Advertisment

தமிழகத்தில் வளர்ந்துவரும் ஒரு பண்பாட்டு இயக்கம்; நாக்பூர் தீக்‌ஷா பூமி பயணம்

Cultural movement in Tamilnadu travel to Nagpur Diksha day: ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் தலைமையிடம் அமைந்துள்ள அதே நாக்பூரில் தான் இந்து மதத்தின் தீவிர விமர்சகரும், ‘இந்துவாக பிறந்தேன், இந்துவாக இறக்கமாட்டேன்’ என்ற அம்பேத்கர் பௌத்தம் தழுவிய தீக்‌ஷா பூமியும் உள்ளது.

author-image
Balaji E
புதுப்பிக்கப்பட்டது
New Update
deekshabhoomi to nagpur railway station,deekshabhoomi distance, deekshabhoomi nagpur pin code, babasaheb dr ambedkar, babasaheb dr ambedkar embraced buddhism, தீக்‌ஷா பூமி, நாக்பூர், பாபாசாகேப் அம்பேத்கர், அம்பேத்கர் பௌத்தம் தழுவினார், தீக்‌ஷா பூமி பயணம், விஜயதசமி, vijayadasami day, deekshabhoomi contact number, deekshabhoomi pincode, dikshabhumi information in marathi,diksha bhumi nagpur wallpaper, nagpur dikshabhumi today,

deekshabhoomi to nagpur railway station,deekshabhoomi distance, deekshabhoomi nagpur pin code, babasaheb dr ambedkar, babasaheb dr ambedkar embraced buddhism, தீக்‌ஷா பூமி, நாக்பூர், பாபாசாகேப் அம்பேத்கர், அம்பேத்கர் பௌத்தம் தழுவினார், தீக்‌ஷா பூமி பயணம், விஜயதசமி, vijayadasami day, deekshabhoomi contact number, deekshabhoomi pincode, dikshabhumi information in marathi,diksha bhumi nagpur wallpaper, nagpur dikshabhumi today,

Tamilnadu Cultural movement travel to Nagpur Dheekshabhoomi: பாஜகவின் தாய் அமைப்பான ராஷ்டிரிய ஸ்வயம் சேவக் சங் (ஆர்.எஸ்.எஸ்) என்ற இந்துத்துவத்தை முன்னெடுக்கிற அமைப்பின் தலைமையிடம் மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் அமைந்துள்ளது. அதே நாக்பூரில் தான் இந்து மதத்தின் தீவிர விமர்சகரும், ‘இந்துவாக பிறந்தேன், இந்துவாக இறக்கமாட்டேன்’ என்ற பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் பௌத்தம் தழுவிய தீக்‌ஷா பூமியும் உள்ளது.

Advertisment

இந்திய அரசியலில் ஒவ்வொரு ஆண்டும் விஜயதசமி அன்று நாக்பூரில் நடைபெறும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் வருடாந்திர விஜயதசமி நிகழ்சியும் அதன் தலைவரின் உரையும் கவனம் பெறத் தவறியதில்லை. அதே நேரத்தில், அம்பேத்கர் பௌத்தம் ஏற்ற நாளான விஜயதசமி நாளில் இந்தியா முழுவதும் இருந்து பல லட்சம் மக்கள் அம்பேத்கர் பௌத்தம் ஏற்ற நாக்பூருக்கு சென்று வருவதும் கவனம்பெறத் தவறியதில்லை.

உண்மையில் டாக்டர் அம்பேத்கர் பௌத்தம் ஏற்பதற்கு நாக்பூரைத் தேர்ந்தெடுத்ததற்கு ஆர்.எஸ்.எஸ்.சின் தலைமை இடம் அமைந்திருப்பதால் அவர்களைத் திகைக்க வைக்க வேண்டும் என்பதற்காக அல்ல என்பதை அவரது பௌத்த ஏற்பு உரையிலேயே குறிப்பிடுகிறார். மேலும், “ஆர்.எஸ்.எஸ் பிரச்னை தன் மனதில் துளிகூட இடம்பெறவில்லை. இந்த ரீதியில் யாரும் அர்த்தப்படுத்திக்கொள்ளக்கூடாது” என்றும் அவர் வலியுறுத்தினார். மாறாக இந்த இடம் புத்த மதத்தைப் போற்றிப் பிரசாரம் செய்த நாகர் மக்கள் வாழ்ந்த இடம் என்பதாலும் அந்த நாகர்கள்தான் நாம் என்பதால்தான் இந்த இடத்தை தேர்வு செய்ததற்கான காரணமாகக் கூறினார்.

publive-image நாக்பூரில் பௌத்த பிக்குகள் பேரணி

விஜயதசமி அன்று பாபாசாகேப் அம்பேத்கர் நாக்பூரில் பௌத்தம் தழுவி தீக்‌ஷா பெற்ற விஜயதசமி நாளில் நாடுமுழுவதும் இருந்து மக்கள் நாக்பூர் தீக்‌ஷா பூமிக்கு வருகின்றனர். அம்பேத்கர் பௌத்தம் தழுவுவதற்கு அரை நூற்றாண்டுக்கு முன்னதாகவே தமிழகத்தில் தலித் அரசியல் பண்பாட்டு முன்னோடியான அயோத்திதாசர் வழிகாட்டுதலில் தலித் மக்கள் ஏராளமானோர் பௌத்தம் ஏற்று தங்களை பூர்வ பௌத்தர்களாக அடையாளப்படுத்திக்கொண்டனர் என்பது வரலாறு. அந்த வகையில், அம்பேத்கர் பௌத்தம் ஏற்றதால் அவர்கள் அம்பேத்கரை மேலும் அணுக்கமாக பின்பற்றுவது எளிதானது.

அம்பேத்கர் பௌத்தம் ஏற்று 60 ஆண்டுகளுக்கு மேல் கடந்துவிட்ட நிலையில், அவர் பௌத்தம் தழுவிய தீக்‌ஷா தினத்தை கொண்டாட தமிழகத்தில் இருந்து நாக்பூருக்கு பயணம் செய்பவர்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் கனிசமாக அதிகரித்து வந்துள்ளது. இந்த நாக்பூர் தீக்‌ஷா பூமிக்கு பயணம் செய்வது என்பது தமிழகத்தில் அம்பேத்கரை பின்பற்றுபவர்களிடையே மட்டுமே இருந்து வந்த நிலையில், அது இன்று இளைஞர்களிடையே ஒரு பண்பாட்டு நிகழ்வாக மாறியுள்ளது என்றால் மிகையல்ல.

அந்த வகையில் தமிழகத்தில் நாக்பூர் தீக்‌ஷா பூமிக்கு பயணம் செய்பவர்களின் எண்ணிக்கையானது கடந்த மூன்று ஆண்டுகளில் கனிசமாக அதிகரித்துள்ளது. இந்த ஆண்டு தமிழகத்தில் இருந்து மட்டும் சுமார் 6 ஆயிரம் பேருக்கு மேல் நாக்பூருக்கு சென்று வந்துள்ளதாக கூறுகின்றனர். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் சிதம்பரம் மக்களவைத் தொகுதியின் எம்.பி-யுமான திருமாவளவன் இந்த ஆண்டு நாக்பூர் தீக்‌ஷா பூமிக்கு  சென்று வந்துள்ளார். இதற்கு முன்பும் தலித் முன்னோடிகளான மறைந்த அன்பு பொன்னோவியம், வேலூர் மாவட்டத்திலிருந்து பலர் தீக்‌ஷா பூமிக்கு பயணம் செய்து வந்தனர்.

publive-image எரிமலை ரத்தினம்

இந்தியா முழுவதும் இருந்து பல லட்சம் மக்களும் தமிழகத்தில் இருந்து ஆயிரக் கணக்கானோரும் நாக்பூர் தீக்‌ஷா பூமிக்கு பயணம் செய்கிறார்கள் என்றால் அங்கே அப்படி என்னதான் இருக்கிறது என்பதை தெரிந்துகொள்ளும் ஆவலுடன், தொடர்ச்சியாக ஆண்டுதோறும் நாக்பூர் பயணம் செய்கிற எரிமலை ரத்தினத்திடம் அவருடைய பயண அனுபவம் பற்றி பேசினோம். ஐ.இ. தமிழுக்கு (இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ்) அவர் கூறுகையில், “என்னுடைய பெயர் ரத்தினம். நான் எரிமலை என்ற இதழை நடத்தியதால் என்னை எரிமலை ரத்தினம் என்பார்கள். நான் பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் பௌத்தம் தழுவிய நாக்பூர் தீக்‌ஷா பூமிக்கு 1963 ஆம் ஆண்டில் இருந்து போய்வருகிறேன்.

 

நாங்கள் பாபாசாகேப் அவர்களுடைய புத்தரும் அவரது தம்மமும் புத்தகத்தின் முன்னுரையை வெளியிட்டோம். பிறகு புத்தரும் அவரது தம்மமும் நூல் தமிழில் கொண்டுவருவதற்கான நடவடிக்கைகளை நான், எக்ஸ்ரே மாணிக்கம், பெரியார்தாசன் ஆகியோர் மேற்கொண்டோம். வெளியிட்டோம்.

முன்பெல்லாம், பிரசாரம் செய்து 15 பேர் 20 பேர் என்று தீக்‌ஷா பூமிக்கு அழைத்துச்சென்றுவந்தோம். அம்பேத்கருடைய புத்தரும் அவரது தம்மமும் நூல் தமிழில் வெளியாகி பரவலான பிறகு அவரைப்படித்து புரிதுகொண்ட இளைஞர்கள், பலர் தமிழகத்திலிருந்து மட்டும் ஆண்டு தோறும் சுமார் 4000, 5000 பேர் நாக்பூர் தீக்‌ஷா பூமிக்கு போய் வருகிறார்கள்.

publive-image அம்பேத்கர் பௌத்தம் தழுவுதல்

1956 அக்டோபர் 14-ல் அம்பேத்கர் நாக்பூரில் புத்த மதம் தழுவியபோது 10 லட்சம் மக்கள் கூடினார்கள். அங்கே 14 ஏக்கர் நிலத்தில் ஒரு புத்த விகார் கட்டியிருக்கிறார்கள். அங்கே பாபாசாகேப்பின் அஸ்தி இருக்கிறது. அந்த புத்த விகார் அசோக சக்கரத்தின் 24 ஆரங்களை அடிப்படையாகக் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது. அருகே ஒரு அரசமரம் இருக்கிறது. அந்த அரச மரம் புத்த கயாவிலிருந்து கொண்டுவரப்பட்ட மரம். அதோடு அங்கே கல்லூரிகள் இருக்கின்றன. அங்கே வேறு ஒன்றும் இல்லை. நாடு முழுவதும் இருந்து வரும் லட்சக்கணக்கான மக்கள் புத்தரையும் பாபாசாகேப்பையும் வணங்கி செல்கிறார்கள்.

நாங்கள் முதலில் தீக்‌ஷா பூமிக்கு செல்லும்போது குடிதண்ணீர் கிடைப்பதுகூட கடினம். பிறகு ரிசர்வ் வங்கி ஊழியர்கள் எஸ்.சி. எஸ்.டி சங்கத்தினர் மூலம் குடிநீர் வழங்குவதற்கு தண்ணீர் பந்தல் அமைத்து ஏற்பாடு செய்யப்பட்டது. பிறகு படிப்படியாக பல்வேறு அமைப்புகள் தண்ணீர் பந்தல் அமைத்தனர். சிலர் உணவு வழங்கினர். பிறகு நாக்பூர் கார்ப்பரேஷனே செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டு தண்ணீர் சப்ளை செய்யப்பட்டது.

நாக்பூரில் விஜயதசமி நாளில் நடைபெறும் 3 நாள் நிகழ்வுக்கு தீக்‌ஷா பூமிக்கு வரும் மக்கள் மூன்று நாட்கள் அங்கேயே தங்குவார்கள். இந்த ஆண்டு 50 லட்சத்துக்கும் மேலான மக்கள் நாக்பூர் வந்தார்கள். நானும் சென்று வந்திருக்கிறேன். தமிழகத்திலிருந்து செல்பவர்கள் அங்கே உள்ள எம்.எல்.ஏ ஹாஸ்டலில் தங்குவார்கள். ஆனால், இந்த ஆண்டு ஹாஸ்டல் கிடைப்பது ரொம்ப கடினமாக இருந்தது. அதிக கட்டுப்பாடுகள் இருந்தன. பாஜக அரசாங்கம் இங்கே கூட்டம் வரக்கூடாது என்ற நோக்கத்தில் கெடுபிடிகளைக் காட்டியது. இருப்பினும், தமிழகத்திலிருந்து நிறைய இளைஞர்கள் தீக்‌ஷா பூமிக்கு செல்வது அதிகரித்திருப்பது மகிழ்ச்சி என்று கூறினார்.

publive-image நிலா தம்மா குழுவினர்

நாக்பூர் தீக்‌ஷா பூமிக்கு ஆண்கள், பெண்கள் குழந்தைகள் என ஆண்டுதோறும் குழுவாக சென்று வருகிற நிலா தம்மா குழுவின் ஒருங்கிணைப்பாளர் அனுசுயா தங்களுடைய தீக்‌ஷா பூமி பயணம் குறித்து ஐ.இ தமிழுக்கு கூறுகையில், “முதலில் நாங்கள் பாபாசாகேப் அம்பேத்கரின் வழியை ஏற்றுக்கொண்டு குடும்பங்களாக கூடுவது என்று 2005 ஆம் ஆண்டு ஒரு முயற்சியைத் தொடங்கினோம். அதாவது அம்பேத்கரின் வழியைப் பின்பற்றுபவர்கள் வீட்டுக்கு குடும்பமாக செல்வது என்று ஒரு கலந்துரையாடல் மாதிரி திட்டமிட்டு செய்தோம்.

ஒரு இடத்தில் குடும்பமாக இணைதல் என்று சென்னையில் பாபாசாகேப் அம்பேத்கர் மணி மண்டபத்தை தேர்வு செய்தோம். ஏனென்றால், அப்போது சென்னையில் பெரிய அளவில் புத்த விகார் ஏதும் இல்லாதா காலம். பிறகு எங்களுடைய கூடுகை என்பது பௌத்தத்தில் பௌர்ணமி நாள் சிறப்பானது என்பதால் பௌர்ணமி நாளில் கூடுவது என்று பாபாசாகேப் மணிமண்டபத்தில் பௌர்ணமி தோறும் கூடுவதற்காக நிலா தம்மா அமைப்பை ஏற்படுத்தினோம். தொடர்ந்து பௌர்ணமி கூடுதல் நிகழ்வை நடத்துகிறோம். இதில் குழந்தைகளுடன் குடும்பாமாக பலர் பங்கேற்கின்றனர். பௌர்ணமி நாளில் பறை இசை, பாடல், நாடகம், சொற்பொழிவு என்று நிகழ்ச்சிகள் இருக்கும் . இப்படி நாங்கள் ஒரு பண்பாட்டு நடவடிக்கையை தொடர்ச்சியாக செய்துவருகிறோம். ஏற்கெனவே தமிழகத்தில் இருந்து ஆண்டுதோறும் தீக்‌ஷா பூமிக்கு சென்று வரும் பழக்கம் இருப்பதால் நிலா தம்மா குழுவினரும் 2012 ஆம் ஆண்டில் ஒரு 80 பேருக்கும் மேல் ஒரு குழுவாக நாக்பூர் தீக்‌ஷா பூமிக்கு சென்று வந்தோம். அப்போது நாங்கள் அக்டோபர் மாத பயணத்துக்கு ஜூன், ஜூலை மாதத்திலிருந்தே அதற்காக தயாராகிவிடுவோம். பெரும்பாலும் நாங்கள் இளைஞர்கள், பெண்கள், குழந்தைகள் என குடும்பமாகத்தான் தீக்‌ஷா பூமிக்கு பயணம் செய்கிறோம்.

publive-image

கடந்த ஆண்டு எங்கள் நிலா தம்மா குழு மூலம் 123 பேர் சென்று வந்தோம். இந்த ஆண்டு 84 பேர் சென்றுவந்தோம். வேலூரில் இருந்து ஒரு பெரிய கூட்டமே வரும். இந்த ஆண்டு மட்டும் சுமார் 6000 பேருக்கு மேல் தீக்‌ஷா பூமி சென்று வந்துள்ளனர்.

நாங்கள் கடந்த ஆண்டு அங்கே உள்ள ஜெயின் ஹாலில் தங்கினோம். இந்த ஆண்டு எங்களுடைய செயல்பாடுகளைக் கவனித்த நாக்பூரைச் சேர்ந்த சஞ்ஜய் மேஷ்ராம் என்பவர் எங்களை அவர்களுடைய வீட்டில்தான் தங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். நாங்கள் நாக்பூர் ரயில்நிலையம் சென்றவுடன் எங்களை அழைத்துச் செல்ல பேருந்து அனுப்பியிருந்தார். அவர் பிறகு, அவர்களுடைய வீட்டில் எங்களுக்கு உணவும் தங்கும் இடமும் வழங்கினார். நாக்பூரில் தீக்‌ஷா தின நாளில் நாக்பூரில் நீங்கள் எங்கு சென்றாலும் மக்கள் உங்களை வரவேற்பார்கள். உபசரிப்பார்கள்.

விருந்தோம்பலுக்கு தமிழ்நாடுதான் என்று பெயர்பெற்றது என்று சொல்ல கேட்டிருக்கிறோம். அது நாம் தமிழகத்தில் மட்டுமே இருப்பதனால்தான் அப்படி சொல்கிறோமோ என்னவோ? நாக்பூர் மக்களும் விருந்தோம்பலுக்கு உபசரிப்புக்கு பெயர்பெற்றவர்கள் என்பது அங்கே சென்றால்தான் தெரியும்.

நாக்பூர் தீக்‌ஷா பூமியில் பாபாசாகேப் இந்த இடத்தில்தான் பௌத்தம் தழுவினார். அவர் இங்கே நின்றுதான் தீக்‌ஷா பெற்றார் எனும் விதமாக ஒரு புத்த விகார் உள்ளது. அடுத்து நாகலோகா உள்ளது. பொதுவாக புத்தர் சிலைகள் அமர்ந்த நிலையில் இருக்கும். ஆனால், பாபாசாகேப்பின் புத்தர் நடப்பது போல அதாவது அடுத்த நிலைக்கு செல்வது போல இருக்கிறது.

publive-image

தீக்‌ஷா பூமிக்கு நாங்கள் பறை இசையுடன் சென்றோம். அது ஒரு கொண்டாட்டமான நிகழ்வு. இந்த ஆண்டு அரசாங்கத்தின் கெடுபிடி அதிகமாக இருந்தது. இங்கே இவ்வளவு கூட்டம் வருவதை அரசாங்கம் விரும்பவில்லை என்பது தெரிகிறது. ஆனாலும், நாடு முழுவதும் இருந்து லட்சக் கணக்கான மக்கள் வருகிறார்கள். அவர்கள் அனைவரும் நேர்மறையான உற்சாகத்தையும் மகிழ்ச்சியான அணுபவத்தையும் பெறுகிறார்கள். தாய்வீட்டுக்கு சென்று வருவது போல உணர்கிறார்கள். மூன்று மாத கைக்குழந்தையுடன் எல்லாம் வருகிறார்கள். இந்த பயணத்தை பலரும் தங்கள் கடமையாக நினைக்கிறார்கள். பலரும் பலவிதமான உணர்வைப் பெறுகிறார்கள். அந்த இடத்தில் இருப்பதே நமக்கு உற்சாகத்தையும் மனவலிமையையும் தரும்” என்று கூறினார்.

தீக்‌ஷா பூமிக்கு நிலா தம்மா குழுவினருடன் பயணம் மேற்கொண்ட கிருஷ்ணகுமார் ஐ.இ தமிழுக்கு கூறுகையில், “முதலில் நான் பணி செய்யும் இடத்தில் தாஸ் சார் என்பவர் அம்பேத்கரின் ஒரு புத்தகத்தை எனக்கு படிக்க கொடுத்தார். அதைப் படித்து தாக்கம் பெற்று அம்பேத்கரை வாசிக்க தொடங்கினேன். அம்பேத்கர் எல்லோருக்குமான தலைவர். அவரை படித்தால் மட்டுமே புரிந்துகொள்ள முடியும்

அம்பேத்கர், பெரியார் நூல்களை படித்ததன் மூலம் அவர்கள் வழியாக நாம் சார்ந்த சமூகத்தை புரிந்துகொண்டேன். இந்த புரிதலில் அம்பேத்கர் பெரியார் வழியில் இருந்தபோதுதான், தாஸ் சார் தீக்‌ஷா பூமிக்கு செல்வதற்கான வாய்ப்பை கொடுத்தார். எதுவும் திட்டமிடாமல்தான் சென்றேன். அது மிகவும் அருமையான அனுபவமாக இருந்தது. லட்சக் கணக்கான மக்கள் அங்கே வருகிறார்கள். அனைவரும் பள்ளிப் பாடபுத்தகங்களோடு அம்பேத்கர் புத்தகங்களை வாசிப்பது மூலம் இந்த சமூகம் சமத்துவ சமூகமாக மாறும் என்று நம்புகிறேன்” என்று கூறினார்.

அம்பேத்கர் பௌத்தம் தழுவிய நாக்பூர் தீக்‌ஷா பூமிக்கு தமிழகத்திலிருந்து பயணம் செய்வது என்பது ஒரு பண்பாட்டு இயக்கமாக மாறியுள்ளது. இது வருங்காலங்களில் மேலும் அதிகரிக்கும் என்றே நிலா தம்மா அமைப்பினர் கூறுகின்றனர்.

Maharashtra Nagpur Babasaheb Ambedkar Dr Ambedkar Tamilnadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment