உத்திரபிரதேச மாநிலத்தில் சர்க்கரை ஆலையில் இருந்து வெளியான வேதிவாயுவினால் பாதிக்கப்பட்டு, மாணவ-மாணவிகள் 30 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. உத்திரபிரதேச மாநிலம் ஷாமிலி பகுதியில் சரஸ்வதி ஷிஷு வித்யா மந்திர் பள்ளி செயல்பட்டு வருகிறது. அந்த பள்ளியின் அருகே சர்க்கரை ஆலை ஒன்று உள்ளது.
1933-ம் ஆண்டு நிறுவப்பட்ட அந்த ஆலை, நீண்ட காலமாக மூடப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், மீண்டும் அந்த ஆலையில் திறக்கும் பணிகள் நடந்து வந்த நிலையில், இன்று( செவ்வாய் கிழமை) ஆலையில் இருந்து ஆபத்தான வேதிவாயு கசித்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக, பள்ளியில் இருந்த மாணவ-மாணவிகளுக்கு திடீர் வாந்தி, கண் எரிச்சல் ஏற்பட்டது. வேதிவாயுவினால் பாதிக்கப்பட்ட மாணவ-மாணவிகள் அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட எந்த குழந்தைகளுக்கும் ஆபத்து இல்லை என மருத்துவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆபத்தான வேதிவாயு வெளிவாக வெளியாக காரணமாக இருந்த சர்க்கரை ஆலைக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.
இதனிடையே, உரிய பாதுகாப்பு இல்லாமல் சர்க்கரை ஆலையை நடத்தி வந்த சர்க்கரை ஆலையின் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர்கள் அப்பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில், விசாரணை நடத்த அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.