மஹராஷ்டிரா நாண்டட் மாநகராட்சியை கைப்பற்றியது காங்கிரஸ்: 73 இடங்களில் அமோக வெற்றி

காங்கிரஸ் கட்சி அமோக வெற்றிபெற்றது. தேர்தல் களத்தில் தொடர் தோல்விகளை சந்தித்துவரும் காங்கிரஸ் கட்சியின் இந்த வெற்றி முக்கியமானதாக கருதப்படுகிறது.

குஜராத் மற்றும் இமாச்சல பிரதேச மாநிலங்களுக்கு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற இன்னும் சில மாதங்களே உள்ளன. இதனால், மஹராஷ்டிர மாநிலம் நாண்டட்-வகாலா தொகுதியில் நடைபெற்ற மாநகராட்சி தேர்தல் அரசியல் விமர்சகர்களால் உற்று நோக்கப்பட்டது.

இந்நிலையில், இந்த தேர்தல் முடிவுகள் வியாழக்கிழமை வெளியாகின. இதில், காங்கிரஸ் கட்சி அமோக வெற்றிபெற்றது. தேர்தல் களத்தில் தொடர் தோல்விகளை சந்தித்துவரும் காங்கிரஸ் கட்சியின் இந்த வெற்றி முக்கியமானதாக கருதப்படுகிறது.

மொத்தமுள்ள 81 இடங்களில், காங்கிரஸ் கட்சி 73 இடங்களில் வெற்றி பெற்றது. கடந்த 2012-ஆம் ஆண்டு நடைபெற்ற மாநகராட்சி தேர்தலில் 41 இடங்களை மட்டுமே கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது. பாஜக வெறும் 6 இடங்களில் மட்டுமே வெற்றிபெற்றது. மேலும், கடந்த முறை 12 இடங்களில் வெற்றிபெற்ற சிவசேனா கட்சி, இம்முறை ஒரு இடத்தை மட்டுமே கைப்பற்றியது.

கடந்த தேர்தலில் 11 இடங்களில் வெற்றிபெற்ற அனைத்திந்திய மஜ்லிஸ் ஈ-முஸ்லீமன் (ஏ.ஐ.எம்.ஐ.எம்) கட்சியால், இம்முறை ஒரு இடத்தக்கூட கைப்பற்ற முடியவில்லை. இக்கட்சி அப்பகுதியிலுள்ள சிறுபான்மை மக்களிடையே வலுவான கட்சி என்பது குறிப்பித்தக்கது. “முஸ்லிம்கள் பாஜகவுக்கு மாற்றாக ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சியை நினைக்கவில்லை. அதனால், அவர்கள் காங்கிரஸ் கட்சிக்கு வாக்களித்துள்ளனர். பாஜகவுக்கு இனி இறங்குமுகம்தான். மஹராஷ்டிராவில் ஆரம்பிக்கும் பாஜகவின் தோல்வி, எல்லா மாநிலங்களிலும் பிரதிபலிக்கும்”, என காங்கிரஸின் இந்த வெற்றிக்கு முக்கிய காரணமான அசோக் சவான் தெரிவித்தார்.

ஜி.எஸ்.டி வரிவிதிப்பு, விவசாயிகள் பிரச்சனை உள்ளிட்டவற்றில் மத்திய அரசு மற்றும் முதலமைச்சர் தேவேந்திர ஃபட்னாவிஸ் தலைமையிலான பாஜக அரசு திறம்பட செயல்படாததாலேயே, அத்தொகுதியில் பாஜக தோல்விய தழுவியதாக கூறப்படுகிறது.

தொகுதியின் பின்னணி:

கடந்த 20 வருடங்களாக நாண்டட்-வகாலா தொகுதியில் உள்ளாட்சி தேர்தல்களில் காங்கிரஸ் கட்சியே வெற்றி பெற்றிருக்கிறது. கடந்த 2014-ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தல் மற்றும் சட்டப்பேரவை தேர்தல்களில் காங்கிரஸ் கட்சியே நாண்டட் தொகுதியில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்: நெருங்கும் குஜராத் சட்டப்பேரவை தேர்தல்: வெற்றியை நோக்கிய பயணத்தில் ராகுல் காந்தி

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest India news in Tamil.

×Close
×Close