என் கார் மீது தாக்குதல் நடத்தியது பாஜக - ஆர்எஸ்எஸ் தொண்டர்கள் தான் என காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளார்.
வடமாநிலங்களில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக அசாம், ராஜஸ்தான், குஜராத் உள்ளிட்ட மாநிலங்கள் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகியுள்ளன. வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் நேற்று சென்றார்.
முதலில் ராஜஸ்தான் மாநிலம் சென்ற அவர், வெள்ளம் பாதித்த ஜல்லோர் உள்ளிட்ட பகுதிகளை பார்வையிட்டார். அவருடன், காங்கிரஸ் மூத்த தலைவர் சச்சின் பைலட், ராஜஸ்தான் முன்னாள் முதல்வரான அசோக் கெலாட் ஆகியோரும் உடன் சென்றனர். சாலை வழியாக சென்று வெள்ளம் பாதித்த பகுதிகளை பார்வையிட்ட ராகுலிடம், மழையால் பாதிக்கப்பட்ட மக்கள் தங்களது குறைகளை எடுத்துக் கூறினர். அதனைத் தொடர்ந்து, குஜராத் மாநிலத்தில் வெள்ளப் பெருக்கால் பாதிக்கப்பட்ட பகுதிகளையும் பார்வையிட அம்மாநிலத்துக்கு ராகுல் சென்றார்.
குஜராத் மாநிலம் பனஸ்கந்தா நகரில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புகளை பார்வையிட்ட பிறகு, தான் பயணிக்கவிருக்கும் ஹெலிகாப்டர் நின்றிருந்த பகுதிக்கு ராகுல்காந்தி காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது, அவர் சென்ற கார் மீது மர்ம நபர்கள் கல் வீசித் தாக்குதல் நடத்தினர். இதில், காரின் பின்பக்க கண்ணாடி உடைந்தது. மேலும், காரின் முன் இருக்கையில் அமர்ந்திருந்ததால் ராகுலுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இச்சம்பவத்துக்கு காங்கிரஸ் கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். மேலும், இந்த தாக்குதலுக்கு பாஜக தான் காரணம் என்றும் அவர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
ராகுல் கார் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்தை கண்டித்து, நாடு முழுவதும் ஆங்காங்கே அக்கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். தமிழகத்தை பொறுத்தவரை தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் திருநாவுக்கரசர் தலைமையில் சாலை மறியல் போராட்டம் நடத்தப்பட்டது.
இந்நிலையில், தன் கார் மீது தாக்குதல் நடத்தப்பட்டதற்கு பாஜக-ஆர்எஸ்எஸ் தொண்டர்கள் தான் காரணம் என காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல்காந்தி பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளார். இச் சம்பவதுக்கு பிரதமர் மோடி கண்டனம் தெரிவிக்கவில்லையே என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த ராகுல், ஒரு விஷயத்தில் தொடர்புடைய ஒருவர் எப்படி கண்டனம் தெரிவிக்க முடியும் என கேள்வி எழுப்பினார். மேலும், இது தான் பாஜக - ஆர்எஸ்எஸ் அரசியல் என்றும் அவர் சாடினார்.
முன்னதாக, இதுபோன்ற சம்பவங்கள் தன்னை தடுக்க முடியாது என்றும், மோடி குறித்த முழக்கங்கள், கறுப்புக் கொடிகள், கல் வீச்சு ஆகியவற்றால் மக்களுக்கான எங்களது சேவையை தடுக்க முடியாது என்றும் ராகுல் தெரிவித்திருந்தார்.
ராகுல் மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து கருத்து தெரிவித்துள்ள பாஜக, இது ஒரு அரசியல் தந்திர வேலை என தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.