பாபர் மசூதியை சிறிது தொலைவில் கட்டலாம் : ஷியா வக்ஃப் வாரியம்

சர்ச்சைக்குரிய இடத்தில் இருந்து சிறிது தூரம் தள்ளி மசூதியை கட்டலாம் என ஷியா வக்ஃப் வாரியம் உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

பாபர் மசூதி இடிப்பு வழக்கில், சர்ச்சைக்குரிய இடத்தில் இருந்து சிறிது தூரம் தள்ளி இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் மசூதியை கட்டலாம் என ஷியா வக்ஃப் வாரியம் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள பிராமணப் பத்திரத்தில் தெரிவித்துள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் முகாலய மன்னர் பாபர் பெயரில், கடந்த 16-ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட பாபர் மசூதி, கடந்த 1992-ஆம் ஆண்டு டிசம்பர் 6-ம் தேதி கரசேவகர்களால் இடித்து தரை மட்டமாக்கப்பட்டது.

பாபர் மசூதியை இடிக்கத் தூண்டியதாகவும், சதித்திட்ட குற்றச்சாட்டின் அடிப்படையிலும், பாஜக மூத்த தலைவர் எல்கே அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமா பாரதி, அப்போதைய உத்தரப் பிரதேச மாநில முதல்வர் கல்யாண் சிங் (தற்போது ராஜஸ்தான் மாநில ஆளுநர்) உள்ளிட்ட 21 பேர் மீது வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கானது, கரசேவகர்கள் மீது ஒரு வழக்காகவும், மூத்த தலைவர்கள் மீது ஒரு வழக்காகவும் இரண்டாக பிரிக்கப்பட்டு, ஒரு வழக்கு உத்தரப்பிரதேச மாநிலம் ரே பரேலியிலும், மற்றொரு வழக்கு லக்னோவிலும் நடந்து வந்தது. அதில், ரே பரேலி சிறப்பு நீதிமன்றம், கடந்த 2001-ஆம் ஆண்டு அளித்த தீர்ப்பில், அத்வானி உள்ளிட்ட தலைவர்கள் அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர். மற்றொரு வழக்கு விசாரணையில் உள்ளது. லக்னோ சிறப்பு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை கடந்த 2010-ஆம் ஆண்டில் அலகாபாத் உயர் நீதிமன்றமும் உறுதி செய்தது.

இதனை எதிர்த்து சிபிஐ தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அதேபோல், இரு வழக்குகளையும் ஒன்றாக விசாரிக்கவும் கோரப்பட்டது. அதன் மீது விசாரணை நடத்திய உச்ச நீதிமன்றம், பாஜக மூத்த தலைவர்கள் எல்கே அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமா பாரதி உள்ளிட்ட 14 பேர் மீதான குற்றவியல் சதித்திட்ட குற்றச்சாட்டுகள் குறித்து மீண்டும் விசாரணை நடத்த வேண்டும் என உத்தரவிட்டது.

மேலும், மறைந்த சிவசேனா தலைவர் பால் தாக்கரே மற்றும் விஹெச்பி தலைவர் ஆச்சார்யா கிரிராஜ் கிஷோர் ஆகிய இருவரும் காலமானதால், அவர்கள் மீதான வழக்கு தள்ளுபடிசெய்யப்பட்டது. அதேபோல், கல்யாண் சிங் தற்போது ராஜஸ்தான் மாநில ஆளுநராக உள்ளதால், அரசியலமைப்புப் படி, அவர் பதவியில் இருக்கும் வரை அவரை விசாரிக்கக் கூடாது எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டது. லக்னோ அமர்வு நீதிபதி முன்னிலையில் ஒவ்வொரு நாளும் விசாரிக்கப்பட வேண்டும் எனவும் அப்போது உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியது. இந்த வழக்கு அங்கு நடைபெற்று வருகிறது.

அதேபோல், சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் அளவிலான ராம்ஜென்மபூமி-பாபர்மசூதி இடம் தொடர்பாக அலகாபாத் உயர் நீதிமன்ற லக்னோ அமர்வு கடந்த 2010-ஆம் ஆண்டு தீர்ப்பு வழங்கியது. மூன்று நீதிபதிகள் அடங்கிய அந்த அமர்வில், இரு நீதிபதிகள் ஒன்றுபட்ட தீர்ப்பை வழங்கினர். அதில், சர்ச்சைக்குரிய இடத்தை மூன்றாக பிரித்து கொள்ளலாம். சன்னி வக்ஃப் வாரியத்துக்கு ஒரு பகுதி, நிர்மோஹி அக்ஹாராவுக்கு ஒரு பகுதி, ராமர் கோயில் கட்ட ஒரு பகுதியாக பிரித்துக் கொள்ளலாம் என கூறப்பட்டிருந்தது.

சர்ச்சைக்குரிய இடம் தொடர்பான அலகாபாத் உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து, பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி உள்ளிட்ட பலரும் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்களை உச்ச நீதிமன்றம் விசாரித்து வருகிறது.

இந்த வழக்குகள் குறித்து, வருகிற 11-ம் தேதி முதல் விசாரிப்பதற்காக, நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, அசோக் பூஷன், எஸ்.ஏ.நசீர் ஆகிய மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஜே.எஸ்.கெஹர் அண்மையில் அமைத்து உத்தரவிட்டார்.

இந்நிலையில், சர்ச்சைக்குரிய இடத்தில் இருந்து சிறிது தூரம் தள்ளி இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் மசூதியை கட்டலாம் என ஷியா வக்ஃப் வாரியம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து உச்ச நீதிமன்றத்தில் அந்த அமைப்பு தாக்கல் செய்துள்ள பிராமணப் பத்திரத்தில்,”பாபர் மசூதி இடம் தங்கள் வாரியத்துக்குச் சொந்தமானது எனவே இது குறித்த பேச்சுவார்த்தைக்கு உரியவர்கள் நாங்கள் தான். சர்ச்சைக்குரிய இடத்தில் இருந்து சிறிது தூரம் தள்ளி இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் மசூதியை கட்டலாம்” எனவும் தெரிவித்துள்ளது.

மேலும், பிரச்னைக்கு சுமூக தீர்வு கான வேண்டும் என விருப்பம் தெரிவித்துள்ள அந்த அமைப்பு, ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையில் குழு ஒன்றை அமைக்க வேண்டும். அந்த குழுவில், பிரதமர் மற்றும் உத்தரப்பிரதேசம் மாநில முதல்வர் ஆகியோரால் நியமனம் செய்யப்பட்ட உறுப்பினர்கள் இடம் பெற வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest India news in Tamil.

×Close
×Close