சத்தீஸ்கர் பா.ஜ.க.வின் முன்னாள் மாநில தலைவர், இந்துத்துவா, பழங்குடியின மூத்த தலைவர் நந்த் குமார் சாய் ஞாயிற்றுக்கிழமை அக்கட்சியில் இருந்து விலகி நேற்று (திங்கட்கிழமை) முதல்வர் பூபேஷ் பாகல் மற்றம் மூத்த தலைவர்கள் முன்னிலையில் காங்கிரஸில் இணைந்தார். சத்தீஸ்கர் மாநிலத்தில் விரைவில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் நந்த் குமார் சாய் காங்கிரஸில் இணைந்திருப்பது அரசியல் வட்டாராத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சாய் தனது விலகல் முடிவை அறிவித்த நிலையில் அவரது முடிவை மாற்ற பா.ஜ.க பெரும் முயற்சி செய்தது. மூத்த தலைவர்கள் அவரை தொலைபேசியில் அழைத்து பேசினர். அதே நேரத்தில் பா.ஜ.க தலைவர்கள் அவரது இல்லத்திற்கு வெளியே காத்திருந்தனர்.
பா.ஜ.க 77 வயதான சத்தீஸ்கர் மாநிலத்தின் முன்னாள் மாநில தலைவரை தக்க வைக்க முயற்சிப்பதில் ஆச்சரியமல்ல. 1980-ல் பா.ஜ.க தொடங்கப்பட்டதில் இருந்தே, இந்துத்துவாவை தீவிரமாக பின்பற்றுபவரும், அனல் பறக்கும் பேச்சாளராகவும் அறியப்பட்டவர் சாய். இந்நிலையில் மாநிலத்திலுள்ள பழங்குடியின மக்களின் குறைகளை அறியவும், பா.ஜ.கவின் குற்றச்சாட்டுகள் தொடர்பாகவும் தெரிந்து கொள்ள காங்கிரஸுக்கு சாய் தேவை.
சாய் பழங்குடியினராக இருந்தாலும், நீண்ட காலமாக அரசியல் நம்பிக்கைகள் காரணமாக அவர் மதுபானமோ, அசைவ உணவோ சாப்பிடுவதில்லை. ஜாஷ்பூர் பழங்குடியினத்தைச் சேர்ந்த இவர், பழங்குடியினரின் மதமாற்றத்துக்கு எதிராகவும் குரல் கொடுத்து வருகிறார். அண்டை மாநிலமான மத்திய பிரதேசத்திலும் செல்வாக்கு உள்ளவர். மேலும் மத்தியப் பிரதேச பாஜக பிரிவு தலைவராகவும் இருந்தார்.
நான் ஓரங்கட்டப்பட்டேன்
காங்கிரஸில் இணைந்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய சாய், “அடல்ஜி (அடல் பிஹாரி வாஜ்பாய்) முதல் சுஷ்மா ஸ்வராஜ்ஜி வரை அனைத்து பெரிய தலைவர்களுடனும் நான் பணியாற்றியுள்ளேன். நான் வெளியேறுவது மிகவும் கடினமாக உள்ளது. ஆனால் பாஜக அப்போது இருந்தது போல் இப்போது இல்லை. அடல்ஜி காலத்திலோ, பிரமோத் மகாஜன்ஜி காலத்திலோ இருந்த கட்சி அல்ல. நான் பணியாற்றிய தலைவர்கள் எவரும் இன்று இல்லை, ஒரு காலத்தில் இருந்த சிந்தனையும் தற்போது இல்லை.
கடந்த சில ஆண்டுகளாக “சரிவில்” இருந்த பாஜகவை வலுப்படுத்துவதற்கான அத்தனை வழிகளையும் நான் முயற்சித்தேன். 2018 ஆம் ஆண்டு கட்சியின் தோல்விக்கு முன்னதாகவே தலைவர்களை எச்சரித்தேன். ஆனால் அது எந்த விளைவையும் ஏற்படுத்தவில்லை. எனக்கு எந்தப் பதவியும் வழங்கப்படவில்லை, அதனால் என்னால் எந்தக் கட்சிக் கூட்டங்களுக்கும் செல்ல முடியவில்லை, அவர்கள் என்னை அழைக்கவும் இல்லை. நான் டெல்லியில் உள்ள மூத்த பாஜக தலைவர்களை ஒரு வருடத்திற்கும் மேலாக தொடர்பு கொள்ள முயற்சித்தேன், ஆனால் அதற்கு ஏற்ற பதில் கிடைக்கவில்லை. அவர்கள் என்னைப் பற்றி அதிகம் கவலைப்படுவதில்லை என்பதை உணர்ந்தேன். ஒருவேளை என் வயது காரணமாக இருக்கலாம். மத்திய தலைவர்கள் கூட அதிக ஆர்வம் காட்டவில்லை, நான் இப்போது அவர்களுக்கு தேவையில்லை என்பதை உணர்ந்தேன்.
2003-ல் அஜித் ஜோகி தலைமையிலான காங்கிரஸ் சர்காரை கவிழ்க்க உதவியதாக பாஜகவை எச்சரித்த சாய் கூறினார். “நான் முதலமைச்சர் ஆக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் நான் ஓரங்கட்டப்பட்டேன். எனக்கு எதிராக சதி செய்தவர்களை நான் குறிப்பிட விரும்பவில்லை. இதைப் பற்றி நான் ஒரு செய்தியாளர் சந்திப்பில் சுட்டிக்காட்டியிருந்தேன். மேலும் பிரச்சினைகள் உருவாக்கப்படுகின்றன, எங்கள் கட்சி பேச வேண்டும். ஆனால் எதுவும் நடக்கவில்லை. காங்கிரஸில் தனக்கு எந்த பதவியும் வழங்கப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்படவில்லை, ஆனால் பழங்குடியினருக்கு கல்வி வழங்க பாடுபட வேண்டும் என்று கட்சியிடம் நான் கூறி உள்ளேன்.
அடுத்த 6 மாதங்களில் பாஜக கடினமாக உழைக்கவில்லை என்றால், அது நீண்ட காலத்திற்கு மீண்டும் ஆட்சிக்கு வராமல் போகலாம் என்றும் சாய் கூறினார். 2018 தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றது என்று சொல்லமாட்டேன், ஆனால் பாஜகதான் தோல்வியடைந்தது” என்று கூறினார். பத்திரிக்கையாளர் சந்திப்புக்குப் பின் நந்த் குமார் சாய் முதல்வர் பூபேஸ் பாகலுடன் கட்சி பொது நிகழ்ச்சிக்கு சென்றார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“