/indian-express-tamil/media/media_files/2025/09/29/canada-pm-2025-09-29-11-58-08.jpg)
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நிர்வாகத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட $100,000 எச் 1பி (H-1B) விசா விண்ணப்பக் கட்டணத்தால் பாதிக்கப்படும் திறன்மிக்க நிபுணர்களை தனது நாடு வரவேற்கும் என்று கனடாவின் பிரதமர் மார்க் கார்னி அவர்கள் தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்
கனடாவின் வெளியுறவு அமைச்சர் அனிதா ஆனந்த் முதல் மறையாக இந்திய வருகைக்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதற்கு மத்தியில் இந்த அறிவிப்பு, வந்துள்ளது. இந்தப் பயணம் அக்டோபர் மாத நடுப்பகுதியில் திட்டமிடப்பட்டுள்ளது என தி இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகை தெரிவித்துள்ளது.
ஜஸ்டின் ட்ரூடோவின் அரசாங்கத்தின் கீழ் இரண்டு ஆண்டுகளாகச் சிரமமான உறவுகளுக்குப் பிறகு, கார்னியின் அறிவிப்பும், அனிதா ஆனந்தின் வருகையும் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளைச் சீரமைப்பதில் முக்கியத்துவம் பெறுவதாக பார்க்கப்படுகிறது. இது இந்தியா குறித்த கனடா அரசாங்கத்தின் அணுகுமுறையில் ஒரு மாற்றத்தைப் பிரதிபலிக்கிறது.
நேற்று முன்தினம் (செப்டம்பர் 27) லண்டனில் பேசிய கார்னி, "முன்பு எச் 1பி (H-1B) விசாக்கள் என்று அழைக்கப்பட்டு பெற்றவர்களை ஈர்க்கும் வாய்ப்பு தெளிவாக உள்ளது. நான் அதை எளிமைப்படுத்துகிறேன். ஒரு பெரிய குழுமம் தொழில்நுட்பத் துறையில் உள்ளது. எச் 1பி (H-1B) விசா வைத்திருப்பவர்களில் பலர் அமெரிக்காவிற்கான விசாக்களைப் பெற மாட்டார்கள். இவர்கள் திறமையானவர்கள், இது கனடாவிற்கு ஒரு வாய்ப்பாகும். இது குறித்து விரைவில் ஒரு முன்மொழிவைக் கொண்டு வருவோம்,” என்று அவர் கூறினார்.
டிரம்ப், புதிய எச் 1பி (H-1B) விசாக்களுக்கான கட்டணங்களை $100,000 என அதிரடியாக உயர்த்திய சில நாட்களிலேயே கார்னியின் இந்த அறிக்கை வந்துள்ளது. இதனால், இந்த விசாக்களை பயன்படுத்தும் சுமார் 72% இந்திய நிபுணர்கள் மத்தியில் பீதியும் நிச்சயமற்ற தன்மையும் ஏற்பட்டுள்ளது. இந்தியா இந்த விவகாரத்தில் அமெரிக்கத் தரப்பினருடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதுடன், இந்திய நிபுணர்களுக்கு இதேபோன்ற வாய்ப்புகளை வழங்கத் தயாராக இருக்கும் புதிய பங்காளர்களை வரவேற்பதற்கும் தயாராக உள்ளது.
முன்னாள் கனடா பிரதமர் ட்ரூடோ, கனடாவை மையமாகக் கொண்ட காலிஸ்தான் பிரிவினைவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் 2023 ஜூன் மாதம் கொல்லப்பட்டதில் இந்திய அரசு முகவர்களின் "சாத்தியமான" தொடர்பு இருப்பதாக 2023 செப்டம்பரில் குற்றம் சாட்டிய பிறகு, இந்தியா-கனடா உறவுகள் மோசமடைந்தன. இந்தக் குற்றச்சாட்டை இந்தியா அபத்தமானது மற்றும் நோக்கமுடையது என்று நிராகரித்தது.
இந்த பதற்றம் காரணமாக இரு நாடுகளுக்கு இடையிலான இராஜதந்திர உறவுகள் குறைக்கப்பட்டன; இரு தரப்பினரும் உயர் ஆணையர்களையும் மற்ற மூத்த தூதர்களையும் வெளியேற்றினர். தற்போது இரு நாடுகளுக்கு இடையிலான இந்த உறவுகளைச் சரிசெய்யும் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. கார்னியும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும் இந்த ஆண்டு ஜூன் மாதம் கனடாவில் சந்தித்துப் பேசினர்.
கனடாவின் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் நதாலி ஜி. ட்ரோயின் மற்றும் துணை வெளியுறவு அமைச்சர் டேவிட் மோரிசன் ஆகியோர் வெளியுறவு அமைச்சரின் வருகைக்கான தளத்தை அமைக்கும் வகையில் செப்டம்பர் 18-19 தேதிகளில் இந்தியாவில் இருதரப்புப் பேச்சுவார்த்தை நடத்தினர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.