செல்லாது என அறிவிக்கப்பட்ட ரூ.2.70 கோடி பழைய ரூபாய் நோட்டுகளை ராஜஸ்தான் மாநில தீவிரவாத தடுப்புப் பிரிவு போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். இது தொடர்பாக காவலர் உள்பட மூன்று பேரையும் அவர்கள் கைது செய்துள்ளனர்.
கருப்புப் பணம் மற்றும் கள்ள நோட்டுகளை ஒழிக்கும் நடவடிக்கை என, ரூ.500, 1000 நோட்டுகள் செல்லாது #DeMonetisation என மத்திய அரசு, கடந்த 2016-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 8-ம் தேதியன்று திடீரென அதிரடியாக அறிவித்தது. தொலைக்காட்சி மூலம் அன்றைய தினம் இரவில் உரையாற்றிய பிரதமர் மோடி, இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
அதேசமயம், புதிய ரூ.500 மற்றும் ரூ.2000 நோட்டுகளையும் மத்திய அரசு வெளியிட்டது. அதேபோல், செல்லாது என அறிவிக்கப்பட்ட பழைய ரூபாய் நோட்டுகளை வங்கி, அஞ்சலகங்கள் உள்ளிட்ட இடங்களில் கொடுத்து அதனை செல்லத்தக்க புதிய ரூபாய் நோட்டுகளாக, 2016-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இறுதி வரை மாற்றிக் கொள்ளலாம் எனவும் மத்திய அரசு அறிவித்தது.
மத்திய அரசு அறிவித்த காலக்கெடுவுக்கு பின்னர் பழைய ரூபாய் நோட்டுகளை வைத்திருந்தால் அது குற்றமாகக் கருதப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்து அவசரச் சட்டத்தையும் மத்திய அரசு கொண்டு வந்துள்ளது.
இந்நிலையில், ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் ரூ.2.70 கோடி அளவுக்கு பழைய ரூபாய் நோட்டுகளை அம்மாநில தீவிரவாத தடுப்புப் பிரிவு போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். மேலும், இது தொடர்பாக ஊர்காவல் படையை சேர்ந்த காவலர் உள்பட மூன்று பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.