பெண்கள் தங்களின் ஆசைகளுக்கும், கட்டளைகளுக்கும் இணங்காதபோது, அவர்களை உடல் ரீதியாக தாக்குவதே பெரும்பாலான ஆண்களின் ஆயுதமாக உள்ளது. ஆனால், 2 வயது ஷபூ என்ன தவறு செய்தாள்? அவளுக்கு ஏன் இந்த தண்டனை.
ஷபூவுக்கு அப்போது 2 வயதுதான். ஒருமுறை அவருடைய அப்பா கொந்தளித்துக்கொண்டே வீட்டுக்குள் நுழைந்து, ஷபூவின் அம்மா மீது ஆசீட் வீசியிருக்கிறார். அந்த அசீட் ஷபூவின் மீதும் விழுந்தது. ஒன்றுமறியாத அக்குழந்தை பலிகடா ஆகினாள். தன் தந்தை ஏன் அம்மா மீது ஆசீட் வீசினார் என, அந்த சம்பவம் நிகழ்ந்து 21 ஆண்டுகளாகியும் ஷபூவுக்கு தெரியாது.
அவருடைய அப்பா, ஆசீட்டை வீசிவிட்டு தப்பித்து ஓடிவிட்டார். அம்மா இறந்துவிட்டார். தான் செய்யாத தவற்றுக்காக தண்டனை அனுபவிக்கும் ஷபூவை வளர்க்க சொந்தங்களும் முன்வரவில்லை. ஆதரவற்றோர் இல்லத்தில் வளர்ந்தார்.
அங்குள்ள மருத்துவர்கள், காப்பாளர்களின் அன்பால், பல இன்னல்களை கடந்து வாழ்க்கையை எதிர்நோக்கினார். தன் முகம் எப்படி இப்படியானது, அந்நேரத்தில் தான் உணர்ந்த வலி கூட ஷபூவுக்கு நினைவில்லை. அவருடைய அப்பாதான் ஆசிட் வீசினார் என்பதே, ஆதரவற்றோர் இல்லத்தில் உள்ளவர்கள் சொல்லித்தான் தெரியும்.
கல்லூரியில் நுழைந்த ஷபூ மற்றவர்களிடம் தனித்தே இருந்தார். தனியாகத்தான் சாப்பிடுவார். கடைசி பெஞ்சில்தான் அமருவார். ஆனால், மெல்ல மெல்ல அவர்களுக்கு நிறைய நண்பர்கள் கிடைத்தனர்.
அசீட் வீச்சால் அவர் தூங்கும்போது கூட ஷபூவின் கண்கள் திறந்துதான் இருக்கும். அப்படியொருமுறை, தோழிகளுடன் இரவு தங்கும்போது அவர் தூங்கிவிட்டார். ஆனால், கண்கள் திறந்துகொண்டிருந்ததால், அவருடைய தோழிகள் பேசிக்கொண்டே இருந்திருக்கின்றனர். அதை சொல்லிச்சொல்லி பின்னாளில் சிரித்திருக்கிறார்கள். “வகுப்பறையில் ஆசிரியர் பாடம் நடத்தும்போது நான் தூங்குவது எவ்வளவு எளிதானது, யாருக்கும் தெரியாது”, என அதையே நகைச்சுவையாகவும், எளிமையாகவும் கடந்துவிடுகிறார்.
அதன்பிறகு, நல்ல வேலையும் அவருக்கு கிடைத்திருக்கிறது. ஆனால், அவருடைய முகத்துக்காகவும், அடிக்கடி கண் சிகிச்சைக்காக மருத்துவரிடம் செல்ல விடுமுறை எடுப்பதாலும் அந்த வேலையிலிருந்து நீக்கப்பட்டார். இப்போது வேறு வேலை தேடிக்கொண்டிருக்கும் ஷபூ, மேடை வடிவமைப்பு, ஆடை வடிவமைப்பில் பெரியாளாக வேண்டும் என்ற லட்சியத்தைக் கொண்டிருக்கிறார்.
தன்னை ஆசீட் வீச்சின் விக்டிமாக பார்ப்பதை அவர் விரும்பவில்லை. அவருடைய அப்பா மீதும் கோபம் இல்லை, மன்னித்துவிட்டார். “எனக்கு அப்பா மீது கோபம் இல்லை. இந்த குற்றத்தை செய்ததற்காக அவரே வருத்தம் கொண்டிருப்பார். அதனை நான் மேலும் அதிகரிக்க விரும்பவில்லை. என் வாழ்க்கையில் வெறுப்பு என்னும் அறைக்கு எந்த இடமும் இல்லை.”, என்கிறார் ஷபூ.
அவருக்கு பிளாஸ்டிக் சர்ஜரிக்காக நீங்கள் உதவி செய்ய நினைத்தால் இந்த லிங்குக்கு செல்லுங்கள்: