ஆண்டொன்றுக்கு இந்தியாவில் சுமார் 8000 பேர் வரதட்சணை கொடுமையால் உயிரிழக்கின்றனர் என தேசிய குற்றப்பதிவு அமைப்பு வெளியிட்டுள்ள புள்ளி விவரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வரதட்சணை என்பது திருமணத்தின் போது பெண் வீட்டாரிடம் இருந்து மணமகன் வீட்டார் கேட்டுப் பெறும் பணம், நகை அல்லது சொத்து போன்றவைகளாகும். இது சீர், செய்முறை போன்ற வேறு சில பெயர்களாலும் அழைக்கப்படுகிறது.
இந்த வரதட்சணை என்பது சங்க கால நூல்கள் எதிலும் இடம் பெறவில்லை. ஒரு பெண் ஆண் ஒருவரை மணக்க வரதட்சணை கொடுக்க வேண்டும் எனவும் குறிப்பிடப்படவில்லை. ஆண்களின் வீரத்தை பார்த்து தான் பெண் மாலையிட்டாள் என பண்டை கால நூல்கள் குறிப்பிடுகின்றன.
ஆனால், கடந்த 40, 50 ஆண்டுகளில் இந்த வரதட்சணை பிரச்னை விஸ்வரூபம் எடுத்துள்ளது. புகுந்த வீட்டுக்கு செல்லும் பெண்கள் அங்கு கஷ்டப்படாமல் இருக்க சிறிதளவு உதவி புரிவதற்காகவும், ஒருவேளை கணவன் இறந்து விட்டால் அவளுக்கு கொடுக்கப்படும் பொருட்களை வைத்துக் கொண்டு அவள் வாழ்க்கை நடத்தவும் பெண் வீட்டாரால் கொடுக்கப்பட்டு வந்தது. ஆனால், நாளடைவில் மணமகன் வீட்டாரின் வருவாய் ஈட்டும் காரணியாக அது மாறி விட்டது. திருமண நேரத்தில் மட்டுமல்லாமல், அதற்கு பின்னரும் இது தொடர்கிறது.
இந்த வரதட்சணையை கொடுக்க முடியாத பல பெண்கள் மாப்பிள்ளை வீட்டாரின் கொடுமையால் பாதிக்கப்படும் நிலை தொடர்ந்து இருந்து வருகிறது. இதனால், பல பெண்கள் தற்கொலை செய்து கொள்தல், கொலை செய்யப்படுதல், பிறந்த வீட்டிற்குத் துரத்தப்படுதல் போன்ற பல்வேறு நிகழ்வுகள் நடைபெறுகின்றன. சமூகத்தில் பல ஆண்டுகளாக வேரூன்றியுள்ள வரதட்சணை என்ற கொடுமையை ஒழிக்கும் நோக்கத்தில், வரதட்சணை தடுப்பு சட்டத்தை கடந்த 1961-ஆம் ஆண்டு மத்திய அரசு அமல்படுத்தியது. காலத்திற்கு ஏற்றாற்போல் அதில் சில திருத்தங்களையும் அரசு செய்துள்ளது. எனினும் வரதட்சணை கொடுமைகள், மரணங்கள் நிகழ்ந்து கொண்டு தான் இருக்கின்றன.
தேசிய குற்றப்பதிவு அமைப்பு வெளியிட்டுள்ள புள்ளி விவரத்தின் அடிப்படையில், ஆண்டொன்றுக்கு இந்தியாவில் சுமார் 8000 பேர் வரதட்சணை கொடுமையால் உயிரிழக்கின்றனர். அதேபோல், போல் தான் பெண் சிசுக் கொலையும். கருவிலேயே அதனை அழித்து விடுவது அல்லது பிறந்த பின்னர் கொலை செய்வது. பெண் குழந்தைகளைப் பெறுதல் செலவினம் என கருதப்படுவதாலும் பெண் சிசுக்கொலை அதிகமாக நடைபெறுகிறது. சமுதாயப் பொருளாதாரக் காரணங்களும் பெண் சிசுக் கொலைக்கு காரணமாகிறது. ஆனால், வரதட்சணை மற்றும் பெண் சிசுக் கொலை இந்த இரண்டும் சமூகத்தின் பேரழிவுக்கு காரணமான கூறுகள். பெண் சிசுக்களை கொல்வது மட்டுமல்லாமல் அக்குழந்தையை பெற்றெடுத்த தாயும் கொடுமைக்குள்ளாவது கூடுதல் வேதனை.
சமீபத்திய நிகழ்வாக, பஞ்சாப் மாநிலம் பாட்டியாலா மாவட்டத்தை சேர்ந்தவர் மீனா காஷ்யப் விவகாரம். தல்ஜீத் சிங் என்பவரை இரண்டு ஆண்டுகளுக்கு முன் திருமணம் முடித்த இவருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. இதனை தல்ஜீத் சிங்கின் குடும்பத்தினர் ஏற்கவில்லை. அதேசமயம், ரூ.7 லட்சம் வரதட்சணை கேட்டும் கொடுமைப்படுத்தி வந்துள்ளனர்.
இதையடுத்து, குழந்தையுடன் தனியாக வசித்து வந்த மீனா காஷ்யப்பை, தல்ஜீத் சிங்கின் சகோதரரும் அவரது நண்பர்களும் ஹாக்கி மட்டைகளால் கொடூரமாகத் தாக்கியுள்ளனர். இந்த காட்சிகள் தற்போது வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து மீனாவின் தந்தை கூறுகையில்,"வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்துவதாக கடந்த ஆண்டே போலீசாரிடம் புகார் கொடுத்தோம். ஆனால், எந்த நடவடிக்கையும் இல்லை" என வேதனை தெரிவித்துள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.