ஊழலற்ற இந்தியாவை உருவாக்குவதாக கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுவதில் பிரதமர் நரேந்திர மோடி தோல்வியடைந்துவிட்டதாகவும், லோக்பால் மசோதாவை நிறைவேற்ற எந்த முயற்சியும் அவர் செய்யவில்லை எனவும் அன்னா ஹசாரே குற்றம்சாட்டியுள்ளார்.
கடந்த 2011-ஆம் ஆண்டு ஊழலுக்கு எதிராக அன்னா ஹசாரே மாபெரும் போராட்டத்தை நடத்தினார். இதில் இளைஞர்கள் பலரும் கலந்துகொண்டு அவருடன் துணை நின்றனர். ஊழலை ஒழிக்க மத்தியில் லோக்பால் மசோதாவையும், ஒவ்வொரு மாவட்டத்திலும் லோகயுக்தா அமைப்பையும் உருவாக்க வேண்டும் என்பதே அவருடைய நீண்ட கால கோரிக்கையாகும்.
இந்நிலையில், காந்தியின் 148-வது பிறந்தநாளை முன்னிட்டு, மத்திய பிரதேச மாநிலம் ராஜ்கட்டில் உள்ள காந்தி சிலைக்கு மரியாதை செலுத்தினார். அதன்பின் நிகழ்ச்சியில் பேசிய அவர், “லோக்பால், லோகயுக்தா அமைப்புகள் பலமற்றதாக உள்ளது. அதனால், ஊழலுக்கு எதிராக மாபெரும் போராட்டத்தை துவக்க உள்ளேன்”, என கூறினார்.
வெளிநாட்டில் உள்ள கருப்பு பணத்தை ஆட்சியமைத்த 30 நாட்களிலேயே மீட்டு கொண்டு வருவதாக வாக்குறுதியளித்த மத்திய பாஜக அரசு, அதனை நிறைவேற்றவில்லை எனவும், பணமதிப்பு நீக்க நடவடிக்கை மூலம் உள்நாட்டு கருப்பு பணத்தையும் ஒழிக்கவில்லை எனவும் அன்னா ஹசாரே கடுமையாக விமர்சித்தார்.
மேலும், லோக்பால் மசோதாவை உருவாக்க பிரதமர் நரேந்திரமோடி ஆர்வம் காட்டவில்லை எனவும் அன்னா ஹசாரே கடுமையாக குற்றம்சாட்டினார்.
விவசாயிகள் தற்கொலை, விவசாய விளைபொருட்களுக்கு உரிய விலை, பெண்கள் பாதுகாப்பு குறித்து பல வாக்குறுதிகளை தேர்தல் நேரத்தில் அளித்த பாஜக அரசு, அவை குறித்து எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும், பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது எனவும் சாடினார். விவசாயிகள் தற்கொலை அதிகரித்துள்ளதாகவும், விவசாய விளைபொருட்களுக்கு தகுந்த ஆதார விலை கிடைக்கவில்லை எனவும் அன்னா ஹசாரே குற்றம்சாட்டினார்.
மேலும், குற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில், மீண்டும் ஒரு சத்தியாகிரக போராட்டத்தை காந்தி சமாதியில் இருந்து துவங்க வேண்டியுள்ளதாகவும், அதுகுறித்து தங்கள் குழு ஆலோசனை நடத்தி வருவதாகவும் அன்னா ஹசாரே தெரிவித்தார். இந்த போராட்டம் இந்தாண்டின் இறுதி வாரம் அல்லது அடுத்தாண்டின் முதல் வாரத்தில் துவங்கும் எனவும் அவர் கூறினார்.