து உரிய விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த அறிக்கையில், வருமான வரித்துறையினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.