Advertisment

பாஜக, காங்கிரஸ் அல்லாத கட்சிகளின் மாநாடு : ராம் ஜெத்மலானியிடம் வைகோ உறுதி

பாஜக, காங்கிரஸ் அல்லாத கட்சிகளின் மாநாட்டை சென்னையில் நடத்துவதாக மூத்த வழக்கறிஞர் ராம் ஜெத்மலானியிடம் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறினார்.

author-image
selvaraj s
புதுப்பிக்கப்பட்டது
New Update
ram jethmalani, vaiko, mdmk, congress, bjp

பாஜக, காங்கிரஸ் அல்லாத கட்சிகளின் மாநாட்டை சென்னையில் நடத்துவதாக ராம் ஜெத்மலானியிடம் வைகோ கூறினார்.

Advertisment

மதிமுக பொதுச்செயலாளர் வைகோவும், சட்ட நிபுணர் ராம் ஜெத்மலானியும் அளப்பரிய நட்பு கொண்டவர்கள். அந்த நட்பு, ராஜீவ் கொலை வழக்கில் கைதான சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகிய மூவரின் உயிரைக் காக்க உதவியதை தமிழகம் மறந்திருக்காது.

அது, 2011-ம் ஆண்டு! சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகிய மூவருக்கு தூக்குத் தண்டனையை உச்சநீதிமன்றம் உறுதி செய்திருந்தது. ஜனாதிபதியும் அவர்களின் கருணை மனுக்களை நிராகரித்தார். 2011 செப்டம்பரில் அவர்களை தூக்கிலிட தேதியும் முடிவு செய்யப்பட்டது. மொத்த தமிழகமும் அவர்களின் உயிரைக் காக்க போர்க்கோலம் பூண்டது.

ஆனால் ஜனாதிபதியே கருணை மனுக்களை நிராகரித்த நிலையில், மாநில அரசு அதில் செய்வதற்கு எதுவும் இல்லை என அப்போதைய முதல்வர் ஜெயலலிதா கூறினார். டெல்லியில் இருந்த மன்மோகன்சிங் அரசும் இந்தப் பிரச்னையில் உதவ தயாரில்லை. அந்த அரசிடம் யாரும் உதவியை எதிர்பார்க்கவும் இல்லை.

அந்தச் சூழலில்தான் ராம் ஜெத்மலானியை சந்தித்து, 3 தமிழர்களை காப்பாற்ற உதவும்படி வைகோ கேட்டார். சென்னை உயர்நீதிமன்றத்தில், 3 தமிழர்களின் தூக்குத் தண்டனைக்கு தடை கேட்டு வழக்கு தொடரப்பட்டது. அதில் ஆஜராக ராம் ஜெத்மலானி சென்னை வந்தார். வைகோவின் நட்புக்காக இந்த வழக்கில் ஆஜராவதாக விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறினார்.

2011 ஆகஸ்ட் 30-ம் தேதி சென்னை உயர்நீதிமன்றத்தில் அந்த வழக்கு விசாரணையில் ஆஜரான ராம் ஜெத்மலானி, மூவரின் கருணை மனுக்களை நிராகரிக்க ஜனாதிபதி பல வருடங்கள் அவகாசம் எடுத்துக் கொண்டதை சுட்டிக்காட்டி வாதாடினார். அவரது வாதத்தை ஏற்று, தூக்குத்தண்டனைக்கு இடைக்கால தடை விதித்தது சென்னை உயர்நீதிமன்றம். அதே நாளில்தான் தமிழக சட்டமன்றமும், மூவரின் தூக்குக்கு விலக்கு கேட்டு தீர்மானம் நிறைவேற்றியது.

பிறகு உச்சநீதிமன்றத்தில் சட்டப் போராட்டம் நடத்தி, மூவரின் தூக்குத் தண்டனை, ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது தனிக்கதை. தூக்கு தேதி நெருங்கிய வேளையில் அன்று மூவருக்காக ஆஜராகி காப்பாற்றிய ராம் ஜெத்மலானிக்கு, இன்று 94 வயது நிறைவு பெறுகிறது. மிக சமீபத்தில் அவர் வயது மூப்பு காரணமாக வழக்கறிஞர் பணியில் இருந்து விலகுவதாகவும் அறிவித்தார்.

இந்த சூழலில் ராம்ஜெத்மலானியின் பிறந்த தினத்திற்கு முன் தினமான செப்டம்பர் 13-ம் தேதி மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மும்பையில் ராம் ஜெத்மலானியின் இல்லத்திற்கு சென்றார். ராம் ஜெத்மலானியை கட்டிப் பிடித்து அட்வான்ஸாக பிறந்த நாள் வாழ்த்து கூறினார் வைகோ. ஜெத்மலானியின் 94 வது பிறந்த நாளுக்கு அவரை மும்பையில் சந்தித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ

வாழ்த்து தெரிவித்தார். அவருக்கு பொன்னாடை போர்த்தி, ஏலக்காய் மாலையும் அணிவித்து மகிழ்வித்தார்.

அப்போது வைகோவிடம் பேசிய ராம்ஜெத்மலானி, ‘இந்தியா முழுதும் பாஜக, காங்கிரஸ் இல்லாத மூன்றாவது அணியை அமைக்க வேண்டும்’ என்று கூறினார். அதற்கு பதிலளித்து பேசிய வைகோ, ‘நிச்சயமாக நான் உங்களுடன் இருப்பேன்’ என்று தெரிவித்தார். விரைவில் சென்னையில் மாநாடு நடத்துவதாகவும் தெரிவித்தார். அதன்படி, சென்னையில் பாஜக, காங்கிரஸ் அல்லாத கட்சிகளின் மாநாட்டை வைகோ ஒருங்கிணைப்பார் என தெரிகிறது.

தமிழகத்தின் முக்கியமான போராட்டத் தருணத்தில் துணை நின்ற ராம் ஜெத்மலானியின் பிறந்த தினம், தமிழ் உணர்வாளர்கள் நினைவு கூறத்தக்க நாள்!

Bjp Vaiko Mdmk Ram Jethmalani
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment