கௌரி லங்கேஷ் கொலை வழக்கில் பிரதமர் மோடி மவுனமாக இருந்தால், எனது தேசிய விருதுகளை திருப்பி அளிப்பேன் என்று நான் கூறவில்லை என நடிகர் பிரகாஷ் ராஜ் மறுப்பு தெரிவித்துள்ளார்.
மூத்த பத்திரிகையாளரும், இந்துத்துவா எதிர்ப்பாளருமான கவுரி லங்கேஷ் (55) கடந்த செப்டம்பர் மாதம் 5-ஆம் தேதி பெங்களூருவில், தனது வீட்டின் முன்பு மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார். இதுதொடர்பாக கர்நாடக சிறப்பு புலனாய்வுத் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து கவுரி லங்கேஷின் நெருங்கிய நண்பரான நடிகர் பிரகாஷ் ராஜ், "கவுரி லங்கேஷ் படுகொலை தொடர்பாக பிரதமர் மோடி மவுனமாக இருந்தால், என்னுடைய தேசிய விருதுகளை அரசிடம் திரும்ப அளிக்கவும் தயங்க மாட்டேன்" என்று கூறியதாக நேற்று அனைத்து ஊடகங்களிலும் தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து தனது நிலையை வீடியோ ஒன்றின் மூலம் பேசி பிரகாஷ் ராஜ் தெளிவுப்படுத்தியுள்ளார். அவரது ட்விட்டரில் பக்கத்தில் பதிவிட்டிருக்கும் அந்த வீடியோவில் அவர் பேசியிருப்பதாவது, "தேசிய விருதுகளைத் திரும்ப அளிக்க பிரகாஷ் ராஜ் முடிவெடுத்து விட்டதாக ஊடகங்களில் வெளியான செய்தி கண்டு எனக்கு சிரிப்புதான் வந்தது. தேசிய விருதுகள் என்பது எனக்கு கிடைத்த பெருமை. எனது உழைப்பிற்குக் கிடைத்த அங்கீகாரமான அவற்றைத் திரும்ப அளிக்கும் வகையிலான முட்டாள் நானில்லை.
பத்திரிகையாளர்கள் கௌரி லங்கேஷ் மற்றும் கல்புர்கி ஆகியோர் படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக இளைஞர்கள் மத்தியில் நான் பேசியபோது எனது கருத்தை கூறியது உண்மைதான். அதுபோன்ற சம்பவங்கள் நடைபெற்றுக்கொண்டிருக்கும்போது, அவர்களை யார் கொன்றார்கள் என்பது நமக்குத் தெரியாது. ஆனால், அந்த சம்பவங்களை யார் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள் என்பதை நாம் கவனிக்க வேண்டும். மனிதநேயமற்ற அந்த கொலைகளைக் கொண்டாடிக் கொண்டிருப்பவர்களுக்கு எனது கண்டனங்களைப் பதிவு செய்ததற்காக, என்னை நோக்கி கடுமையான விமர்சனங்கள் உள்ளிட்டவைகள் வைக்கப்பட்டன.
ஆனால், நான் கேட்பதெல்லாம் ஒரே ஒரு கேள்விதான், பத்திரிகையாளர் கௌரி லங்கேஷ் படுகொலை தொடர்பாக பிரதமர் மோடி, தனது கண்டனத்தையோ, கருத்தையோ இதுவரை பதிவு செய்யாதது ஏன்?. நாட்டின் குடிமகன் என்கிற முறையில் இந்த விவகாரத்தில் பிரதமர் மோடி மவுனம் காப்பது எனக்கு வலியையும், வேதனையையும், பயத்தையும் அளிக்கிறது. நான் எந்தவொரு கட்சியைச் சேர்ந்தவரைப் பற்றியும் பேசவில்லை. நான் எந்தவொரு கட்சியையும் சாராதவன். நாட்டின் குடிமகன் என்கிற முறையில் பிரதமரிடம் நான் கேள்வி கேட்கிறேன். இதைக் கேட்பதற்கு எனக்கு உரிமை இருக்கிறது. மற்றபடி இந்த விவகாரம் தொடர்பாக எனது தேசிய விருதுகளைத் திரும்ப அளிப்பதாக நான் எந்த இடத்திலும் கூறவில்லை’ என்று தெரிவித்துள்ளார்.