மத்திய பிரதேச மாநிலத்தில், 3 வயது பெண் குழந்தை மற்றும் 100 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகளை விட்டுவிட்டு, ஜெயின் சமூகத்தை சேர்ந்த தம்பதியினர் துறவறம் மேற்கொள்ளவிருந்த நிலையில், அன்றைய தினம் சில எதிர்ப்புகள் கிளம்பின. இதனால், கணவர் மட்டும் துறவறம் மேற்கொண்ட நிலையில், மனைவி தீட்சை பெறும் நிகழ்வு தள்ளிப்போனது. இந்நிலையில், மனைவியும் தீட்சை பெற்று துறவறம் பூண்டார்.
மத்திய பிரதேச மாநிலம் நீமுச் மாவட்டத்தை சேர்ந்த தம்பதியினர் சுமித் ரத்தோர் (வயது 35) மற்றும் அனாமிகா (வயது 34). இவர்களுக்கு மூன்று வயதில் இப்யா என்ற மகள் உள்ளார். ஜெயின் சமூகத்தை சேர்ந்தவர்களான இவர்களது குடும்பம் அரசியல் மற்றும் தொழிலில் மிகுந்த செல்வாக்கு உள்ளவர்கள். இவர்களுக்கு 100 கோடிக்கும் மேல் சொத்துக்கள் உள்ளன. அனாமிகாவின் தந்தை நீமுச் மாவட்டத்தின் முன்னாள் பாஜக தலைவர் என்பது குறிப்பிடத்தக்கது. சுமித் ரத்தோரின் தந்தை ராஜேந்திர சிங் ரத்தோர், சிமெண்ட் தொழிலில் பெரும் செல்வந்தர் ஆவார்.
இந்நிலையில், சுமித் ரத்தோர் மற்றும் அனாமிகா ஆகியோர் 100 கோடி ரூபாய் சொத்து மற்றும் 3 வயது மகள் இப்யா ஆகியவற்றை விட்டுவிட்டு துறவறம் மேற்கொள்ள முடிவெடுத்தனர்.
இதையடுத்து, குழந்தையை தாங்கள் வளர்த்துக் கொள்வோம் என தம்பதியினரின் குடும்பத்தினர் தெரிவித்தனர்.
இந்நிலையில், 3 வயது குழந்தையை விட்டுவிட்டு தம்பதியினர் துறவறம் மேற்கொள்வதற்கு எதிர்ப்பு கிளம்பியது. துறவறத்தை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனு ஒன்றில், குழந்தையின் எதிர்காலத்துக்காக அத்தம்பதியினர் மேற்கொண்ட முடிவுகளை விரிவான அறிக்கையாக தாக்கல் செய்யுமாறு, காவல் துறைக்கு குஜராத் குழந்தைகள் நல ஆணையம் உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது. மேலும், இதுகுறித்து தம்பதிகள் உரிய பதிலளிக்க தேசிய மனித உரிமைகள் ஆணையமும் உத்தரவிட்டது.
இந்நிலையில், சூரத்தில் இவர்கள் இருவரும் அகில் பாரதிய சதமார்கி சம்ப்ரதாய் எனும் ஜெயின் அமைப்பை சேர்ந்த சுதமார்கி ஜெயின் ஆச்சார்யா ராம்லால் மகராஜ் என்பவரிடம் க்கட்லன்ல்ந்த 23-ஆம் தேதி தீட்சை வாங்கி துறவறம் மேற்கொள்ளவிருந்தனர். தீட்சை வாங்கும் நிகழ்வில் அகில் பாரதிய சதமார்கி சம்ப்ரதாய் அமைப்பை சேர்ந்த பலரும் கலந்துகொண்டனர். இந்நிலையில், அவர்கள் துறவறம் மேற்கொள்ள எதிர்ப்பு கிளன்பியதால், சுமித் ரத்தோர் மட்டும் அன்றைய தினம் தீட்சை வாங்கினார். அனாமிகாவால் அன்றைய தினம் தீட்சை வாங்க இயலவில்லை.
இந்நிலையில், அனாமிகா சுதமார்கி ஜெயின் ஆச்சார்யா ராம்லால் மகராஜ் முன்னிலையில் திங்கள் கிழமை தீட்சை பெற்றார்.
தேசிய மனித உரிமைகள் ஆணைய உத்தரவுபடி, அனாமிகாவை விசாரணை செய்ய வந்த அதிகாரிகள் மற்றும் காவல் துறையினரிடம், தன் பெற்றோரும், கணவரின் பெற்றோரும் மிகவும் வசதியான குடும்பம் என்பதால், தான் துறவறம் சென்றுவிட்டால் குழந்தை ஆதரவற்றதாகிவிடாது என பதிலளித்தார். மேலும், தன் குழந்தையை சகோதரர் தத்தெடுத்து நல்ல முறையில் வளர்ப்பர் எனவும் அதிகாரிகளுக்கு பதிலளித்தார்.
தன் குழந்தையை தத்து கொடுப்பதற்கான ஆவணங்களையும் அவர் அதிகாரிகளிடம் சமர்ப்பித்தார்.