கர்நாடக சட்டப்பேரவை தேர்தல் 2018: பாஜக-வுக்கு கெட்ட சேதி; காங்.,-க்கு நல்ல சேதி

கர்நாடக சட்டப்பேரவைக்கு அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெறும் என தேர்தலுக்கு முந்தைய ஆய்வு ஒன்றில் கணிக்கப்பட்டுள்ளது.

கர்நாடக சட்டப்பேரவைக்கு அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெறும் என தேர்தலுக்கு முந்தைய ஆய்வு ஒன்றில் கணிக்கப்பட்டுள்ளது.

மொத்தம் 225 தொகுதிகளை கொண்ட கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. அம்மாநில முதல்வராக சித்தராமையா உள்ளார். கடந்த 2013-ஆம் ஆண்டு பொறுப்பேற்ற இந்த ஆட்சியின் பதவிக்காலம் வருகிற 2018-ஆம் ஆண்டுடன் முடிவடைகிறது. எனவே, கர்நாடக மாநில சட்டப்பேரவைக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெறவுள்ளது. அதில், எப்படியேனும் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்து விட வேண்டும் என்ற முனைப்பில் பாஜக பணிபுரிந்து வருகிறது.

வருகிற 2019-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலுக்கு ஒரு முன்னோட்டமாகவே கர்நாடக மாநில சட்டப்பேரவைத் தேர்தலை பாஜக எதிர் கொள்கிறதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், கர்நாடக மாநில சட்டப்பேரவை தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்பு பாஜக-விற்கு கெட்ட செய்தியாக வந்து சேர்ந்துள்ளது. சி ஃபோர்ஸ் எனும் நிறுவனம் இந்த கருத்துக் கணிப்பை மேற்கொண்டுள்ளது. கடந்த ஜூலை 19-ம் தேதி முதல் ஆகஸ்ட் 10-ம் தேதி வரை, சுமார் 165 தொகுதிகளில் வாக்காளர்கள் 24,676 பேரிடம் மேற்கொள்ளப்பட்ட கருத்துக் கணிப்பில், காங்கிரஸ் 120-132 தொகுதிகளில் வெற்றி பெறும். பாஜக 60-72 தொகுதிகளில் வெற்றி பெறும். மதசார்பற்ற ஜனதாதளக் கட்சி 24-30 தொகுதிகளில் வெற்றி பெற வாய்ப்புள்ளது என கணிக்கப்பட்டுள்ளது. அதன்படி காங்கிரஸ் 43 சதவீதமும், பாஜக 32 சதவீத வாக்குகளையும் பெறும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

குடிநீர் பிரச்னை, மோசமான சாலைகள், வேலையில்லாத் திண்டாட்டம் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் இருந்தாலும், முதல்வர் சித்தராமையாவின் மலிவு விலை உணவகத் திட்டம், மதிய உணவுத் திட்டத்திற்கு கருத்துக் கணிப்பு மேற்கொள்ளப்பட்டவர்களிடம் நல்ல வரவேற்பு இருந்தது என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

“பல்வேறு ஆய்வுகளை காங்கிரஸ் கட்சி மேற்கொண்டு வருகிறது. அது முடிந்த பிறகு, அரசின் சாதனைகள் குறித்து அனைத்து மாவட்டங்களிலும் விளக்க கூட்டங்கள் நடத்தப்படும்” என அக்கட்சியின் கர்நாடக மாநிலத் தலைவர் ஏற்கனவே தெரிவித்துள்ளார்.

அதேபோல், கர்நாடக மாநிலத்தில் மூன்று நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்ட பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா, 150 தொகுதிகளில் வெற்றி பெற பாஜக முயற்சி மேற்கொள்ளும். மீண்டும் பாஜக அரியணை ஏறும். மற்ற மாநிலங்களில் நாம் செய்தது போன்று, காங்கிரஸ் இல்லா கர்நாடகா உருவாக்கப்படும் என்றார்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil India News by following us on Twitter and Facebook

×Close
×Close