வீடுகளில் மாட்டிறைச்சி குறித்து சோதனை நடத்த அனுமதிக்க வேண்டும் என மகாராஷ்டிரா மாநில அரசு உச்சநீதிமன்றத்தை நாடியுள்ளது.
மகாராஷ்டிர மாநில அரசின் விலங்குகள் பாதுகாப்பு சட்டத்திற்கு(1995,) கடந்த 2005-ம் ஆண்டு குடியரசுத் தலைவர் ஒப்புதல் வழங்கினார். இந்த நிலையில், அம்மாநில அரசின் விலங்குகள் பாதுகாப்பு சட்டத்தில் உள்ள பிரிவை(5D) மகாராஷ்டிரா உயர் நீதிமன்றம் நீக்கியது.
அந்த பிரிவானது, மாட்டிறைச்சி வைத்திருப்பதாக சந்தேகிக்கப்படும் நபர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தி சோதனை செய்ய அனுமதி அளிப்பதாகும். மேலும், மாட்டிறைச்சி இருப்பதாக சந்தேகிக்கப்படும் வீடுகளுக்குள் புகுந்து போலீஸார் சோதனை நடத்தவும் அனுமதி அளிக்கும் வகையில் அமைந்திருந்தது. முன்னதாக கடந்த 1976-ம் ஆண்டு மகாராஷ்டிரா மாநிலத்தில் பசுவதை தடை செய்யப்பட்டது.
இந்த நிலையில், மகாராஷ்டிரா மாநில அரசு உச்ச நீதிமன்றத்திற்கு இந்த விவகாரத்தை கொண்டு சென்றுள்ளது. அதில், தனிநபர் உரிமை என்பது அடிப்படை உரிமை என உயர் நீதிமன்றத் தவறுதலாக சுட்டிக்காட்டி, மாநில விலங்குகள் பாதுகாப்பு சட்டத்தில் உள்ள பிரிவை(5D)யை நீக்கியுள்ளது. எனவே, மாட்டிறைச்சி குறித்து போலீஸார் சோதனை நடத்துவதற்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று மகாராஷ்டிரா அரசு உச்ச நீதிமன்றத்தை நாடியுள்ளது.
சமீபத்தில், மாட்டிறைச்சி தொடர்பான மத்திய அரசின் அறிவிப்புக்கு, நாடு முழுவதும் கண்டனங்கள் எழுந்தது நினைவிலிருக்கலாம். மகாராஷ்டிர மாநிலத்தில் பாஜக தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது. அம்மாநில முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் தலைமையிலான அரசு, மாட்டிறைச்சி குறித்து சோதனை நடத்த அனுமதி வேண்டும் என உச்சநீதிமன்றத்தை நாடியுள்ளது குறிப்பிடத்தக்கது.