ஆக்ராவில் 8 வயது மாணவி ஒருவரை ஆசிரியர் தண்டனையாக வகுப்புக்குள் பூட்டிவைத்ததாக குற்றம்சாட்டப்படும் நிலையில், அங்கிருந்து தப்பிக்க முயன்றபோது மாணவியின் தலை கதவுகளுக்கிடையே சுமார் இரண்டு மணிநேரம் சிக்கிக்கொண்ட சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியது.
உத்தரபிரதேச மாநிலம், ஆக்ராவில் உள்ள தோபாய் கிராமத்தில் உள்ள அரசு ஆரம்பப்பள்ளியில் படித்து வருபவர் மாணவி சாக்ஷி (வயது 8). கடந்த சனிக்கிழமை பள்ளி அரைநேரம் மட்டுமே செயல்பட்டதால், ஒரு மணிக்கு வகுப்புகள் முடிந்துவிடும். ஆனால், மாணவி சாக்ஷி மட்டும் பள்ளி முடிந்தும் வெகுநேரமாக வீட்டுக்கு வராத நிலையில், மதியம் சுமார் 2.30 மணிக்கு அவரை வகுப்பறையிலிருந்து மயக்க நிலையில் அவரது உறவினர்கள் மற்றும் காவல் துறையினர் மூலம் மீட்கப்பட்டார்.
இச்சம்பவம் குறித்து அச்சிறுமியின் உறவினர் ஒருவர் கூறியதாவது, “எங்களுடைய குழந்தைக்கு ஆசிரியர் தண்டனைக்காக வகுப்பறைக்குள் பூட்டி வைத்தார். அனைத்து மாணவர்களும் வீட்டுக்கு சென்ற பின்பும், சாக்ஷி தனியாக அந்த அறையில் விடப்பட்டிருக்கிறார். அதனால், கதவில் சிறிய இடைவெளி மூலம் தப்பிக்க முயன்றபோது, அவளுடைய தலை கதவுக்கு இடையே சிக்கிக்கொண்டது. சுமார் இரண்டு மணிநேரம் அதே நிலைமையில் தான் சிருமி இருந்திருக்கிறார்.”, என தெரிவித்தார்.
இதுகுறித்து காவல் துறை தரப்பில் கூறப்பட்டதாவது, “எங்களுக்கு பள்ளியில் மாணவி ஒருவரின் தலை கதவில் சிக்கிக்கொண்டதாக தகவல் கிடைத்தது. நாங்கள் அதன்பின்பு பள்ளியின் தலைமை ஆசிரியரை தொடர்புகொள்ள முயற்சித்தோம். ஆனால், அவர் எங்கள் அழைப்பை ஏற்கவில்லை. வேறுவழியின்றி நாங்கள் வகுப்பறையின் கதவை உடைத்து சிறுமியை மயக்க நிலையில் மீட்டோம். அவர் அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.”, என தெரிவித்தார்.