பிரபல மலையாள திரைப்பட நடிகை பாவனா கடத்தப்பட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளி யாராக இருந்தாலும் தண்டிக்கப்படுவர் என, கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
நடிகை பாவனா கடந்த பிப்ரவரி மாதம் 17-ஆம் தேதி தனது காரில் சென்றுகொண்டிருந்தபோது மர்ம நபர்களால் கடத்தப்பட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். மேலும், பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டபோது புகைப்படங்கள் மற்றும் வீடியோவும் எடுக்கப்பட்டதாக குற்றம்சாட்டப்பட்டது.
இந்த வழக்கின் முக்கிய குற்றவாளியாகக் கருதப்படும் புல்சார் சுனி சம்பவம் நடைபெற்ற 6 நாட்களுக்குப் பின் கைது செய்யப்பட்டனர். மேலும், அதனுடன் தொடர்புடைய பலரும் கைது செய்யப்பட்டனர்.
விசாரணையில் மலையாள நடிகர் திலீப், அவரது மனைவி காவ்யா மாதவன், காவ்யா மாதவனின் தாயார் ஷியாமளா, இயக்குநர் நாதிர்ஷா உள்ளிட்டோருக்கும் தொடர்பிருப்பதாக தெரியவந்தது. இதையடுத்து, அண்மையில் திலீப் மற்றும் இயக்குநர் நாதிர்ஷா ஆகியோரிடம் காவல் துறையினர் விடியவிடிய விசாரணை நடத்தினர்.
மேலும், காவ்யா மாதவன் மற்றும் அவரது தாயாரிடமும் விசாரணை நடத்திய காவல் துறையினர் அவரது அலுவலக அறையிலும் சோதனை மேற்கொண்டனர். இதையடுத்து, பாவனாவை கடத்தி பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட வீடியோ காட்சிகள் அடங்கிய மெமரி கார்டு காவல் துறையினருக்கு கிடைத்தது.
இதையடுத்து, முக்கிய ஆதாரங்கள் கிடைத்த உடன் நடிகர் திலீப், இயக்குநர் நாதிர்ஷா உள்ளிட்ட முக்கிய பிரபலங்கள் இந்த வழக்கு தொடர்பாக கைது செய்யப்படுவர் என காவல் துறையினர் தரப்பில் கூறப்படுகிறது.
இந்நிலையில், கடந்த புதன் கிழமை பெண்கள் அமைப்பு ஒன்றின் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், இந்த வழக்கில் குற்றவாளிகள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்படுவர் என தெரிவித்தார்.
நடிகர் திலீப் உள்ளிட்ட முக்கிய பிரபலங்கள் இந்த வழக்கில் கைது செய்யப்படுவர் என தகவல் வெளியான நிலையில், பினராயி விஜயன் இவ்வாறு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
மேலும், வழக்கின் விசாரணை சரியான கோணத்தில் செல்கிறது எனவும், காவல் துறையினர் தங்களது விசாரணையை நிறுத்தவில்லை எனவும் கூறினார். இச்சம்பவத்தின் மூளையாக செயல்பட்டவரை பிடிக்கும் பணியில் காவல் துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாக பினராயி விஜயன் தெரிவித்தார்.
இந்த வழக்கில் காவல் துறையினருக்கு முழு சுதந்திரம் அளிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட அவர், வழக்கில் பெரும் புள்ளிகளுக்கு தொடர்பிருந்தாலும் அவர்களும் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வரப்படுவர் என தெரிவித்தார்.
காவல் துறையினர் விசாரணையில் தனக்கு முழு நம்பிக்கை இருப்பதாக கூறிய பினராயி விஜயன், சம்பவம் நடைபெற்ற உடனேயே துரிதமாக செயல்பட்டு குற்றவாளிகள் கைது செய்யப்பட்டதாக தெரிவித்தார்.
மேலும், தனது தலைமையிலான அரசு பெண்களுக்கு ஆதரவாக செயல்படுவதற்கான அனைத்து தேவையான செயல்பாடுகளையும் எடுத்து வருவதாக கூறினார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.