Advertisment

இந்தியா கூட்டணியை கடுமையாக விமர்சித்த மோடி; நம்பிக்கை இல்லா தீர்மானத்தை கையில் எடுத்த எதிர்க்கட்சிகள்

கிழக்கிந்திய கம்பெனி, இந்தியன் முஜாஹிதீன் மற்றும் பி.எஃப்.ஐ ஆகிய அமைப்புகளின் பெயர்களிலும் இந்தியா உள்ளது - மோடி விமர்சனம்; "நீங்கள் என்ன வேண்டுமானாலும் சொல்லுங்கள், நாங்கள் இந்தியா" - ராகுல் காந்தி பதிலடி

author-image
WebDesk
New Update
Modi with ministers

மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், பிரகலாத் ஜோஷி உள்ளிட்டோருடன் பிரதமர் நரேந்திர மோடி பா.ஜ.க நாடாளுமன்றக் கட்சிக் கூட்டத்திற்குப் பிறகு புறப்பட்டார். (பி.டி.ஐ)

Liz Mathew , Manoj C G

Advertisment

மணிப்பூர் நிலவரம் குறித்து அவையில் பிரதமர் அறிக்கை வெளியிட வேண்டும் என்று வலியுறுத்தி, நாடாளுமன்ற நடவடிக்கைகளை முடக்கியதற்காக எதிர்க்கட்சிகளை தாக்கிய பிரதமர் நரேந்திர மோடி, இந்தியா என்ற பெயரை எதிர்க்கட்சிகள் தங்களது கூட்டணிக்கு தேர்ந்தெடுத்தது மக்களை தவறாக வழிநடத்தும் முயற்சி என்றும், கிழக்கிந்திய கம்பெனி, இந்திய தேசிய காங்கிரஸ் மற்றும் தடை செய்யப்பட்ட அமைப்புகளான இந்தியன் முஜாஹிதீன் மற்றும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா போன்றவற்றின் பெயர்களில் கூட இந்த வார்த்தை இடம் பெற்றுள்ளதால், அதற்கு எந்த அர்த்தமும் இல்லை என்று கூறினார்.

இதற்கு பதிலளித்த எதிர்க்கட்சியினர், கவனத்தை திசை திருப்புவதற்காகவே, பதற்றத்துடன் இருக்கும் பிரதமர் இதுபோன்ற கருத்துக்களைக் கூறுகிறார் என்றனர். இதற்கு இடையில், மோடி அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் புதன்கிழமை நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருகின்றன.

இதையும் படியுங்கள்: 2024 தேர்தல்; நாடாளுமன்றம் மீண்டும் முடக்கம்; மணிப்பூர் விவகாரத்தை எதிர்க்கட்சிகள் தீவிரமாக கையில் எடுப்பது ஏன்?

இந்தியா கூட்டணி குறித்த மேற்கண்ட கருத்துக்களை பா.ஜ.க நாடாளுமன்றக் கட்சியின் கூட்டத்தில் கூறிய மோடி, 2024-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலுக்குத் தயாராகுங்கள் என்று கட்சியினரிடம் வலியுறுத்தி, அதற்கான வியூகத்தையும் கோடிட்டுக் காட்டினார்.

இந்தியா என்று அழைக்கப்படும் 26 கட்சிகள் கொண்ட எதிர்க்கட்சிக் கூட்டணியை பற்றி மோடி கூறிய கருத்துக்களை பகிர்ந்துக் கொண்ட பா.ஜ.க எம்.பி, "இந்தியாவை ஆள விரும்பிய கிழக்கிந்திய கம்பெனி, இந்திய தேசிய காங்கிரஸ் மற்றும் இந்தியன் முஜாஹிதீன் மற்றும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா ஆகிய அனைத்தின் பெயர்களிலும் இந்தியா இருப்பதாக மோடி கூறினார்," என்று தெரிவித்தார்.

இந்திய தேசிய காங்கிரஸும் கிழக்கிந்திய நிறுவனமும் வெளிநாட்டினரால் நிறுவப்பட்டவை என்று பா.ஜ.க தலைவர்களிடம் மோடி கூறியதாக முன்னாள் மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கூறினார். இந்தியன் முஜாஹிதீன் மற்றும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா போன்ற பெயர்களையும் மக்கள் பயன்படுத்தினர், ஆனால் அவர்களின் யதார்த்தம் அவர்கள் முன்னிறுத்த முயற்சித்ததில் இருந்து முற்றிலும் மாறுபட்டது என்று ரவிசங்கர் பிரசாத் மேற்கோள் காட்டினார்.

கூட்டத்தில் கலந்துக் கொண்ட மற்ற தலைவர்கள், நாட்டில் இதுபோன்ற "நோக்கமற்ற" மற்றும் "திசையற்ற" எதிர்க்கட்சி இருந்ததில்லை என்று பிரதமர் குறிப்பிட்டதாக கூறினார்.

மணிப்பூர் விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க அரசு தயாராக இருப்பதாக இரு அவைகளிலும் எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு கடிதம் எழுதியுள்ளதாக கட்சி எம்.பி.க்களிடம் தெரிவித்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பின்னர் எதிர்க்கட்சிகளைக் குறிவைத்து ட்விட்டர் பதிவை வெளியிட்டார். "அதன் வேட்டையாடும் கடந்த காலத்திலிருந்து விடுபடும் முயற்சியில், எதிர்க்கட்சி கூட்டணி அதன் பெயரிடலை மாற்றியுள்ளது. ஆனால் I.N.D.I.A என்று வெறும் பெயரை மாற்றுவது, அவர்களின் கடந்த கால செயல்களை மக்களின் நினைவிலிருந்து அழிக்காது. நமது நாட்டு மக்கள் இந்த பிரச்சாரத்தின் நோக்கத்தை புரிந்துக் கொள்ளும் அளவுக்கு புத்திசாலிகள் மற்றும் புதிய லேபிளுடன் உள்ள இந்த பழைய தயாரிப்புக்கு அதே மறுப்பை தெரிவிப்பார்கள்,” என்று அமித் ஷா தனது ட்வீட்டில் கூறினார்.

உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தும் ட்விட்டர் பதிவில் எதிர்க்கட்சிகளை கடுமையாக சாடினார்: “உங்கள் பெயரை மாற்றுவது உங்கள் விளையாட்டை மாற்றாது!”

மக்களவைத் தேர்தலுக்குப் பிறகும் எதிர்க்கட்சியில் தான் இருப்போம் என்பதை அதன் தலைவர்கள் உணர்ந்ததால் எதிர்க்கட்சிகள் விரக்தியடைந்துள்ளதாக பா.ஜ.க கூட்டத்தில் மோடி கூறினார். "எதிர்ப்பதே அவர்களின் வேலை" என்பதால் எதிர்க்கட்சிகளின் போராட்டங்களால் திசைதிரும்ப வேண்டாம் என்று மோடி எம்.பி.க்களிடம் கூறினார். அதற்கு பதிலாக எம்.பி.,க்கள் பா.ஜ.க ஆட்சியின் பலன்களை நாட்டின் ஒவ்வொரு மூலைக்கும் சென்றடையச் செய்வதில் கவனம் செலுத்த வேண்டும் என்று மோடி மேற்கோள் காட்டினார்.

"பா.ஜ.க.,வின் மூன்றாவது ஆட்சியில் இந்தியா மூன்றாவது பெரிய பொருளாதாரமாக மாறுவதை உறுதி செய்ய நாங்கள் உழைக்க வேண்டும் என்று பிரதமர் கூறினார்," என்று பா.ஜ.க.,வின் எம்.பி ஒருவர் கூறினார்.

கிட்டத்தட்ட அனைத்து நாடுகளும் இந்தியாவின் தற்போதைய தலைமையின் மீது நம்பிக்கை வைத்துள்ளதாகவும், அதனால்தான் அடுத்த பொதுத் தேர்தல் நெருங்கி வந்தாலும் அமெரிக்கா, பிரான்ஸ் போன்ற நாடுகள் இந்தியாவுடன் ஒப்பந்தம் செய்து கொள்கின்றன என்றும் மோடி நினைவுபடுத்தினார் என அந்த எம்.பி கூறினார்.

கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி, “இது தேசிய ஜனநாயகக் கூட்டணியின் 25-வது ஆண்டு என்றும், பா.ஜ.க மூத்த தலைவர்களான அடல் பிஹாரி வாஜ்பாய் மற்றும் எல்.கே. அத்வானியின் பாரம்பரியம் இந்தக் கூட்டணி என்றும் பிரதமர் மோடி கூறினார். அதை நாம் கொண்டாட வேண்டும். கூட்டங்களை நடத்துவது முதல் கருத்துக்களைப் பரிமாறிக்கொள்வது வரையிலான ஆலோசனைகளையும், மிகுந்த விருப்பத்துடனும் நம்பிக்கையுடனும் தேசிய ஜனநாயகக் கூட்டணியைக் கொண்டாடவும், முன்னோக்கி கொண்டு செல்லவும் பிரதமர் அழைப்பு விடுத்துள்ளார்,” என்று கூறினார்.

மணிப்பூரைப் பற்றி பேசுங்கள்: மல்லிகார்ஜூன் கார்கே

பிரதமர் மோடியை கடுமையாக சாடிய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, ”மணிப்பூர் விவகாரம் குறித்து பிரதமர் மோடி சபைக்கு வந்து பேச வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறோம். ஆனால் அவர் கிழக்கிந்தியக் கம்பெனியைப் பற்றிப் பேசுகிறார்... நீங்கள் கிழக்கிந்தியக் கம்பெனியைப் பற்றிப் பேச வேண்டும் என்றால்... சுதந்திரப் போராட்டத்தில் இந்து மகாசபையின் பங்கு என்ன... குருஜி கோல்வால்கர் என்ன செய்தார்... சாவர்க்கர் அப்போது என்ன சொன்னார்... கிழக்கிந்திய கம்பெனியில் வேலை பெற்றவர்கள் யார்... வெள்ளையனே வெளியேறு இயக்கத்தை உடைக்க முயன்றவர்கள் யார்?” என்று கேள்வி எழுப்பினார்.

“பிரதமர் கிழக்கிந்திய கம்பெனி, இந்தியன் முஜாகிதீன் பற்றி பேசுகிறார்... சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்காமல், ஆங்கிலேயர்களுக்கும் கிழக்கிந்திய கம்பெனியினருக்கும் உதவியவர்கள்... காந்திஜியைக் கொன்ற சித்தாந்தத்துடன் இணைந்த கட்சியைச் சேர்ந்தவர்கள்... நாங்கள் திசையற்றவர்கள் என்று சொல்கிறார்கள், காங்கிரஸ் கட்சி எப்போதுமே ‘இந்திய தாய்’ அதாவது ‘பாரத மாதா’வுடன் இருந்து வருகிறது... ஆங்கிலேயர்களின் அடிமைகள் தான் பா.ஜ.க.,வின் அரசியல் மூதாதையர்கள். பிரதமர் மோடி, உங்கள் பேச்சு திறமைகளால் நாட்டின் கவனத்தை திசை திருப்புவதை நிறுத்துங்கள். மணிப்பூரைப் பற்றி நாடாளுமன்றத்தில் பேசுங்கள், இந்தியாவைப் பற்றி தவறாகப் பேசி பிரதமர் பதவியின் கண்ணியத்தைக் குறைத்து மதிப்பிடாதீர்கள்,” என்று மல்லிகார்ஜூன் கார்கே கூறினார்.

காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தியும் மோடிக்கு பதிலடி கொடுத்துள்ளார். “நீங்கள் என்ன வேண்டுமானாலும் எங்களை அழைத்துக் கொள்ளுங்கள், திரு மோடி. நாங்கள் இந்தியா. மணிப்பூரை குணப்படுத்தவும், ஒவ்வொரு பெண் மற்றும் குழந்தையின் கண்ணீரை துடைக்கவும் நாங்கள் உதவுவோம். மணிப்பூரின் மக்கள் அனைவருக்கும் அன்பையும் அமைதியையும் திரும்பக் கொண்டு வருவோம். மணிப்பூரில் இந்தியா என்ற எண்ணத்தை மீண்டும் உருவாக்குவோம்,'' என்று கூறினார்.

“பிரதமர் ஏன் இந்தியாவை இவ்வளவு வெறுக்கிறார்” என்று ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளரும் டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் கேள்வி எழுப்பினார்.

காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கூறுகையில், பிரதமர் 26 கட்சிகள் கொண்ட இந்தியா கூட்டணியால் மிகவும் பதற்றமடைந்துள்ளார். “அவர் ஏறக்குறைய இறந்துவிட்ட NDA க்கு புதிய வாழ்க்கையை வழங்க முயற்சிப்பது மட்டுமல்லாமல், இன்று காலை தனது மோசமான முறைகேடுகளின் மூலம் அதற்கு ஒரு புதிய அர்த்தத்தையும் கொடுத்துள்ளார், அதாவது தேசிய அவதூறு கூட்டணி. அவர் மூலையில் முடக்கப்படும்போது எல்லாம், ​​இதைத்தான் திரு மோடி எப்போதும் செய்கிறார் - மறுப்பது, திசை திருப்புவது, சிதைப்பது, கவனத்தை மாற்றுவது மற்றும் அவதூறு செய்வது,” என்று ஜெய்ராம் ரமேஷ் கூறினார்.

எதிர்கட்சிகளின் அரசியல் கூட்டணியை மோடி பயங்கரவாதக் குழுவுடன் ஒப்பிட்டுப் பேசியது, “மணிப்பூர் நெருக்கடியிலிருந்து பொதுமக்கள் மனதைத் திசைதிருப்பும் அவநம்பிக்கையான நடவடிக்கை” என்று திரிணாமுல் காங்கிரஸ் (டி.எம்.சி) கூறியது. “நாடாளுமன்றத்திற்கு வெளியே பேசுவதற்குப் பதிலாக, மணிப்பூர் பிரச்சினையை அவையில் விவாதிக்குமாறு நாங்கள் அவருக்கு சவால் விடுகிறோம். அரசியலில் மக்களுக்கு முன்னுரிமை கொடுங்கள், ”என்று ராஜ்யசபாவின் டி.எம்.சி தலைவர் டெரெக் ஓ பிரையன் கூறினார்.

"பலமான எதிர்கட்சிகள் மீதான பயத்தை அடக்கும் முயற்சியில், மோடி அதை ஒரு பயங்கரவாத குழுவுடன் ஒப்பிட்டது அவமானகரமானது" என்று TMC கூறியது.

“ஒட்டுமொத்த பாராளுமன்ற உத்தி இந்தியா கூட்டணி கட்சிகளுக்கு நடைமுறையில் உள்ளது. அந்த வியூகத்தை செயல்படுத்துவதற்கான தந்திரங்கள் ஒவ்வொரு நாளும் உருவாகின்றன. மக்களவையின் விதி 198 நம்பிக்கையில்லா தீர்மானத்தை முன்வைப்பதற்கான நடைமுறையை கூறுகிறது. கதை இன்னும் இருக்கிறது” என்று டெரெக் ஓ பிரையன் கூறினார்.

புதன்கிழமை நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவதற்கான நோட்டீஸ் அளிக்க எதிர்க்கட்சிகள் தயாராகி வருகின்றன. மல்லிகார்ஜூ கார்கேவின் அலுவலகத்தில் காலை நடைபெற்ற எதிர்க்கட்சித் தலைவர்களின் கூட்டத்தில், அனைத்துக் கட்சிகளும் இந்த முன்மொழிவுக்கு ஒப்புதல் அளித்தன. டி.எம்.சி தலைவர்கள் தங்கள் தலைவரான மம்தா பானர்ஜியை தொடர்பு கொள்ள சிறிது நேரம் கோரியதாக வட்டாரங்கள் தெரிவித்தன. இந்த விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் புதன்கிழமை மீண்டும் விவாதிக்க உள்ளன.

கூட்டத் தொடருக்கு முன்னதாக நடைபெற்ற கட்சியின் நாடாளுமன்ற வியூகக் குழுக் கூட்டத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவருவது குறித்து காங்கிரஸ் தலைவர் ஒருவர் தெரிவித்ததாக காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்தன. "அமர்வு எவ்வாறு நடக்கும் என்பதை நாங்கள் காத்திருந்து பார்க்க முடிவு செய்துள்ளோம்," என்று காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஒரு தலைவர் கூறினார்.

காங்கிரஸ் கட்சி தனது எம்.பி.க்களுக்கு கொறடா உத்தரவு வழங்கியுள்ளது. அனைத்து எம்.பி.க்களும் புதன்கிழமை காலை 10.30 மணிக்கு கட்சியின் நாடாளுமன்ற அலுவலகத்தில் ஆஜராகுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

"பாராளுமன்ற ஜனநாயகத்தில், மக்களவையின் விதிகள் மற்றும் நடைமுறைகளில் கிடைக்கும் அனைத்து கருவிகளும் எதிர்க்கட்சிகளுக்கு திறந்தே இருக்கும். மணிப்பூர் விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் பிரதமர் உரையாற்ற வேண்டும் என்று நாங்கள் வலியுறுத்தி வருவதற்குக் காரணம், கடந்த 78-80 நாட்களில் மணிப்பூர் துரதிர்ஷ்டவசமாக கண்டுள்ள உணர்திறன் மற்றும் சீரழிவுதான். எனவே, அந்த சூழ்நிலையில், நாங்கள் எங்கள் கோரிக்கையில் உறுதியாக இருக்கிறோம், ஜனநாயகத்தில், நாடாளுமன்ற விதிகளின் கீழ் கிடைக்கும் அனைத்து கருவிகளும் எப்போதும் திறந்தே இருக்கும்,” என்று எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருமா என்ற கேள்விக்கு காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் மணீஷ் திவாரி கூறினார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Bjp India Rahul Gandhi Modi Congress Manipur
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment