George Mathew
இந்தியாவில் கொரோனா பாதிப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஆகஸ்ட் 1 ம் தேதி, நாட்டின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 17.50 லட்சத்தை எட்டியுள்ளன. சுகாதார காப்பீட்டாளர்கள் உள்ளிட்ட பொது காப்பீட்டு நிறுவனங்களில், கொரோனா தொடர்பான காப்பீட்டு உரிமைகோரல்கள் முந்தைய மாதத்தை விட 240 சதவீதத்துக்கும் அதிகமான வளர்ச்சியைக் கண்டுள்ளன.
ஜூலை கடைசி வாரத்தில், கோவிட் சிகிச்சைக்காக ,71,423 பேருக்கு ரூ .1,145.87 கோடி காப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டதாக பொது காப்பீட்டு கவுன்சில் தொகுத்த புள்ளிவிவரங்களில் தெரிய வந்தது. ஜூன் 22 அன்று, மொத்தம் 20,965 பேருக்கு ரூ .332 கோடி காப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டிருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.
எவ்வாறாயினும், நாட்டின் ஒட்டு மொத்த காப்பீடுப் பரவல் மிகக் குறைவாக உள்ளதால், கொரோனாவால் பாதிக்கப்பட்ட மொத்த எண்ணிக்கையில் 4.08 சதவீத பேர் மட்டுமே சுகாதார காப்பீட்டுத் தொகையை கோரியுள்ளனர். சமீபத்திய நிலவரப்படி (ஆகஸ்ட் 1), இந்தியாவின் கொரோனா பாதிப்பு 17.5 லட்சத்தைத் தாண்டியது. தனிமனிதரின் சராசரி உரிமைகோரல் ரூ .1.60 லட்சமாக உள்ளது.
37,000 க்கும் மேற்பட்ட கோவிட்- 19 இறப்புகள் நிகழ்ந்துள்ள நிலையில், நாட்டின் மிகப்பெரிய ஆயுள் காப்பீட்க் குழுமமான லைஃப் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் , இதுவரை 561 கோவிட் இழப்பு காப்பீடு உரிமைகோரலை சந்தித்தது. கோவிட் - 19 இழப்பு காப்பீட்டுத் தொகையாக எல்.ஐ.சி, இதுவரை ரூ. 26.74 கோடி செலுத்தியுள்ளது.
கட்டுரையை ஆங்கிலத்தில் படிக்க இங்கே கிளிக் செய்யவும்
"காப்பீடுத் தொகை கோரிக்கைகளை முடித்து வைப்பதில் எல்.ஐ.சி எப்போதுமே கவனம் செலுத்தி வருகிறது ... கோவிட் -19 இழப்பு காப்பீட்டுத் தொகையை விரைவாக வழங்குவதன் முக்கியத்துவத்தை நாங்கள் உணர்ந்துள்ளோம் "என்று எல்.ஐ.சி கடந்த வெள்ளிக்கிழமை செய்திக் குறிப்பில் தெரிவித்தது.
இந்தியாவில் சராசரியாக, சுகாதார காப்பீட்டுத் திட்டத்தின் மதிப்பு ரூ. 2 லட்சம் என்ற அளவில் உள்ளது. கொரோனா நோய்த் தொடரில், குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் பாதிக்கப்படுவதால், பெரும்பாலானோருக்கு இந்த சுகாதார காப்பீட்டுத் தொகை போதுமானதாக இல்லை.
“கோவிட் -19 பாதிப்பையும், தீவிரத் தன்மையையும் காப்பீட்டு நிறுவனங்கள் கண்காணித்து வருகின்றனர். காலப்போக்கில், அதன் தீவிரத்தன்மை குறைந்தாலும், பாதிப்பு அதிகரித்து வருகிறது. இறப்பு எண்ணிக்கை கவனித்தில் கொள்ள வேண்டிய மற்றொரு அளவுருவாக (இண்டிகேட்டர்) உள்ளது … தடுப்பு மருந்து கண்டு பிடிக்க முடியாமல் போனால் (அ) அதை உருவாக்க நீண்ட நேரம் எடுத்தால், பிரீமியத்தை அதிகரிக்க வேண்டிய அவசியம் இருக்கும் ”என்று ராட்கோ அண்ட் கம்பெனியின் ஆலோசனைச் செயலாளர் கோபால் வி.குமார் கூறினார்.
ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் மூலம், ஆண்டுக்கு ஒரு குடும்பத்திற்கு 5 லட்சம் ரூபாய் மருத்துவக் காப்பீடு வழங்க வகை செய்யப்பட்டது. ஏழை மக்கள் மற்றும் சமுதாயத்தில் கீழ்நிலையில் உள்ள மக்களுக்கு உரிய மருத்துவ வசதிகள் மற்றும் மருத்து சிகிச்சை கிடைப்பதை உறுதி செய்வதற்காகவே இந்த திட்டம் கொண்டுவரப்பட்டது . இந்த திட்டத்தின் கீழ் கோவிட் -19 பரிசோதனை மற்றும் சிகிச்சை இலவசமாக அளிக்கப்படுகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil