ஜம்மு - காஷ்மீர் மாநிலம் அனந்த்நாக் பகுதியில் தீவிரவாதிகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே நடைபெற்ற சண்டையில் முக்கிய லக்ஷர் - இ - தொய்பா தீவிரவாதிகள் இருவர் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளனர்.
ஜம்மு - காஷ்மீர் மாநிலம் அனந்த்நாக் பகுதியில் ஊடுருவிய தீவிரவாதிகளுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே நடைபெற்று வந்த சண்டை முடிவுக்கு வந்துள்ளது. பொதுமக்களை மனித கேடயமாக உபயோகித்து வந்த தீவிரவாதிகளுடன் பாதுகாப்பு படையினர் இன்று காலை முதல் சண்டையிட்டு வந்தனர். இறுதியாக, பொதுமக்கள் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டு சண்டை முடிவுக்கு வந்துள்ளது.
சண்டையின் முடிவில், லஷ்கர் - இ - தொய்பா தீவிரவாத அமைப்பின் முக்கிய தீவிரவாதிகள் பஷீர் லஷ்காரி, ஆஸாத் மாலிக் ஆகிய இருவரும் பாதுகாப்பு படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். கடந்த 16-ம் தேதியன்று தெற்கு காஷ்மீரின் அச்சாபல் பகுதியில் போலீசார் ஐந்து பேர் கொல்லப்பட்ட சம்பவத்தில் பஷீர் லஷ்காரி தொடர்புடையவர் என்பது கவனிக்கத்தக்கது.
தீவிரவாதிகள் இருவரும் சுட்டு வீழ்த்தப்பட்டு விட்டனர். என்கவுன்டர் முடிந்து விட்டது என அறிவித்துள்ள அம்மாநில காவல்துறை தலைவர், இந்த சண்டையின் போது பொதுமக்கள் இருவர் உயிரிழந்துள்ளதாகவும், நான்கு பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.