மகாராஷ்டிர மாநிலத்தில் பிறந்து ஆறே நிமிடத்தில் பெண் குழந்தை ஒன்றுக்கு ஆதார் எண் வழங்கப்பட்டுள்ளது.
ஆதார் அடையாள அட்டை என்பது இந்தியாவில் வழங்கப்பட்டு வரும் 12 இலக்க அடையாள எண் தாங்கிய அட்டை ஆகும். நாட்டின் அனைத்து குடிமக்களுக்கும் தனித்தனி அடையாள எண் வழங்குவதன் மூலம் நாடுதழுவிய குடிமக்கள் தரவுத்தளத்தை உருவாக்குவதே ஆதார் அடையாள எண் முறையின் நோக்கம்.
கண்ணின் விழித்திரை, கைரேகை போன்றவற்றுடன் சேர்த்து பெயர், முகவரி, பிற சுய குறிப்புகளும், புள்ளி விவரங்களும் இதில் உள்ளீடு செய்யப்படும். பிற அடையாள அட்டைகளிலிருந்து முற்றிலும் தனிப்பட்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. 12 இலக்க எண் பொறித்த அட்டையாக வழங்கப்படும்.
இந்நிலையில், மகாராஷ்டிர மாநிலம் ஒஸ்மானாபாத் மாவட்டத்தில் பிறந்து ஆறே நிமிடமான பெண் குழந்தைக்கு ஆதார் எண் வழங்கப்பட்டுள்ளது. கடந்த 24-ம் தேதி சரியாக நண்பகல் 12.03 மணியளவில் பிறந்த அக்குழந்தைக்கு பாவனா சந்தோஷ் ஜாதவ் என பெயரிடப்பட்டுள்ளது. தொடர்ந்து, அவரது தந்தை ஆன்லைனில் பிறப்பு சான்றிதழ் மற்றும் ஆதார் எண்ணுக்கு விண்ணப்பித்துள்ளார். பின்னர், சரியாக நண்பகல் 12.09 மணியளவில் அப்பெண்ணுக்கு பிறப்பு சான்றிதழ் மற்றும் ஆதார் எண் ஆன்லை மூலமாக வழங்கப்பட்டுள்ளது.
இந்த தகவலை தெரிவித்துள்ள அம்மாவட்ட ஆட்சியர் ராதாகிருஷ்ண கமே, இந்த சம்பவம் ஒஸ்மானாபாத் மாவட்டத்துக்கு கிடைத்த பெருமை என்று பெருமிதம் தெரிவித்துள்ளார்.
விரைவில் அனைத்து குழந்தைகளுக்கும் ஆதார் எண் வழங்கப்பட்டு, அந்த எண் அவர்களது பெற்றோரின் ஆதார் அட்டையுடன் இணைக்கப்படும் என்று குறிப்பிட்ட அம் மாவட்ட ஆட்சியர், ஒஸ்மானாபாத் மாவட்ட மகப்பேறு மருத்துவமனையில் கடந்த ஓர் ஆண்டில் பிறந்த சுமார் 1,300 குழந்தைகளுக்கு ஆதார் எண் வழங்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.