குஜராத் மாநிலத்தில் இந்தாண்டு இறுதியில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், மாநிலத்தில் பொது சிவில் சட்டத்தை கொண்டுவர அமைச்சரவையில் ஒப்புதல் அளித்துள்ளதாகவும், இதற்காக குழு ஒன்று அமைக்கப்படும் எனவும் உள்துறை அமைச்சர் ஹர்ஷ் சங்கவி நேற்று (அக்டோபர் 29) அறிவித்தார்.
குஜராத்தில் முதல்வர் பூபேந்திர பட்டேல் தலைமையில் பா.ஜ.க ஆட்சி நடைபெற்று வருகிறது. மாநிலத்தில் இந்தாண்டு இறுதியில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. பா.ஜ.க, காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். விரைவில் தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் ஆளும் பா.ஜ.க அரசு மாநிலத்தில், பொது சிவில் சட்டம் (Uniform Civil Code (UCC))அமல்படுத்தப்படும் என அறிவித்துள்ளது.
இதற்கு அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாகவும், இதற்காக குழு ஒன்று அமைக்கப்படும் எனவும் உள்துறை அமைச்சர் ஹர்ஷ் சங்கவி நேற்று (அக்டோபர் 29) அறிவித்தார்.
பொது சிவில் சட்டம் என்பது மதம், மொழி, இனத்திற்கு அப்பாற்பட்டு நாட்டு மக்கள் அனைவருக்கும் ஒரே மாதிரியான சிவில் சட்டம் ஆகும். ஒருவரின் மதம் சார்ந்த தனிச்சட்டங்கள் செல்லாது.
நீதிபதி தலைமையில் குழு
கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தலின்போது அக்கட்சி வெளியிட்ட தேர்தல் அறிக்கையில், பா.ஜ.க வெற்றி பெற்றால் நாடு முழுவதும் ஒரே மாதிரியான சிவில் சட்டம் அமல்படுத்தப்படும் என வாக்குறுதி அளித்தது. இருப்பினும் அதன் பின், மத்திய அரசு இதில் நடவடிக்கை எடுக்கவில்லை. பொது சிவில் சட்டம் அரசியல் அமைப்புக்கும் சிறுபான்மையினருக்கும் எதிரானது என அனைத்திந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
இந்நிலையில், தற்போது குஜராத்தில் பொது சிவில் சட்டம் அமல்படுத்துவதாக கூறியுள்ளது. முன்னதாக
உத்தரகாண்ட், இமாச்சலப் பிரதேச பா.ஜ.க அரசுகள் பொது சிவில் சட்டம் கொண்டுவருவதாக கூறியுள்ளது.
குஜராத் காந்திநகரில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் பர்ஷோத்தம் ரூபாலா, “எங்கள் இளமைக் காலத்திலிருந்தே நாங்கள் கோரிக்கைகளை முன்வைத்து வருகிறோம். ராம ஜென்மபூமி, 370வது சட்டப்பிரிவு ரத்து மற்றும் யுசிசி. முதல்வர் பூபேந்திர படேலுக்கு எனது வாழ்த்துக்களையும் நன்றியையும் தெரிவிக்க விரும்புகிறேன். பா.ஜ.கவின் பழைய கோரிக்கையை நிறைவேற்றும் நோக்கில் அடுத்த கட்ட நடவடிக்கையை அவர் எடுத்துள்ளார்
ராமர் கோயில், காஷ்மீர் போன்று இந்த பிரச்சனைக்கும் (யுசிசி) குஜராத் அமைச்சரவையில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. விரைவில் குழு அமைக்கப்படும். குழுவின் அறிக்கையின் அடிப்படையில், இந்த சட்டத்தை அமல்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்" என்று கூறினார்.
மேலும், "ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் குழு அமைக்கப்படும். குழுவில் 3 முதல் 4 பேர் உறுப்பினர்களாக செயல்படுவர். குழுவை அமைக்கும் அதிகாரம் அமைச்சரவையில் முதல்வருக்கு வழங்கப்பட்டுள்ளது. குழு விரைந்து அறிவிக்கப்பட்டு, அறிக்கை பெறப்படும்" என்றார்.
தேர்தல் அறிவிப்பு மற்றும் மாதிரி நடத்தை விதிகள் அமலுக்கு வர இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், குஜராத் அரசு இதை எவ்வாறு செயல்படுத்த திட்டமிட்டுள்ளது என்ற கேள்விக்கு பதிலளித்த ரூபாலா, நீங்கள் இதை தான் நம்புகிறீர்கள். ஆனால் அடுத்த அரசாங்கமும் நாங்கள் பா.ஜ.க உருவாக்குவோம் என்றார்.
ஒரே நாடு, ஒரே சட்டம்
குஜராத் அமைச்சரும், அரசின் செய்தித் தொடர்பாளருமான ஜிது வகானி ட்விட்டர் பதிவில், "ஒரே மாதிரியான சிவில் சட்டம் என்பது, சமூகத்தின் அனைத்துப் பிரிவினரும் அவர்களின் மதத்திற்கு அப்பாற்பட்டு பொது சிவில் சட்டத்தின்படி சமமாக நடத்தப்பட வேண்டும். பொது சிவில் சட்டத்தின்படி
அனைவருக்கும் சம உரிமை வழங்கப்படுவதாகும். குஜராத்தில் விரைவில் யுசிசி அமல்படுத்தப்படும்.
ஒரே நாடு, ஒரே சட்டம் மற்றம் ஒரே சிவில் சட்டம்" என்று குறிப்பிட்டுள்ளார்.
பொது சிவில் சட்டம் பா.ஜ.கவின் நீண்ட கால வாக்குறுதியாக இருந்து வருகிறது. குடும்பம் மற்றும் வாரிசு சட்டங்கள் மத்திய மற்றும் மாநிலங்களின் வரம்பில் வருகிறது அதனால், மாநில அரசு தனியாக சட்டம் கொண்டு வர முடியும். ஆனால் நாடு முழுவதும் ஒரே மாதிரியான சட்டம் என்பது
நாடாளுமன்றத்தில் தான் இயற்றப்பட முடியும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.