சில வருடங்களுக்கு முன்புதான் அந்த நீதிமன்றத்திற்கு சிறிது தூரம் தள்ளியிருந்த பேருந்து நிலையத்தில் தங்க வேண்டும் என்ற நிர்க்கதிக்கு அந்த திருநங்கை தள்ளப்பட்டார். திருநங்கை என்ற ஒரே காரணத்தைக் கூறி அவருக்கு விடுதிகளில் அறை மறுக்கப்பட்டது. ஆனால், தன்னுடைய கடுமையான உழைப்பினால், அவமானங்களை எல்லாம் தனக்கான நம்பிக்கையாக மாற்றி இந்தியாவிலேயே முதல் திருநங்கை நீதிபதியாக உயர்ந்திருக்கிறார்.
மேற்குவங்க மாநிலத்தை சேர்ந்த ஜோயிதா மோதோக்தி தான் அந்த பெருமைக்குரியவர். கல்லூரியிலிருந்து பாதியிலேயே நிறுத்தப்பட வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டார். திருநங்கை என்பதால், சக மாணவ, மாணவிகள் ஜோயிதாவை கேலி செய்தனர். திருநங்கை என்று தெரிந்தவுடன் பெற்றோர் அவரை வீட்டை விட்டு துரத்தினர்.
பிறகு கால் செண்டரில் வேலைக்கு சேர்ந்தார் ஜோயிதா. அங்கும் மற்றவர்கள் ஜோயிதாவை அவமதித்ததால் இரண்டே மாதங்களில் அங்கிருந்து வெளியேறினார். “என்னை அவர்கள் உடல் ரீதியாக பாலியல் துன்புறுத்தல் செய்யவில்லை. ஆனால், அவர்கள் என்னை பற்றி ஜோக் செய்தார்கள். என்னை பற்றியே பேசினார்கள். என்னை முறைப்பார்கள். அதனால் தான் அங்கிருந்து வெளியேறினேன்”, என ஜோயிதா தான் எதற்காக அந்த வேலையிலிருந்து வெளியேறினேன் என்பது குறித்து ஒருமுறை சொன்னார். அவருடைய பாலின அடையாளங்களுக்காக எல்லா இடங்களிலிருந்தும் துரத்தப்பட்டார். கடைசியில் தெருவில் மற்றவர்களிடம் கையேந்தும் நிலைக்கு ஆளானார். அதுமட்டுமல்லாமல், தன் வாழ்வாதாரத்திற்காக திருமணம் உள்ளிட்ட சுப காரியங்களில் வாழ்த்து பாட்டு பாடி ஆடும், வேலையையும் செய்தார்.
தன்னால் மாற்றியமைக்க முடியாத, இயற்கையாக அமைந்த தன் பாலினத்திற்காக பல அவமானங்களை ஜோயிதா சந்தித்தார். 2010-ஆம் ஆண்டில் வீட்டை விட்டு வெளியே வந்த அவருக்கு எந்த விடுதிகளிலும் அறை தரப்படவில்லை. அதனால், மேற்குவங்க மாநிலத்தின் தினாஜ்பூர் மாவட்ட நீதிமன்றத்திற்கு அருகே உள்ள பேருந்து நிலையத்தில் தங்க வேண்டிய அவல நிலை ஏற்பட்டது.
பிறகு, சமூக சேவகராக உயர்ந்தார். தன்னைப்போன்று சமூகத்தில் ஒடுக்கப்பட்ட திருநங்கைகளுக்காக குரல் கொடுக்க ஆரம்பித்தார். அதுமட்டுமல்ல எல்.ஜி.பி.டி. எனப்படும் மாற்றுப் பாலின சுதந்திரத்தைக் கொண்டவர்களுக்காக அமைப்பு ஒன்றை துவங்கினார்.
இந்த அமைப்பின் மூலம் அரசாங்கத்திலிருந்து மாற்றுப்பாலினத்தவர்களுக்கு கிடைக்க வேண்டிய தேவைகளை நிறைவேற்றினார். ஆதார் கார்டு, குடும்ப அட்டை, அரசாங்க வேலை பெறுதல் உள்ளிட்ட தேவைகளை நிறைவேற்றினார். இப்போது, இந்த அமைப்புடன் 93 துணை அமைப்புகள் உள்ளன.
பாலியல் தொழிலாளிகளாக இருந்து தற்போது எந்தவித ஆதரவும் இல்லாதவர்களுக்கான முதியோர் இல்லத்தையும் உருவாக்கினார்.
அவருடைய இந்த சமூக பணிகளுக்காக கடந்த தினாஜ்பூர் மாவட்டத்தில் உள்ள லோக் அதாலத் நீதிமன்றத்தில் நீதிபதியாக நியமிக்கப்பட்டிருக்கிறார். நாட்டிலேயே முதன்முறையாக திருநங்கை ஒருவர் இப்பணியில் அமர்த்தப்படுவது இதுவே முதல்முறையாகும்.
கடந்த சனிக்கிழமை ‘நீதிபதி பணியில் இருக்கிறார்’ என பொறிக்கப்பட்ட வாசகங்கள் அடங்கிய காரில் வந்து பதவியேற்றுக் கொண்டார்.
இதே நீதிமன்றத்தின் சிறிது தூரம் தள்ளிதான் அவர் 2010-ஆம் ஆண்டில் படுத்துறங்கிய பேருந்து நிலையம் உள்ளது. தான் கூனிக்குறுகிய இடத்திலிருந்து ஜோயிதா மீண்டு எழுந்திருக்கிறார்.
பதவியேற்றவுடன் அவர் கூறிய வார்த்தைகள்: “மாற்றுப்பாலினத்தவர்கள் குறித்த அணுகுமுறையை மாற்றுவதற்கான வாய்ப்பாக இதைக் கருதுகிறேன்.”, என கூறினார்.