உத்தரகாண்ட் மாநிலம் ஜோஷிமத் நகரில் திடீரென ஏற்பட்ட நிலச்சரிவால் சாலைகள், வீடுகளில் விரிசல் ஏற்பட்டுள்ளது. 500க்கும் மேற்பட்ட வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளது. முதல்வர் புஷ்கர் சிங் தாமி உடனடியாக மீட்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளார். மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்க வேண்டும் எனவும், அவர்களுக்கு மருத்துவ உதவிகள் வழங்க வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
உத்தரகாண்ட் மாநிலம் இமயமலையின் அடிவாரத்தில் அமைந்துள்ளது. இங்கு முக்கிய சுற்றுலா தலங்கள் உள்ளன. குறிப்பாக சார்தாம் எனப்படும் பத்ரிநாத், கேதார்நாத், கங்கோத்திரி, யமுனோத்திரி ஆகிய புனித தலங்கள் அமைந்துள்ளன. ஆண்டுதோறும் ஏராளமான மக்கள் இங்கு வந்து செல்வர்.
அந்தவகையில், ஜோஷிமத் நகரம் சமோலி மாவட்டத்தில் ரிஷிகேஷ் – பத்ரிநாத் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. இதுவும் சிறந்த சுற்றுலாத் தலமாகும். தவுலிகங்கா மற்றும் அலக்நந்தா நதிகள் விஷ்ணுபிரயாகில் இருந்து ஒன்று சேர்ந்து இந்த ஜோஷிமத் நகரம் வழியே தான் கடந்த செல்கின்றன. பத்ரிநாத் மற்றும் ஹேம்குந்த் சாஹிப் செல்லும் சுற்றுலாப் பயணிகளின் முக்கிய போக்குவரத்து மையமாக உள்ளது. நகரம் மலை பகுதியில் அமைந்துள்ளதால், இங்கு அடிக்கடி நிலச்சரிவு பிரச்சனை ஏற்பட்டும். இந்நிலையில், கடந்த 2,3 நாட்களுக்கு முன் மீண்டும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இம்முறை சாலை, வீடுகளில் விரிசல் ஏற்பட்டு கடும் சேதடைந்துள்ளது. மக்கள் மிகுந்த அச்சமடைந்துள்ளனர்.

உத்தரகாண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி ஜோஷிமத்தில் மீட்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டும் என்றும் மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் உத்தவிட்டுள்ளார். புஷ்கர் சிங் தாமி, நேற்று (வெள்ளிக்கிழமை) மூத்த அதிகாரிகளுடன் இதுதொடர்பாக உயர்மட்ட ஆலோசனை நடத்தினார். மேலும் ஜோஷிமத் நகரில் இன்று அவர் நேரில் ஆய்வு மேற்கொள்ள உள்ளார்.
சமோலி மாவட்டத்தில் 6,000 அடி உயரத்தில் அமைந்துள்ள ஜோஷிமத் நகரம். அதிக ஆபத்துள்ள நில அதிர்வு மண்டலம்-V ஜோன் என்ற மண்டலத்தில் உள்ளது. அதிகாரிகள் கூறுகையில், மிகவும் சேதடைந்து ஆபத்தான வீடுகளில் தங்கியிருந்த சுமார் 50 குடும்பங்கள் தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். சாமோலி நிர்வாகம் 70 அறைகள், ஏழு ஹால் வசதி கொண்ட 385 பேர் தங்கும் தற்காலிக முகாமிற்கு ஏற்பாடு செய்துள்ளனர். ஜோஷிமத் அருகே உள்ள பிபால்கோட்டி மற்றும் கவுச்சார் பகுதிகளில் பாதுகாப்பான இடங்கள் கண்டறியப்பட்டு வருவதாக அவர்கள் தெரிவித்தனர்.
சாமோலி நிர்வாகம் வழங்கிய தரவுகளின்படி, ரவிகிராமில் 153, காந்திநகரில் 127, மனோகர் பாக்கில் 71, சிங்தாரில் 52, பர்சாரியில் 50, அப்பர் பஜாரில் 29, சுனீல் பகுதியில் 27 என நகரின் பல்வேறு பகுதிகளில் உள்ள 561 வீடுகளில் விரிசல் ஏற்பட்டுள்ளது. ஜோஷிமத்தில் ஏராளமான ஹோம்ஸ்டேகள் மற்றும் ஹோட்டல்கள் உள்ளன. அங்கும் சேதடைந்துள்ளன.
புதிய விரிசல் ஏற்பட்டுள்ள இடங்களில் பேரிடர் மேலாண்மை துறை ஆய்வு நடத்தி வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். அப்பகுதியில் உள்ள சில ஹோட்டல்கள் அருகில் இருந்த மற்ற கட்டடங்களின் மீது சாய்ந்துள்ளன. நிலச்சரிவுகளால் சேதமடைந்த ஹோட்டல்களில் சுற்றுலாப் பயணிகள் தங்குவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
“தேவையில் இருக்கும் இவர்களுக்கு உதவுவது நமது கடமையும் பொறுப்பும் ஆகும்… இந்த மக்களுக்கு நாம் எப்படி சிறந்த முறையில் உதவலாம் என்பதில் கவனம் செலுத்த வேண்டும். இந்த நேரத்தில், அரசாங்கத்தின் மீதும் நிர்வாகத்தின் மீதும் மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை காப்பது மிக முக்கியமான விஷயம். அங்கு நிலைமையை கண்காணிக்க வேண்டும். உடனடி மற்றும் நிரந்த பாதுகாப்பு திட்டங்களை செயல்படுத்த ஆலோசனை செய்து வருகிறோம் என்று தாமி கூறினார்.
உடனடி செயல் திட்டத்துடன், கழிவுநீர் மற்றும் வடிகால் சுத்திகரிப்பு பணிகள் விரைவில் முடிக்கப்பட வேண்டும் என்றும் அவர் உத்தரவிட்டுள்ளார்.
எதிர்க்கட்சியான காங்கிரஸ் ஆளும் பா.ஜ.க அரசை கடுமையாக விமர்சனம் செய்துள்ளது. மாநில அரசு மக்களின் நிலையைப் பார்த்துக் கண்ணை மூடிக்கொண்டு இருக்கிறது என்று குற்றம் சாட்டியது. “ஜோஷிமத்தில் நிலச்சரிவுகள் தொடர்ந்து நிகழ்கின்றன. ஜோஷிமத்தில் பல வீடுகளில் விரிசல் ஏற்பட்டுள்ளதால், மக்கள் கடும் குளிரில் தெருக்களில் இரவில் தங்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். நிலச்சரிவில் இருந்து ஜோஷிமத்தை காப்பாற்ற மாநில அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்”என்று தெரிவித்துள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/