அசாம் மாநிலத்தில் வெள்ளப் பெருக்கால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை பிரதமர் மோடி இன்று ஹெலிகாப்டர் மூலம் ஆய்வு செய்கிறார்.
அசாம் மாநிலத்தில் பெய்து வரும் தொடர் கனமழையால் மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்கள் நீரில் தத்தளித்து வருகின்றன. அசாமில் முக்கிய நதியான பிரம்மபுத்திரா, திகோ தன்சிரி, ஜியா பாரலி, பேகி, குஷியாரா, சுபன்ஸ்ரீ உள்ளிட்ட அனைத்து நதிகளிலும் அபாய கட்டத்தை தாண்டி வெள்ள நீர் ஓடிக் கொண்டிருக்கிறது. வெள்ளத்தில் சிக்கி சுமார் 50-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். காசிரங்கா தேசிய பூங்கா நீரில் மூழ்கியதில் 70 விலங்குகளும் உயிரிழந்துள்ளது.
வெள்ளத்தில் மொத்தம் 66,516 ஹெக்டேர் விவசாய நிலம் நீரில் மூழ்கியுள்ளதாக அசாம் மாநில பேரிடர் மேலாண்மைக் குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அசாம் மாநிலத்தின் பேரிடர் மேலாண்மைக் குழு வெளியிட்டுள்ள தகவலின் படி, மாநிலத்தின் 24 மாவட்டங்களில் உள்ள 1,795 கிராமங்களில் வசிக்கும் லட்சக்கணக்கான மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். தீமாஜி, பிஸ்வனாத், லகிம்பூர், சோனித்பூர், தர்ராங், நால்பரி, பர்பேட்டா, பொங்கய்கான், சிர்ராங், கொக்ரஹார், துபுரி, சோத்புர் சல்மாரா, கோலோபாரா உள்ளிட்ட மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் தகவல் தொடர்பு, மின்சாரம் உள்ளிட்ட சேவைகளும் துண்டிக்கப்பட்டுள்ளன. பல்லாயிரக் கணக்கானோர் வெள்ள பகுதியில் இருந்து மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கான உணவு, நிவாரண உதவி உள்ளிட்டவைகள் மாவட்ட நிர்வாகம், சமூக அமைப்புகள் மூலம் வழங்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், அசாம் மாநிலத்தில் வெள்ளத்தால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை பிரதமர் மோடி ஹெலிகாப்டர் மூலம் ஆய்வு செய்கிறார். தொடர்ந்து, மாநில முதல்வர், அமைச்சர்கள் மற்றும் மூத்த அதிகாரிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார்.
முன்னதாக, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு ரூ.2 லட்சமும், படுகாயமடைந்தவர்களுக்கு ரூ.50,000 நிவாரண உதவியாக மத்திய அரசின் சார்பில் வழங்கப்படும் என ஏற்கனவே உத்தரவிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.