கர்நாடகாவில் மே 10-ம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி அங்கு பா.ஜ.க தேர்தல் இணைப் பொறுப்பாளராக தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை நியமிக்கப்பட்டுள்ளார். இந்தநிலையில் நேற்று (ஏப்ரல் 17) காலை 9.55 மணியளவில் அண்ணாமலை உடுப்பிக்கு
ஹெலிகாப்டர் மூலம் சென்றார். இதைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான வினய்குமார் சொரகே வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க அண்ணாமலை ஹெலிகாப்டரில் வந்ததாக பரபரப்பு குற்றஞ்சாட்டினார்.
இதையடுத்து, உடுப்பி தேர்தல் அதிகாரிகள் 4 இடங்களில் சோதனை நடத்தினர். அண்ணாமலை கொண்டு வந்த உடமைகளையும் சோதனைக்கு உட்படுத்தினர். அதிகாரிகள் குழு நடத்திய சோதனையில் தேர்தல் விதிமுறை மீறல்கள் எதுவும் கண்டறியப்படவில்லை என தெரிவித்தனர்.
தி ஓஷன் பேர்ல் ஹோட்டலுக்கு செல்ல அண்ணாமலை பயன்படுத்தி வாகனம், கௌப்பிற்கு செல்லும் போது பயன்படுத்திய வாகனம் என எல்லாவற்றையும் அதிகாரிகள் சோதனை செய்தனர். மேலும் அவரது பேக்கை சோதனை செய்த போது 2 ஜோடி ஆடைகள் மற்றும் ஒரு தண்ணீர் பாட்டில் இருந்ததாக தேர்தல் கண்காணிப்பு குழு தெரிவித்தனர்.
பின்னர் மதியம் 2 மணியளவில் அண்ணாமலை ஓட்டலுக்கு திரும்பியதும், மீண்டும் அதிகாரிகள் குழு சோதனை செய்ததாகவும் தெரிவித்தனர். சோதனை குறித்து தேர்தல் அதிகாரிகள் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வருகையின் போது நாங்கள் பல்வேறு கட்டங்களில் சோதனை நடத்தினோம். அவர் தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக நாங்கள் எதுவும் கண்டறியவில்லை" எனக் கூறியுள்ளனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil