குஜராத்தில் காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தியின் கார் மீது கல் வீசி தாக்குதல் நடந்தது. இது தொடர்பாக பா.ஜ.க. மீது புகார் கூறப்பட்டிருக்கிறது.
அகில இந்திய காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி, அஸ்ஸாமில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களை ஆகஸ்ட் 3-ம் தேதி பார்வையிட்டார். சில இடங்களில் படகில் சென்று பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறினார்.
அதைத் தொடர்ந்து, ஆகஸ்ட் 4-ம் தேதி ராஜஸ்தான், குஜராத் மாநிலங்களுக்கு செல்லும் வகையில் அவரது பயணத்திட்டம் வடிவமைக்கப்பட்டது. அதன்படி இன்று (ஆகஸ்ட் 4) காலையில் ராஜஸ்தானில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களை ராகுல் பார்வையிட்டார். பிறகு அங்கிருந்து விமானத்தில் குஜராத் மாநிலம், டானிரா என்ற இடத்தில் வந்து இறங்கினார்.
குஜராத்தில் கடந்த வாரம் பெய்த பலத்த மழையால் பாதிக்கப்பட்ட பனஸ்கந்தா, தாரா, மலோத்தரா பகுதிகளுக்கு காரில் சென்று வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களை ராகுல் சந்தித்தார். அங்கு காரில் சென்றபோது குறிப்பிட்ட ஒரு பகுதியில் ராகுலின் கார் மீது ஒரு கும்பல் கல் வீசி தாக்குதல் நடத்தியது. இதில் கார் கண்ணாடிகள் சேதம் அடைந்தன.
ராகுலுக்கு ‘இசட்’ பிரிவு பாதுகாப்பு உள்ளது. அவரது சுற்றுப்பயணத்தையொட்டி குஜராத் அரசும் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தது. அதைக் கடந்தும் கல்வீச்சு சம்பவம் நடந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்தத் தாக்குதல் தொடர்பாக குஜராத் பா.ஜ.க.வினர் மீது காங்கிரஸ் நிர்வாகிகள் குற்றம்சாட்டினர். எனினும் விசாரணைக்கு பிறகே இதில் உண்மையான நிலவரம் தெரியும் என குஜராத் போலீஸார் தெரிவித்தனர்.