வெள்ளத்தில் மிதக்கும் அசாம், குஜராத்!

தென்மேற்கு பருவமழை துவங்கிவிட்டதால், இந்தியாவின் பல மாநிலங்களில் மழை கடுமையாக பெய்து வருகிறது. குறிப்பாக, அசாம் மாநிலத்தில் வெள்ளம் காரணமாக 2 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

குஜராத் மாநிலம் மோர்பி மாவட்டத்தில், தன்கரா தாலுகாவில் கடந்த 24 மணி நேரத்தில் 280 மி.மீ., மழை பதிவாகியுள்ளது. இதனால், பல தடுப்பணைகள் நிரம்பி வழிகின்றன. வெள்ள நீரில் சிக்கிய 14 பேரை தேசிய பேரிடர் மேலாண்மை அமைப்பினர் மீட்டனர். பனஸ்கந்தாவில் உள்ள சுயிகம் தாலுகா, கிர் சோம்நாத் மாவட்டத்தில் கோடினர் தாலுகா, தேவ்பூமி மாவட்டம் கல்யாண்பூர் தாலுகா ஆகிய பகுதிகளில் 110 மி.மீ., மழை பதிவாகியுள்ளது. ஆமதாபாத்தில் 31 மி.மீ., மழை பதிவானது. தாழ்வான பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. அடுத்த 3 நாட்களுக்கு கனமழை பெய்யும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது.

அதேபோல், இமாச்சல பிரதேசத்தின் கிண்ணனூர், குல்லு, சிம்லா, கங்ரா, சம்பா மாவட்டங்களில் கடந்த சனிக்கிழமையே தென்மேற்கு பருவமழை துவங்கிவிட்டது. மாநிலத்தில் உள்ள மற்ற பகுதிகளிலும் கனமழை காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டது. மணாலி – லே நெடுஞ்சாலையில் கொக்சர் பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டது. வரும் 7-ஆம் தேதி வரை, அங்கு இடி மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் கூறியுள்ளது. ஒரு சில பகுதிகளை விட மற்ற பகுதிகளில் வழக்கத்தை விட 21 சதவீத அதிகமாக மழை பதிவானது. உனா, குல்லு, சிர்மாவூர் மாவட்டங்களில் முறையே, 88, 82, 71 சதவீத மழை கொட்டியுள்ளது. அங்கு 142.5 மி.மீ., 156.5 மி.மீ., 262.8 மி.மீ., மழை பதிவானது.

அசாம் மாநிலத்தில் வெள்ளப்பெருக்கு காரணமாக 2.68 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். பார்பேட்டா, லக்மிபூர், ஜோர்கட், கரிம்கன்ஜ், கசார், தேமாஜி, கர்பி ஆங்லோங் மற்றும் பிஸ்வநாத் மாவட்டங்கள் வெள்ளப்பெருக்கால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. 453 கிராமங்கள் வெள்ளத்தினால் மூழ்கியுள்ளன. 5,272 ஹெக்டர் பயிர்கள் சேதமடைந்துள்ளது. கரீம்கன்ஜ் மாவட்டத்தில் 1.53 லட்சம் மக்களும், லக்மிபூரில் 76 ஆயிரம் பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். நான்கு மாவட்டங்களில் 269 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டு, 5,670 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

மேகாலாயா, நாகாலாந்து, மணிப்பூர், மிசோரம், திரிபுரா, மேற்கு வங்கத்தின் ஒரு பகுதி, சிக்கிம், பீஹார், உ.பி., கிழக்கு பகுதிகளில் கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. அருணாச்சல பிரதேசம், ஜார்க்கண்ட், கங்கை நதி பாயும் மேற்கு வங்கம், ஒடிசா, ஜார்க்கண்ட், உ.பி., மேற்கு பகுதி, உத்தரகாண்ட், குஜராத், கோவா, சத்தீஸ்கர் மற்றும் கடலோர கர்நாடகாவில் மிதமான மழை பெய்யும் எனவும் கூறப்பட்டுள்ளது.

×Close
×Close